Saturday, 12 January 2013

சச்சின் ரெண்டுல்கர் - ஆசியர்களின் கர்வமான பெருமை.




காந்தியை உதைத்து வீழ்த்திய வெள்ளையரின் வழித்தோன்றல்களை, தனக்காக எழுந்து நின்று மரியாதை செய்யவைத்த  வீரன்

இன்று சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டின் துக்க நாள். அவசரமான ஒருநாள் கிரிக்கட்டைக் கூட மாசு படுத்தாமல் உண்மையாக விளையாடிய ஒரு மாவீரன் அந்த விளையாட்டில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று அறிவித்த கரிநாள் – இன்று, சச்சின் சர்வதேச ஒருநாள் கிரிக்கட்டில் இருந்து ஒய்வு பெறுகிறேன் என்று அறிவித்த நாள்.

1989ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிராக தனது சர்வதேசக் கிரிக்கட்டைத்தொடங்கிய ரெண்டுல்கர் 23 வருடங்களாக விளையாடி இன்றுவரை 463 ஒருநாள் சர்வதேசப் போட்டிகளில் 18,426 ஓட்டங்களை எடுத்து, அதில் 49 செஞ்சுரிகளையும் ( 100+ ஓட்டங்கள்) எடுத்துள்ளார். இவை எல்லாமே உலக சாதனைகள்.

உலகில் அதிக ஒரு நாள் ஓட்டங்களையும்,(18,426 ஓட்டங்கள் ) , அதிக ஒருநாள் செஞ்சுரிகளையும்,(49) அதிக ரெஸ்ற் ஓட்டங்களையும் ( 15,645 ஓட்டங்கள் ) அதிக ரெஸ்ற் செஞ்சுரிகளையும் (51) எடுத்தவர் என்ற பெருமைக்குச் சொந்தக் காரர் இவர். இந்த சாதனைகள் ஒன்றும் நடித்தோ, ஸ்ரைல் பண்ணியோ பெற்றது அல்ல. உலகின் தலைசிறந்த பந்துவீச்சாளர்களையும், மிகச் சாதுர்யமான கிரிக்கட் கப்ரன்களின் வியூகங்களையும் எதிர்த்து நின்று வென்ற உண்மையான மகா சாதனை. இனி ஒருவராலும் முறியடிக்க முடியாத சாதனைகள் இவைகள்.

இந்தியா என்ற ஒரு நாட்டை திரும்பிப்பார்க்க வைத்தவர்கள் என்று பலரைச் சொல்லுகிறார்கள் ஆனால் இதோ இந்த மனிதன் அந்த நாட்டுக்கு, ஏன் ஆசிய நாட்டவர்களுக்கே உலக அழவில் பெற்றுக்கொடுத்த பெருமையை என் கண்ணால் கண்டவன் நான்.

ஒவ்வொரு கோடை காலத்திலும் ஆஸ்திரேலியாவுக்கு வேறு நாட்டு கிரிக்கெட் அணிகள் சுற்றுப்பயணம் செய்து பல கிரிக்கெட் போட்டிகளில் ஆஸ்திரேலிய அணியுடன் மோதுவது வழமை. அவற்றில் ஒரு போட்டி கட்டாயமாக S.C.G என்று அழைக்கப்படும் சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெறும். அப்படி நடைபெறும் சர்வதேசப் போட்டிகளை, அது எந்த நாடு இங்கு வந்து விளையாடினாலும் நான் போய்ப் பார்த்து ரசிப்பதுண்டு. அப்படிப் பார்த்த போட்டிகளில் உலகின் தலைசிறந்த பல கிரிக்கெட் வீரர்கள் பங்குபற்றியிருக்கிறார்கள்.. பல தலைசிறந்த கப்ரன்கள் பங்கு பற்றியிருக்கின்றார்கள் ஆனால் அவர்கள் ஒருவருக்கும் கிடைக்காத ஒரு மரியாதை ஒரே ஒருவருக்கு மட்டும்தான் கிடைத்ததை நான் அவர் இங்கு வந்த ஒவ்வொருதடவையும் பார்த்துள்ளேன் அது STANDING OVATION என்று சொல்லப் படுகின்ற மரியாதை. அதே போன்றதான மரியாதை உலகெங்கும் அவருக்குக் கொடுக்கப் படுவதைப் பார்ப்பதற்கு கீழே சொடுக்கவும்.
http://www.youtube.com/watch?v=Wuj-rmfqeuU)

அந்த வீரர் விளையாடுவதற்கு மைதானத்துக்குள் நுழையும் போது அங்கு பார்வையாளர்களாக வீற்றிருக்கும் சிறியோர் முதல் வயோதானோர் வரை ஆண் பெண் பாகுபாடின்றி எழுந்து நின்று கைதட்டி அவரை முகமலர வரவேற்பதாகும். அந்தக் கணம் மிக உணர்வுபூர்வமானது.

அந்தக் கணத்தில் ஒவ்வொரு முறையும் எனது மனதில் ஒரு எண்ணம் தோன்றுவதுண்டு அது என்னவென்றால் ஒரு காலத்தில் வெள்ளையர்களால் தமக்குச் சமமாக ரயிலில் ஏறிவிட்டார் என்று உதைத்து வீழ்த்தப் பட்ட காந்தியின் இந்தியாவில் பிறந்த சச்சின் கத்தியின்றி இரத்தமின்றி தனது அபாரமான, நேர்மையான கிரிக்கெட் விளையாட்டின் மூலம் அதே வெள்ளையர்களின் வழித்தோன்றல்களை, அதே காந்தியின் நாட்டவரை எழுந்து நின்று கைதட்டி வர்வேற்க வைத்துள்ளாரே… இந்தப் புரட்சியை இனி எவராலும் செய்யமுடியாது என்பதாகும்.


உலகின் தலை சிறந்த கிரிக்கட் வீரரான ஆஸ்திரெலியாவின் டொன்.பிரட்மன் தனது முதுமைக் காலத்தில் ஒருமுறை ரீ.வி.யில் இந்தியாவுக்கும் ஆஸ்திரேலியாவுக்கும் எதிரான விளையாட்டைப் பார்த்துக்கொண்டிருந்த போது சிறுவயது சச்சினின் விளையாட்டைப் பார்த்து அதிசயித்து தனது மனைவியை கூவி அழைத்து இதோ இந்தப் பையன் என்னைப் போலவே கிரிக்கட் விளையாடுகிறான். என்று அதிசயப் பட்டிருந்தார். அந்தச் செய்தி பிரட்மனின் மனைவி மூலமாக வெளியே கசிந்து பல ஊடகங்கள் சேர்.பிரட்மனை சென்று அதைப் பற்றிப் பேட்டி எடுத்தன அப்படி ஒரு பேட்டியில் பிரட்மன் சச்சினைப் பற்றிக் கூறுவதைப் பார்ப்பதற்கு கீழே சொடுக்கவும்
http://www.youtube.com/watch?v=YbgYwluUkZE

இது சாதாரண விடயமல்ல. ஆஸ்திரேலியா பல கிரிக்கெட் வல்லுனர்களை உருவாக்கியுள்ளது, ஆனால் எவரையும் பிரட்மன் இப்படிப் புகழ்ந்து பேசியதில்லை. இது வஷிஷ்டர் வாக்குப் போன்றது.

ஆஸ்திரேலியாவின் முந்நாள் கப்ரனும் கிரிக்கெட் உலகின் மரியாதைக் குரியவருமான ஆஸ்திரேலியாவின் பெரு மதிப்புக்குரிய கிரிக்கெட்டர் , றிச்சி பெனோ சச்சினைப் பற்ரி கூறுவதைக் கேட்க கீழே சொடுக்கவும்.
http://www.youtube.com/watch?v=vthfSPF_LCw

ஆஸ்திரேலியாவின் சிட்னி கிரிக்கெட் மைதானத்தின் வாழ்நாள் அங்கத்தவர் என்ற கௌரவப் பட்டத்தை நியூ சவுத்வேல்ஸ் பிரீமியர் சச்சினுக்குக் கொடுத்துக் கௌரவப் படுத்தியுள்ளார். இந்தக் கௌரவம் வேறெந்த வீரருக்கும் இதுவரை கொடுக்கப் படவில்லை. அதேபோல ஆஸ்திரேலிய அரசும் தனது மிகப் பெரிய கௌரவ விருது ஒன்றை சச்சினுக்குக் கொடுத்துக் கௌரவப்படுத்தியுள்ளது.

எல்லோரும்தானே கிரிக்கெட் விளையாடுகிறார்கள்?? அதிலும் சமீபத்தில் அறிமுகமான வீரர்கள் அதிரடியாக அடித்து சரமாரியாக ஓட்டங்கள் எடுக்கிறார்கள்?? அப்படி இருக்கும்போது ஏன் சச்சின் இளைப்பாறாமல் ஆடுகிறார் என்று நீண்டநாட்களாக கேள்வி கேட்போர் இல்லாமலில்லை. அவர்கள் ஒன்றைப் புரிந்து கொள்ளவேண்டும்,

அதாவது கிரிக்கெட் 100 வருடத்துக்கு மேலாக விளையாடப் படும் ஒரு விளையாட்டு. இதில் வெவ்வேறான பந்துவீச்சுக்கு எதிராக பந்தை எப்படி அடிக்கவேண்டும் என்றும் , கால்களை எப்படி உபயோகப் படுத்தவேண்டும் என்றும் Coaching Manual எனப்படும் பயிற்சிப் புத்தகத்தில் எழுதப் பட்டுள்ளது.

ஒரு போட்டியில் பலவிதமான பந்துவீச்சுக்களை பல விதமான திறமைகொண்ட பந்துவீச்சாளர்கள் வீசுவார்கள். ஆஸ்திரேலியா தென் ஆபிரிக்கா போன்றவற்றின் வேகப் பந்து வீச்சாளர்கள் 150 km/h எனும் கணக்கில் பந்து வீசுவார்கள. துடுப்பாட்ட வீரரை பயமுறுத்தி நிலை தடுமாறச் செய்து அவுட்டாக்குவதற்காக அவரின் தலையை நோக்கி 150 கி.மி வேகத்தில் பந்து வீசுவார்கள். இதற்குத்தாக்குப் பிடிப்பது இலகுவானதல்ல. குறிப்பாக ஆசிய நாட்டுக் கலாச்சாரத்தில் வளர்ந்த ஒருவர் வேகப் பந்தை சமாளிப்பதென்பது மிகக் கடினம். ஆனால் இங்குதான் சச்சின் மற்றவர்களில் இருந்து வித்தியாசப் படுகிறார்.

அவர் இதுவரை எந்த வேகப் பந்துக்கும் பயந்ததில்லை, முக்கியமாக 150 km/ h இல் வீசப்படும் பந்தை அவர் எதிர் கொள்ளும் போதும், அல்லது Shane warne முரளி போன்ற உலக சாதனை சுழல்ப்ந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் போதும் அவரது கால்களின் பயன்பாடும் ( Legs movements ) அவர் தெரிவுசெய்யும் துடுப்பாட்டமும் (shot selection) அடிக்கும் முறையும் (technique ) அச்சொட்டாக coaching manual இல் சொல்லப்பட்டதைப் போலவே இருக்கும். பார்க்கும் போது அவ்வளவு அழகாக இருக்கும்.

இது கிரிக்கட்டின் எதிர்காலத்துக்கும் ஆரோக்கியத்துக்கும் மிக முக்கியமானது காரணம் சச்சின் ரெண்டுல்கரைப் பார்த்து கிரிக்கட் பயிலும் எதிர்கால சந்ததிமூலம்தான pure cricket என்று சொல்லக்கூடிய மாசற்ற கிரிக்கெட்டை காப்பாற்ற முடியும். தனியவே ஓட்டங்கள் மட்டும் எடுத்தால் போதும் என்று விளையாடுவோர் உண்மையான கிரிக்கெட் வீரர்கள் அல்லர். இவர்களால் கவரப்படும் இளம் சந்ததியால் உண்மையான கிரிக்கெட்டுக்கு அழிவுதான் ஏற்படும்.

இதை பாமரத் தமிழில் கூறுவதாயின் " கேக் ஒன்றை அதை வெட்டுவதற்கென்றே செய்யப்பட்ட கத்தியாலும் வெட்டலாம் அதே நேரத்தில் கோடாலியாலும் வெட்டலாம், சச்சின் ரெண்டுல்கர் கிரிக்கெட் விளையாடும் போது கேக்கை அதற்கான கத்தியால் வெட்டுவதைப் போன்றும் மற்றவர்கள் விளையாடும் போது கோடரியால் வெட்டுவதைப் போன்றும் இருக்கும் அவ்வளவுதான்.


சர்வதேச ஒருநாள் போட்டியில் இருந்து ஓய்வுபெற்றாலும் ரெஸ்ற் போட்டிகளில் சச்சின் தொடர்ந்து விளையாடுவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது. அவர் தொடர்ந்து ரெஸ்ற் போட்டிகளில் விளையாடவேண்டும். இதுதான் உலகெங்குமுள்ள உண்மையான கிறிக்கட் ரசிகர்களின் பேரவா. ஏனென்றால் சச்சின் ரெண்டுல்கரின் காலத்துக்குப் பின் இனியொரு சச்சின் இந்த நூற்றாண்டில் பிறக்கப் போவதில்லை, உண்மையான கிரிக்கெட்டை அழகாக விளையாட ஒருவரும் இருக்கப்போவதில்லை.... எனவே பாரம்பரியமான உண்மையான கிரிக்கெட் மறைந்து, T20 என்ற மாயமான் கிரிக்கெட்டை அழிக்க தொடங்கிவிடும்./
 
 

 

No comments:

Post a Comment