Monday, 1 April 2013

தமிழ்த் திரையிசையில் காணாமல் போன வாத்தியங்கள் – 2 பொங்கஸ் (Bongo Drums )









மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனின் காலத்தில் அவர் இசையமைத்த திரையிசைப் பாடல்களில் பிரபலமாகக் காணப்பட்டு காலமாற்றத்துக்கு ஏற்ப காலவோட்டத்தில் காணாமல் போன எக்கோடியன் இசைக்கரிவியைப் போன்ற இன்னொரு இசைக்கருவி பொங்கஸ்  ( Bongo Drums) ஆகும்.

பொங்கஸ் ட்றம் என்றழைக்கப் படும்  இந்த வாத்தியம் காலத்துக்குக் காலம் அதன் தோற்றத்திலும் தரத்திலும் மாற்றமடைந்து வந்தாலும் அது இசை  உலகின் மிகப் பெரிய வரலாற்றைக் கொண்டது. 19ம் நூற்றாண்டின் இறுதியில்  உருவாக்கப் பட்டதாகக் கருதப்படும் இதன் பூர்வீகம் கியூபா எனக் கணிக்கப் பட்டுள்ளது. வித்தியாசமான அழவு கொண்ட இரண்டு ட்றம்ஸ் களை ஒன்றோடு ஒன்று சேர்த்துப் பொருத்துவதன் மூலம் பொங்கஸ் வடிவமைக்கப் படுகிறது. பெரிய ட்றம் இனை ஹெம்ப்றா ( hembra) என்று அழைக்கப் படுகிறது. இது ஸ்பானிய மொழியில் பெண்பாலைக் குறிக்கும். சிறிய Drum மஹ்கோ (macho ) என்று ஸ்பானிய மொழியில் ஆண்பாலாக அழைக்கப் படுகிறது. இதன் அழவு 6 – 7inch  தொடக்கம் 7 – 8.5 inch   ஆகும்.  ( சிறுவர்களுக்காக செய்யப்படுவது அழவில் சிறியதாகக் காணப்படும் )

1900இன் ஆரம்பத்தில் கியூபாவில் வாழ்ந்த ஆபிரிக்க ஸ்பானிய மக்களால் "changui`என்ற இசைக்கு/ பாடலுக்கு இசையாக இது பயன்படுத்தப் பட்டதாதாகவும் காலப்போக்கில் அதுவே மருவி இப்போதைய சல்சா ( Salsa ) ஆகியுள்ளதாகவும் கருதப்படுகிறது.

1900 தின் நடுப்பகுதியில் இந்த வாத்தியம்,  பொங்கோ மற்றும் ஜக் கோஸ்ரன்சோ என்பவர்களால் மிகப்பிரபலமாகி உலகின் எல்லா இசைகளிலும் ஆதிக்கம் செலுத்தத் தொடங்கியது.  தற்போதும் உலகெங்கும் பிரபலமாகவுள்ள jazz ற்கு அடித்தளம் இந்த வாத்தியமென்றால் அது மிகையல்ல.





இதை இசைப்பவர்கள் தங்களின் இரு கால்களிற்கிடையிலும் தாங்கிப்பிடித்தபடியே விரல்களால் லாவகமாக  இசைக்கவேண்டும்.
1960களில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி மற்றும் கே.வி.மகாதேவன் கோலோச்சிக்கொண்டிருந்த நேரம், இந்த வாத்தியம் தமிழ் திரையிசையில் புகுந்தது.  அந்த நாளைய பல படங்களின் பாடல்களுக்கு இந்த இசை பயன்படுத்தப்பட்டிருந்தாலும் குறிப்பாக எம்.ஜி.ஆரின் பாடல்களில் அதிகளவில் இது புகுந்து விளையாடியது. எம்ஜிஆரின் படங்களில் மகிழ்ச்சியானதும், கலகல்ப்பானதும், வேகமானதுமான பாடல்கள் அதிகமாக இருந்ததனால் மகிழ்ச்சியைக் கொண்டுவரும் இந்த வாத்தியத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப் பட்டிருக்கலாம் என்பது எனது எண்ணம்.
இதன் ஆதிக்கம் பல பாடல்களில் இருந்தாலும், தெய்வத்தாய் திரைப்படத்தில் எம்ஜிஆர் சரோஜாதேவியை சுற்றி ஓடியபடி குதூகலித்து வெளிப்படுத்தும் ஒரு பெண்ணைப் பார்த்து நிலவைப் பார்த்தேன் என்ற பாட்டு பொங்கசின் அட்டகாசத்துக்கு நல்லதொரு எடுத்துக்காட்டு.

இந்தக்காலகட்டத்தில் எம்.எஸ்.வி.யின் ஆர்கெஸ்ட்ராவில் பொங்கஸ் கலைஞராக இருந்தவரின் பெயர் கணேஷ். இவர் எப்படி பொங்கசை இசைத்துள்ளார் என்பதைக் கேட்கும் போது, பலவருடங்கள் கடந்தாலும் இன்றும் உற்சாகம் கரைபுரண்டோடும்.

எம்ஜிஆரின் காதலின் போது குறும்புத்தனதுடன்  குதூகலமாக ஓடி வருவது இந்தப் பொங்கஸ் தான்.  இளமை ததும்பும் இசைக்கு விஸ்வநாதன் ராமமூர்த்தி பொங்கசைப் மிகத் திறம்படப் பயன்படுத்தியிருப்பார்கள்.

இந்தப் பாட்டின் மொத்த நீளம் 4.30 நிமிடங்களாகும். இதில் பாடலின் ஆரம்ப இசையை அட்டகாசமாகத் தொடக்கி வைப்பதே பொங்கஸ் கணேஷ் தான். அழகான எம்ஜிஆர், மிடுக்காகத்தொடங்கும் பொங்கசின் தாளத்துக்கேற்ப,  தனது கால்களால் ஆடுவது கண்கொள்ளாக் காட்சி.
( பாடலைப் பார்க்க இங்கே சொடுக்கவும் http://www.youtube.com/watch?v=ufwwcCxpz8E )
பாடல் தொடங்கிய 0.04 செக்கனில் தனது விளையாட்டை ஆரம்பிக்கும் பொங்கஸ் 0.19 செக்கன் வரை அட்டகாசமாகச்  சென்று பல்லவிக்கு வழிவிட்டொதுங்கிகிறது..

பின் முதலாவது இடையிசையில் 1.08 நிமிடத்தில் தொடங்கி, ஆடாத ஆட்டமெல்லாம் ஆடிவிட்டு 1.26 நிமிடத்தில்  மெதுவாக ஓய்கிறது. முதலாம் சரணம் முடிந்ததும், 2.19 நிமிடத்தில் பாட்டின் இரண்டாவது இடையிசையில்  மீண்டும் குதித்தோடி வரும் பொங்கஸ் எம்ஜிஆருடன் சேர்ந்து சில்மிஷம் பண்ணியபடி 2.57 நிமிஷம் வரை எமையெல்லாம் உற்சாகத்தில் கட்டிப்போடுகிறது. அது முடிவுற்று இரண்டாவது சரணம் தொடங்கும் போது காணாமல் போய் இறுதியாக சரணம் முடிந்தும் முடியாததுமாக பாய்ந்தோடி வந்து 3.46 நிமிடத்தில்  காதுகளை அணைத்துக் கொள்கிறது. அப்படியே எம்ஜிஆருடன் மீண்டும் பரிணமித்து 4.09 நிமிடத்தில் மெதுவாக வேகமெடுக்கும் பொங்கஸ், தொடர்ந்து மிக வேகமாக ஓடிப்போய் 4.30 நிமிடத்தில் பாடலின் முடிவுடனும் எம்ஜிஆருடன் மலர்ந்த முகத்துடனும் முடிந்து போகிறது.. ஆஹா அற்புதமான இசை கேட்டுப்பாருங்கள் நண்பர்களே தொலைந்து போவீர்கள்.  

அதேபோல் நாளை நமதேயில் எம்ஜிஆர் லதாவுடன் ரொமாண்டிக் பண்ணும் என்னை விட்டால் யாருமில்லையிலும் பொங்கசைத்தான் முன்நிலைப் படுத்தியுள்ளார் எம்.எஸ்.வி. தனது ஆசானின் எதிர்பார்ப்பை உணர்ந்த பொங்கஸ் கலைஞர் கணேஷும் அவரின் எதிர்பார்ப்புக்கு எந்தக் குறையும் வைக்காமல் அற்புதமாக இசைத்துள்ளார். ( பாடலைப் பார்க்க http://www.youtube.com/watch?v=nTO5U9tcNWU )

எக்கோடியனைப் போலவே 70 களின் கடைசியுடன் மெதுவாகக் காணாமல் போகத்தொடங்கி 80 களில் முற்றிலும் காணாமல் போய்விட்டது இந்த உலகின் பழம்பெரும் வாத்தியம்.

ஆனால் இந்தி இசையமைப்பாளர்களான ஆர்.டி. மற்றும் எஸ்.டி. பர்மன்கள் இறுதிவரை இந்த இசைக்கருவிமேல் எம்.எஸ்.விஸ்வநாதனைப் போலவே அதிக வாஞ்சை கொண்டிருந்தார்கள். அடிக்கடி தங்களின் பாடல்களில் பயன்படுத்தத் தவறியதில்லை.

கிட்டத்தட்ட ஒரு தசாப்தகாலமாக தமிழ் திரையிசையில் அருகிப் போகத்தொடங்கியிருந்த பொங்கசின் ஓசையை எங்களின் 80களின் பாடல்களில் அதிகமாக கேட்கமுடியாமல் மனம் வருந்தியவர்களில் நானும் ஒருவன். ஆனால் மனதின் அடிமூலையில் உலகில் Trend setter ஆக விளங்கும் இந்த வாத்தியம் மீண்டும் தமிழ் தமிழ் திரையிசைக்கு வந்து ஒரு கலக்குக் கலக்கும் என்ற எண்ணம் இருந்து கொண்டேயிருந்தது.



90களின் நடுப்பகுதி வரை இளையராஜா என்ற ஜாம்பவானால் கட்டிப்போடப்பட்டு அவரின் ஆதிக்கத்தில் சுகமான மெலடிப்பாட்டில் சங்காரித்துக் கொண்டிருந்த தமிழ் இசை ரசிகன் குடும்பஸ்தனாகி வாழ்க்கையில் பிசியாகிப்போனான்.

அந்த இடத்துக்கு புதிதாய் வளர்ந்த இளம் ரசிகனுக்குள் ஒரு மாற்றம் ஏற்பட்டது. அது, அந்த நேரத்து இந்திய அரசியல் மாற்றத்துக்கு ஏற்ப, புதிதாய் தென்னாசியாவில் புகுந்து கொண்ட எம்.ரீ.வியைப் பார்த்த பாதிப்பினால் ஏற்பட்டதாக பலர் கூறக் கேட்டிருக்கிறேன். அந்த மாற்றம் , மாற்றான் தோட்டத்து மல்லிகையான உலக இசையை ரசித்துப்பார்த்தால் என்ன என்ற எண்ணம் ஏற்பட்டதுதான்.
அதுவரை அமைதியான மெல்லிசையான தமிழ்த்திரையிசையைப் போற்றிப் புகழ்ந்தவர்களின் வழிவந்த வாரிசுகள், அட்டகாசமான கொம்பியூட்டர் இசையில் கவனத்தைத் திருப்பத் தொடங்கியதுடன் நில்லாது, உலகமயமாக்கலுக்கேற்ப உலகிலுள்ள வித்தியாசம் வித்தியாசமான இசைகளை நோக்கி எட்டிப்பார்க்கத் தொடங்கினர். இந்த வேளையில் காலமாற்றத்துக்கு ஏற்ப மணிரத்னத்தால் அறிமுகமானர் ஏ.ஆர்.ரஹ்மான்.





ரஹ்மான் அறிமுகமாகும் போது மிகச்சிறிய வயது. எனவே இளைஞர்களின் நாடித்துடிப்பை அறிவதில் அவருக்குக் கஷ்டம் இருக்கவில்லை. அதனால் அவர்களின் விருப்பத்துக்கு ஏற்ப உலகின் பல விதமான இசைச்சேர்க்கைகளையும் ,இசைக்கருவிகளையும் தமிழிசையுலகில் அறிமுகப் படுத்தினார். அப்படி அவர் jazz ஐயும் அறிமுகப்படுத்தினார். அந்தப் பாட்டுத்தான் இந்தியாவின் எல்லா மொழிகளிலும் சக்கைபோடு போட்ட முக்காலா ..முக்காபுலா.. ( முக்காலா..பாடலைக் கேட்க இங்கே சொடுக்கவும் http://www.youtube.com/watch?v=erwQhJImpfo ) இந்தப் பாட்டில் மீண்டும் பொங்கசையே போன்ற ஆனால் பொங்கசிலும் பார்க்க நவீனமானதும் பெரிதானதுமான ஒரு இசைக்கருவியை பயன்படுத்தினார் அதன் பெயர்  Tumba (drum) ஆகும். முக்காலா பாட்டுக்கு இந்த Tumba (drum) ஆற்றிய பங்கிருக்கே… அப்பாடா அதைப் பற்றி விளக்கத்தேவையில்லை, காரணம் அது உலகத்துக்கே தெரிந்த விடயம்.

இந்தப் பாட்டுப் பெற்ற அமோக வரவேற்பின் பின் மீண்டும் அனேகமான இசையமைப்பாளர்கள் பொங்கொஸ் போன்ற ஆனால் அதைவிட நவீனமான கொங்கோ, ரும்பா போன்ற இசைக்கருவிகளைப் பாவிப்பதைக் கேட்ட்கக் கூடியதாக இருக்கிறது. ஆனால் எனக்கென்னமோ எம்.எஸ்.வி. அழவுக்கு அவற்றை ஆழமாக ஒருவரும் இப்போ பயன்படுத்துவதில்லை என்ற எண்ணம் இருந்து கொண்டேதான் இருக்கிறது.



No comments:

Post a Comment