![]() |
Add caption |
இந்தியாவில் 2001இல் நடந்த பாராளுமன்ற தாக்குதலில் குற்றவாளியாகக் கணிக்கப் பட்டு மரணதண்டனைக்குள்ளான Afzal Guru,வைப் பற்றி முகநூல் நண்பர் Narayana moorthy@
யின் பதிவு கீழ்வருமாறு முடிகிறது.
அப்சலுக்கு உச்சநீதி மன்றத்தால் வழங்கப்பட்ட தீர்ப்பில், உச்சநீதி மன்ற நீதிபதி தனது தீர்ப்பில் குறிப்பிடுகிறார்,
"1. அப்சல் குரு எந்த ஒரு தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பில் இருந்தார் என்பதற்கு எந்த சான்றும் இல்லை,
2. பாராளுமன்ற தாக்குதலில் ஈடுபட்டார் என்பதற்கு எந்த வித முகாந்திரமும் ஆதாரமும் இல்லை, ஆனால்
3.இந்தியாவின் கூட்டு மனசாட்சியை திருப்திபடுத்துவதற்காக அப்சல் குருவுக்கு தூக்கு தண்டனை விதிக்கபடுகிறது" என தீர்பளித்தார்
இந்தியாவின் கூட்டு மனசாட்சி யார்?
இந்தியாவின் கூட்டு மனசாட்சி யார்??? என்ற கேள்வியுடன் முடிந்த மூர்த்தியின் பதிவு எனது மனசாட்சியை தட்டி எழுப்பியது.
Add caption |
இநதப் போரை யாருமே எதிபார்த்திருக்கவில்லை. பல்லாண்டுகளாக தாம் அடைந்துவரும் வேதனைகளுக்கு ஒரு முடிவு வந்துவிட்டது என்று எல்லோரும் மகிழ்ந்திருந்த நேரத்தில் மீண்டும் யுத்தம்.
சில மாதக் கடும் யுத்தத்தின் பின் போராளிகளின் பெரும்பான்மையானோர் காட்டுக்குள் சென்று விட்டார்கள் என்றும் அமைதிப்படையின் கட்டுப்பாட்டுக்குள் யாழ் குடாநாடு வந்து விட்டது என்றும் பேசப் பட்டது.
முழத்துக்கு முழம் இந்திய ராணுவக் காவலரண்கள். கண்ணுக்கெட்டிய தூரமெல்லாம் ஜவான்கள்.எல்லோருக்கும் எல்லோரிலும் சந்தேகம். ஆனால் போராளிகளின் தளபதிகளும் கட்டுப்பாட்டாளர்களும் யாழ்குடாவை விட்டுப் பின்வாங்கியிருந்தாலும் அவர்களின் சிறு தாக்குதல் பிரிவுகள் ஒரிருவராக செயல்படத் தொடங்கியுள்ளார்கள் என்பதை ஆங்காங்கே நடக்கத் தொடங்கிய சிறு தாக்குதல்களை பத்திரிகைகள், வானொலிகள் வாயிலாக வெளியாகத்தொடங்கின.. எதிர்வரும் காலங்கள் எவ்வளவு கொடுமையானவையாக இருக்கப் போகின்றன என்பதை யுத்தத்துக்குள் பல வருடங்களாக வாழ்ந்த ஒவ்வொரு ஈழத்தமிழனும் உணரத்தலைப்பட்டான்.
காரணம் இனிவருங்காலங்களில் ஒவ்வொரு இளைஞனையும் இளைஞியையும் இந்திய ராணுவத்தினர் சந்தேகத்துடனேயே பார்ப்பர் என்பதும், அவர்களுக்குத் தெரியாத , புதிய மொழி பேசும் மக்களை பீதியுடனேயே எதற்கும் அணுகுவார்கள் என்பதும் எவராலும் விளங்கிக் கொள்ளக் கூடிய ஒன்றுதானே.
மறு புறத்தில் தமது அமைப்பின் பெரும்பாலானவர்களையும், கட்டுப்பாட்டாளர்களையும், தளபதிகளையும் விட்டுத்தனித்து ஒரிருவராக இயங்கத் தொடங்கிய போராளிகள் எடுக்கும் முடிவுகளும் அதன் விளைவான தாக்குதல்களும் எவ்வளவு தூரத்துக்கு நிதானமானதாகவும், நியாயமானதாகவும் இருக்கப் போகின்றது என்ற கேள்வியும் யுத்தத்துக்குள் பல வருடங்களாக இருந்து அனுபவித்த ஒவ்வொரு ஈழத்தமிழனுக்குள்ளும் எழுந்தது.
நாட்டுக்குள் ஆரம்பித்த அகோர யுத்தம் படிப்படியாக காட்டிற்குள் சென்றிருந்தது. தொடர் ஊரடங்குச் சட்டத்தை அமுல் படுத்தியிருந்த அமைதிப்படை கொஞ்சம் கொஞ்சமாக அதைத் தளர்த்தி இரவு 7 மணிவரை மக்கள் நடமாடலாம் என அறிவித்தது. பல மாதங்களாக மரவள்ளிக் கிழங்கையும் சம்பலையும் இடைக்கிடை சிறிதளவு சோற்றையும் மட்டுமே உணவாகக் கொண்டிருந்த எமக்கு அது பேராறுதலாக இருந்தது. அப்போதைய அந்த இருண்ட நாட்களில் ஒரு நாள் எங்கள் ஊரின் பெரிய கோயிலில் ஆறாம் கிழமை எனும் பெருநாள் காலம் ஆரம்பித்திருந்தது.
ஆறாம் கிழமை என்பது ஒவ்வொரு ஆண்டினதும் ஆரம்ப மாதங்களில் எங்கள் ஊரின் பெரிய கோயிலில் நடக்கும் பெருநாளாகும். சிறு வயதில் இருந்தே எனக்கும் என்னுடைய நண்பர்களுக்கும் இந்த விழாக்காலம் பேரானந்தத்தை அளிக்கும் ஒன்று. விழா தொடங்கியதும் ஒலிபெருக்கிகள் கட்டப்பட்டு (Loud Speakers ) பக்திப் பாடல்கள் மற்றும் சினிமாப் பாடல்கள் என பெரிய சத்தத்துடன் அலற விடப்படும். இது பெருநாளுக்கான கட்டியம் எனச் சொல்லலாம். அந்த நாட்களில் இந்த ஒலி பெருக்கிகளின் காதைப் பிளக்கும் ஒலி கொடுக்கும் உவகையை சொல்ல வார்த்தையில்லை. பலூன் வியாபாரிகளும், விளையாட்டுப் பொருட்களை விற்பவர்களும் ,ஐஸ்கிறீம் வாகனங்களும், தும்பு மிட்டாஸ் விற்பவர்களும், கடலை முதற்கொண்ட நொறுக்குத்தீனி விற்போரும் கோயிலைச் சுற்றி, சிறு சிறு தற்காலிக கூடாரங்கள் அமைத்து அதற்குள் தமது நடைபாதைக்கடைகளை போடுவார்கள்.
எனது சிறுவயதுக்காலத்தில் அங்கே விற்கப்படும், பல வண்ணத்தினாலான காட்போட்டில் செய்யப்பட்ட கலர்க் கண்ணாடியை வாங்கி அணிவதும், நீராவியால் ஓடக் கூடிய சிறிய படகுகளை வாங்கி வீட்டில் உள்ள கிடாரத்தில் தண்ணீர் நிரப்பி, அவற்றை ஓட்டி மகிழ்வதிலும் அலாதிப் பிரியம் அடைவேன் நான்.
இளைஞர் இளைஞிகள் “கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் காதல் என்றே அர்த்தம்” என்பதை மெய்ப்பிப்பதும், கோயிலில் கொடுக்கப்படும் அன்னதானத்துக்கும் பாணுக்கும் பெரியவர்கள் முண்டியடிப்பதையும் அங்கே பார்ப்பது அலாதியான அனுபவம்.

சரி விடயத்துக்கு வருவோம்.. அகோர யுத்தத்தினை சார்ந்து அந்த ஆண்டின் ஆறாம் கிழமை வந்திருந்தபடியால் பெரிதளவில் வியாபாரிகளும் வரவில்லை, மக்களும் அவர்களை எதிர்பார்க்கும் மனநிலையிலும் இருக்கவில்லை. அப்படி எதிர்பார்ப்பு இருந்தாலும், பல மாதங்களாக ஒழுங்கான வேலைவாய்ப்பு இல்லாமல் இருந்தவர்களிடம், வாங்குவதற்குப் பணம் இருக்க வேண்டுமே. அது மட்டுமல்லாமல் கோயிலில் இருந்து சில மீற்றர் தூரத்தில் அமைதிப்படையின் முகாம் அமைக்கப் பட்டிருந்ததாலும் எது நடக்குமோ என்ற பயமும் எல்லோரிடமும் காணப்பட்டது.
பதின்ம வயதுள் நுழைந்திருந்து, வாழ்க்கையின் வசந்தத்தை அப்போதான் உணரத்தலைப்பட்ட என்னையும் எனது கல்லூரி நண்பர்களையும் யுத்தம் கட்டிப் போட்டது. பெற்றோர் வெளியே செல்லத்தடை விதித்தார்கள். நாங்கள் வீட்டுக்குள்ளேயே பெரும்பாலான நேரத்தை செலவழித்தோம். ஆனால் ஆறாங்கிழமைக்கு எப்படியாவது போவது எனத்தீர்மானித்து ஒருவாறாக நண்பர்கள் எல்லோரும் கூடி, ஒரு மாலை வேளையில் கோயிலடிக்குச் சென்றிருந்தோம். கோயிலின் வெளியே பாதிரியாரின் தலைமையில் இளைஞிகள் பூக்களால் அலங்கரித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களை நோட்டம் விட்டபடி கொஞ்சம் கொஞ்சமாக பெருக்கெடுத்த உற்சாகத்துடன் கடலை வாங்கிச் சாப்பிட்டபடி கோவிலைச் சுற்றியிருந்த வீதியால் கதைத்துச் சிரித்தபடி நடந்து கொண்டிருந்த பொழுது நண்பனொருவன் கிசுகிசுத்த குரலில் பட படப்புடன் கத்தினான்..
டேய் நில்லுங்கோடா .. அங்கை பாருங்கோடா.. கோயில் Transformer ற்குப் பக்கத்திலை ஆர் நிக்கிறாங்களெண்டு கவனியுங்கோடா.. என்றான். அவன் சொல்லி முடிக்கவும் நாம் அந்த இடத்தை அடையவும் சரியாக இருந்தது.
அங்கே மூன்று இளைஞர்கள் தங்களின் சைக்கிலை மதிலில் சார்த்தி வைத்துவிட்டு கதைத்துச் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அவர்களில் ஒருவர் எங்களின் பாடசாலையில் எமக்கு ஜூனியராக கல்விபயின்றவர் , உதைபந்தாட்டத்தில் மிகுந்த ஆர்வமாகக் காணப்பட்ட அவர் எமது கல்லூரியில் உதை பந்தாட்டத்தில் சிறந்து விளங்கிய எங்களின் நண்பர்களில் ஒருவரிடம் மிகுந்த மரியாதையுடன் பழகுவார். காலவோட்டத்தில் போராளியாகிய அவரை பல காலமாக நாம் காணவில்லை. எம்மைக் கண்டதும் சிரித்தபடியே அருகில் வந்து எனது ,நண்பனின் பெயர் சொல்லிக் கூப்பிட்டு என்னண்ணா தெரியாத மாதிரிப் போகிறீர்கள் என்றார். எனது நண்பனும் நீங்கள் ஏன்ரா இதிலை நிக்கிறியள்??? ஏதாவது செய்து கிய்து துலைக்கப் போறியளே?? அதுதான் பயமாக் கிடக்கு.. மற்றது உங்களோடை கதைக்கிறதை ஆமி பாத்தானெண்டால் துலைச்சுப் போடுவான்.. அதுதான் பேசாமல் போகிறோம் என்றான். அதற்கு அந்த இளைஞன் பெரிதாகச் சிரித்தபடி ஏனண்னை பயந்து சாகிறியள்.. நாங்கள் சும்மா நிண்டாலும் விடமாட்டியள் போல இருக்கு என்று விட்டு சரி ..சரி பயப்பிடாதேங்கோ நாங்கள் சும்மா பெருநாள் பாக்கத்தான் வந்தனாங்கள் என்றார்.
அப்பாடா எமக்குப் போன உயிர் திரும்பி வந்தது அட அவர்களும் மனிதர்கள் தானே அவர்களுக்கும் பெருநாள் பார்த்துப் பைம்பல் அடிக்க ஆசையிருக்கும் தானே .. நாங்கள் தான் தேவையில்லாமல் குழம்பிவிட்டோம் என எமக்குள் கதைத்துச் சிரித்த படி நிம்மதியுடன் எமக்கு எதிரே சைக்கிலில் வந்த ஒரு இளைஞனை விலத்தியபடி தொடர்ந்து மீண்டும் பழைய உற்சாகத்துடன் நடக்கத்தொடங்கினோம்.
ஒரு சில மீற்றர் தான் நடந்திருப்போம் எமக்குப் பின்னால் சைக்கில் ரயர் வெடித்ததைப் போன்றதொரு சத்தமும் அதைத் தொடர்ந்து சைக்கிலுடன் ஒருவர் படாரென்று விழும் சத்தமும் கேட்டுத் திடுக்கிட்டுத் திரும்பினோம். சைக்கிலுடன் விழுந்தவரை நோக்கி இன்னும் சில வேட்டுக்கள் தீர்க்கப் பட்டுக் கொண்டிருந்தது.
தொடர்ந்து அங்கே நின்று கொண்டிருந்த இளைஞர்கள் எந்தவித அவசரமோ படபடப்போ இல்லாமல் ஒரு பேப்பரை அந்த இடத்தில் போட்டுவிட்டு தமது சைக்கிலில் ஏறி சாவதானமாக சென்றுகொண்டிருந்தார்கள் . முதலில் என்ன நடக்கிறது என்பதை புரிய முடியாமல், செய்வதறியாது ஆளையாள் பார்த்துக் கொண்டு திகைத்து நின்ற நாம் ஒருவாறு சுதாரித்து அந்த இடத்தை நோக்கி ஓடோடிச் சென்றோம். அங்கே நாம் கண்ட காட்சி எங்களின் வாழ்க்கையையே புரட்டிப் போட்டது. சே இதுவெல்லாம் ஒரு வாழ்க்கையா என்று சிந்திக்க வைத்தது. அங்கே எம்மை சில நிமிடங்களுக்கு முன்னர் விலத்திச் சென்று கொண்டிருந்த இளைஞர் துடித்துக் கொண்டிருந்தார். அவர் கழுத்தில் போட்டிருந்த செபமாலை முன்னே வந்து அவரின் முகத்தில் ஊசலாடிக்கொண்டிருந்தது. அவருக்கு அருகில் போடப்பட்டிருந்த பேப்பரில் இராணுவத்தினருடன் அவருக்கிருந்த தொடர்பு காரணமாக அவருக்கு மரணதண்டனை விதிக்கப்பட்டதாக எழுதப் பட்டிருந்தது.

அங்கே
ஓடிவந்த அந்த இளைஞனின் தாய் கதறிய கதறல்.. அடுத்த நாள் வெளிநாடு போவதாக
இருந்த தனது மகன் இறுதியாக கோயிலுக்கு சென்று வருகிறேன் எனக் கூறிவிட்டு
வந்ததாகவும், ஆனால் ஆள்மாறி தனது மகன் குறிவைக்கப் பட்டுவிட்டான் என்றும்,
மாதாவே உன்னைக் கும்பிட வந்த எனது மகனுக்கு ஏன் இந்தக் கதி என
நெஞ்சிலடித்தும் கத்திய ஓலம் இன்றும் என் காதை விட்டு அகலவில்லை.. அகலாது.
இந்தக் கொடூரத்தைப் பார்த்து, வாயடைத்து, நாங்கள் நின்று கொண்டிருந்த போது கோயிலடியில் கட்டப் பட்டிருந்த ஒலி பெருக்கியில் அந்த கால கட்டத்தில் வெளிவந்து பிரபலமான, வேதம் புதிது படப் பாடலான மாட்டுவண்டி சாலையிலே பாட்டு ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. அன்றிலிருந்து அந்தப் பாட்டை எங்கே எப்போது கேட்டாலும் நடந்த அவலம் அப்படியே நினைவுவரும்.. அதிலும் அதில் வரும் வரிகளான ஓடிப்போய் சொல்லிவிட ..உயிர் கிடந்து துடிக்கிறது.. ஊமை கண்ட கனவு இது.. உள்ளுக்குள் வலிக்கிறது.. என்ற காதல் பிரிவுக்காக வைரமுத்து எழுதிய வரிகள் ஏனோ எனக்குள்ளும் வலியை.. அந்த இளைஞனின் வலியை ஏற்படுத்தத் தவறுவதில்லை. அந்த இளைஞன் இறந்திருக்க வேண்டியவனா????
இந்தக் கொடூரத்தைப் பார்த்து, வாயடைத்து, நாங்கள் நின்று கொண்டிருந்த போது கோயிலடியில் கட்டப் பட்டிருந்த ஒலி பெருக்கியில் அந்த கால கட்டத்தில் வெளிவந்து பிரபலமான, வேதம் புதிது படப் பாடலான மாட்டுவண்டி சாலையிலே பாட்டு ஒலிபரப்பாகிக் கொண்டிருந்தது. அன்றிலிருந்து அந்தப் பாட்டை எங்கே எப்போது கேட்டாலும் நடந்த அவலம் அப்படியே நினைவுவரும்.. அதிலும் அதில் வரும் வரிகளான ஓடிப்போய் சொல்லிவிட ..உயிர் கிடந்து துடிக்கிறது.. ஊமை கண்ட கனவு இது.. உள்ளுக்குள் வலிக்கிறது.. என்ற காதல் பிரிவுக்காக வைரமுத்து எழுதிய வரிகள் ஏனோ எனக்குள்ளும் வலியை.. அந்த இளைஞனின் வலியை ஏற்படுத்தத் தவறுவதில்லை. அந்த இளைஞன் இறந்திருக்க வேண்டியவனா????
ஆயிரம் குற்றவாளிகள் தப்பிக்கலாம் ஆனால் ஒரு நிரபராதி தண்டிக்கப் படக் கூடாது என்று அடிக்கடி எல்லோரும் எல்லா இடங்களிலும் சொல்கிறார்கள். அப்படியானால் மரணதண்டனை என்ற ஒன்று மனுக்குலத்துக்கு தேவையா?? ஒருவன் குற்றவாளியா சுற்றவாளியா என்பதை தீர்மானிப்பதற்கு சந்தர்ப்பம், சூழ்நிலை, பலம்,பலவீனம்,அரசியல் சூழ்நிலை, நிர்ப்பந்தம்.. போன்ற பல காரணிகள் இருக்கின்றன. ஆனால் மரண தண்டனை என்ற ஒன்று இல்லாதபட்சத்தில் ஒருவனுக்கு அநீதியாக தவறான தண்டனை கொடுக்கப் பட்டிருந்தால் அதிலிருந்து எப்பவாவது ஒருநாள் நீதியை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பம் அவனுக்கு இருக்கிறதல்லவா??.
ஒரு காலத்தில் சிவில் நிர்வாகமும் சட்ட திட்டங்களும் இல்லாமல் குழம்பிப் போயிருந்த ஈழத்தில் தான் இப்படியான சம்பவங்கள் நடந்ததென்றால் உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிலும் இது நடக்கவேண்டுமா??
எனது இந்தப் பதிவின் முடிவை, Afzal Guru விற்கான தண்டனையைப் பற்றிய மனுஷ்ய புத்திரனின் பார்வையுடன் முடிக்கலாம் என நினைக்கிறேன், :
. அப்சல் குரு வழக்கில் முக்கியமான ஆதாரங்களாக சொல்லப் படுபவை இரண்டு , ஒன்று அவரது மொபைல் போன் , இன்னொன்று அவரது மடிக் கணினி , இவை இரண்டின் கதையை கேட்டால் , நமது நீதித் துரையின் செயல்பாடும் மற்றும் காவல் துறையின் லட்சணங்கள் நமக்கு மேலும் புலப்படும் #
அதாவது அந்த இரண்டுமே அவரது கைதின் பொழுது கைப்பற்றப் பட்டதாக கூறப் படுகிறது .... பொதுவாக கைதின் பொழுது கைப்பற்றப் படும் பொருட்கள் , முறையே அதே தருணத்தில் சீல் வைக்கப் பட்டு தான் சமர்பிக்கப் பட வேண்டும் , இந்த நடைமுறை பின்பற்றப் படவில்லை , மேலும் , அவரது மடிக் கணினி ஹார்ட் டிஸ்க் கைதான தேதிக்கு பின்னரும் திறக்கப் பட்டுள்ளது என்பது நீதி மன்றத்தின் விசாரணையில் தெரியவந்துள்ளது ... அந்த மடிக் கணினியில் தான் தீவிரவாதிகளுக்கும் அப்சலுக்கும் இருந்த தொடர்பு பற்றிய விவரம் இருந்ததாகச் சொல்கிறது காவல் துறை .. இதில் நகைச்சுவை என்னவென்றால் , விசாரணைக்கு தேவைப் படும் அந்த விஷயங்களை தவிர மற்ற அனைத்தையும் அப்சல் அழித்து விட்டார் என்று நீதி மன்றத்தில் சொல்கிறது காவல் துறை .... குற்றம் செய்தவன் ஆதாரத்தை அழிப்பானா ? அல்லது ஆதாரத்தை விடுத்து மற்ற அனைத்தையும் அழிப்பானா ? என்பதை உங்கள் யூகத்திற்கே விட்டு விடுகிறேன் ...
இன்னொரு விஷயம் என்னவென்றால் , கைப்பற்றப் பட்ட மொபைல் போனில் இருந்த சிம் கார்டு மூலமாகத் தான் குரு அனைத்து தீவிரவாதிகளுடனும் தொடர்பு கொண்டார் என்கிறது காவல் துறை , அதற்காக அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்திய மொபைல் கடைக் காரர் அளித்த சாட்சியத்தின் படி அவர் அந்த சிம் கார்டை விற்ற தேதி டிசெம்பர் 4 2001 . ஆனால் , காவல் துறையின் கோப்புகளிலேயே விசாரணை அறிக்கையில் நவம்பர் மாதம் 6 ஆம் தேதி முதல் அந்த சிம் கார்டு உபயோகப் படுத்தப் பட்டுள்ளது தெரிய வந்துள்ளது .... டிசெம்பர் 4 ஆம் தேதி விற்பனை செய்யப் பட்ட சிம் கார்டு நவம்பர் 6 ஆம் தேதி 2001 முதலே எப்படி செயல் பட்டிருக்க முடியும் என்று நீங்கள் கேள்வி கேட்டால் , நீங்கள் தேசத் துரோகி ..... அவர் சாக வேண்டும் , சமூகத்தின் திருப்திக்காகவாவது அவர் சாக வேண்டும் அவ்வளவு தான் ...
நாணல் போல வளைப்பது தான் சட்டமாகுமா அதை வளைப்பதற்கு வழக்கறிஞர் பட்டம் வேண்டுமா என்கிற பாடல் வரி தான் நினைவுக்கு வருகிறது