சமீபத்தில் நடந்து முடிந்த ஆஸ்திரேலியத்தொடருடன் தனது ரெஸ்ற் மற்றும் ஒருநாள் கப்ரன் பதவியில் இருந்து விலகும் மகேல இலங்கை அணியில் இருந்து நீக்கப் பட வேண்டும் என்றும், இலங்கை கிரிக்கெட்டுடன் அவருக்கு ஏற்பட்ட மனக் கசப்புக் காரணமாக அவர் அணியிலிருந்து விலக்கப் படுவார் என்றவாறான செய்திகளை எல்லோரும் தமது விருப்பத்துக்கு ஏற்றபடி வெளியிட்டுக் கொண்டிருக்கும் இவ்வேளையில் நியாயமான அடிப்படையில் பார்த்தால், மகேல இலங்கை அணியின் சொத்தா அல்லது சொத்தையா??
1983, இல் ரெஸ்ற் அந்தஸ்து கிடைத்த பிறகுதான் இலங்கை வீரர்கள் உன்னிப்பாக வெளியுலகிற்கும், கொழும்புக்கு வெளியே வாழ்ந்த இலங்கை மக்களுக்கும் தெரியவந்தார்கள். காரணம் ரெஸ்ற் போட்டிகளின் போதான தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பு. இந்த வீரர்களில் றோய் டயஸ், அரவிந்த , அத்தபத்து, மகேல, சங்கக்கார இவர்களைத்தான் ,துடுப்பாட்ட விதிகளுக்கு ஏற்ப விளையாடும், அதாவது சரியான Batting technique இன் படி ஆடும் வீர்ர்கள் என சர்வதேச விமர்சகர்கள் கணித்துள்ளார்கள். . இதில் வெத்தமுனியின் பெயரை ஏனோ குறிப்பிடுவதில்லை. முக்கியமாக அரவிந்த டி சில்வாவின் துடுப்பாட்ட technique மிகச் சரியானதாக Coaching manual இல் உள்ளவாறே இருக்கும், அவர் இன்றுவரை உலக கிரிக்கெட்டில் மறக்க முடியாத ஒருவராக இருப்பதற்கு அவரது மாசற்ற துடுப்பாட்டமே காரணம். அந்த வகையில் மகேலாவின் துடுப்பாட்டமும் பாரம்பரியமானது, முறையானது. ஏதோ ரன்களைக் குவித்துவிட்டால் போதும் என்ற வகையில் ஆடாமல், .ஓட்டங்களை கிரிக்கெட் தியறிக்கேற்ப சரியாக எடுக்கும் ஒரு தலை சிறந்த வீரர் மகேலா.
தற்போதுள்ள சர்வதேசக் கிரிக்கெட் வீரர்களில் கிரிக்கெட்டை (முக்கியமாக ரெஸ்ற் ) கிரிக்கெட்டின் வரைமுறையுடன் விளையாடுவோர் மிகச் சிலரே அதில் சச்சின், கலிஸ் , மகேலா மற்றும் சங்கக்கார எனும் நால்வர் மிக முக்கியமானவர்கள். இவர்கள் எல்லோருமே 10.000 ஓட்டங்களுக்கு மேல் எடுத்த வீரர்கள். இதுவரையில் இவர்களின் batting average 50 ரன்கள். அப்படிப்பட்ட மகேலாவை அணியிலிருந்து நிறுத்த வேண்டும் என்போர் சொல்லும் காரணங்கள் என்ன???
கடந்த ஆண்டு அவர் விளையாடிய ரெஸ்ற் போட்டிகளில் அவரின் Batting average மிக குறைவானதாக இருந்ததும், அவரால் இலங்கையில் குவிக்கும் ஓட்டங்களுடன் ஒப்பிடுகையில் ( batt.avg 61.12 ) வெளிநாட்டில் குவிக்கும் ஓட்டங்கள் (batt.avg 39.59 ) மிகக் குறைவானதாக இருப்பதையும் முதலாவது குறைபாடாக, அவரை விமர்சிப்போர் காரணம் காட்டுகிறார்கள். உண்மைதான். ஏறத்தாழ கடந்த ஒருவருடமாக அவரது துடுப்பாட்டம் இறங்கு முகத்தில் தான் உள்ளது. அதற்குத்தனியே அவரை மட்டும் குறை கூற முடியாது. அதற்கான பல காரணங்களில் முதன்மையானது சிறீலங்காவின் ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்களின் தோல்விகளாகும்.. கடந்த சில வருடங்களாக இலங்கை அணி சரியான ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் இல்லாமல் தடுமாறி வருகிறது. அந்த இடத்துக்கு டில்ஷானுடன் சேர்ந்து விளையாடும் மற்றய வீரருக்காக இதுவரை பலரை பரீட்சித்துப் பார்த்துவிட்டார்கள் ஆனால் தகுந்த வீரரை அடையாளம் காண முடியவில்லை. இதுதான் இலங்கை அணிக்கும் அதன் வீரர்களுக்கும் ஏற்படும் தோல்விகளுக்கான முக்கிய காரணம். இதைச் சரி செய்தால் மகேலாவின் துடுப்பாட்டச் சிக்கல் தீர வாய்ப்பு இருக்கிறது. துடுப்பாடும் ஒரு வீரர்,தான் வரவேண்டிய நேரத்துக்கு முன்பு வந்து விளையாடுவதால் ஏற்படும் பிரச்சினை அது. ஏனெனில் பந்தின் அசைவு ஓவருக்கு ஓவர் மாறுபடும். எனவே நாலாவது துடுப்பாட்ட வீரராகக் களமிறங்கும் மகேலா, ஆரம்பத்துடுப்பாட்ட வீரர்கள் விரைவில் அவுட்டாகும் காரணத்தால் வரவேண்டிய நேரத்துக்கு முன்னதாகவே களமிறங்க வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகிறார். இதனால் புதிய பந்தை எதிர்கொள்ள வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாவதால், Middle order batsman ஆன அவருக்கு பெரிய சவாலாக இது இருக்கின்றது.( இதைப் பற்றிய விளக்கமான பதிவு இந்தப் பக்கத்தில் முன்பு பதியப்பட்டுள்ளது ) எனவே இதைக் காரணம் காட்டி மகேலாவை நிறுத்துவது சரியா??
அடுத்ததாக வேகமான பிச்சுக்களில் வேகப் பந்து வீச்சாளரை இவரால் எதிர் கொள்ள முடியாது என்ற குற்றச்சாட்டும் வைக்கப் படுகிறது. இது சரியான தகவலாக எனக்குப் படவில்லை. இலங்கை அணியில் வேகப் பந்து வீச்சாளர்களுக்கெதிராக விளையாடும் வீரர்களில் மகேலா முக்கியமானவர் . அவர்களுக்கெதிராக அவரின் ஹூக் ஷொட் ரிக்கி பொண்டிங்கின் ஹூக் ஷொட்டை ஒத்தது என்பதை பலமுறை கண்டு வியந்துள்ளேன். முக்கியமாக 140 கி.மீ. வேகத்தில் வரும் Short ball களை இடை வெளி பார்த்து அடிக்கும் வல்லமை (gab Placement ) மகேலாவுக்கு இருக்கிறது. இதற்கு நல்ல உதாரணம் இறுதியாக மெல்பெர்ணில் நடந்த 20/20 போட்டியில் அவரின் துடுப்பாட்டம்/.

( Mahela's perfect hook shot )
அவரது பலவீனமாக நான் கருதுவது என்னவென்றால் ஆட்டத்தின் தொடக்கத்தில் 1st slip, 2nd slip அல்லது keeper இடம் பிடி கொடுத்து அவுட் ஆவது. இது பந்தின் அசைவுகளுக்கேற்ப (out swing / Movements ) விளையாடாமையாகும். 10,000 ஓட்டங்களுக்கு மேலெடுத்த ஒருவர் தொடர்ந்து இந்த வகையில் ஆட்டமிழப்பதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை.. இந்தப் பலவீனத்தை மகேலா உடனடியாக பயிற்சியின் மூலம் சரிசெய்வாராக இருந்தால் இன்னும் பல ஆயிரம் ரன்களை எடுப்பார் என்பதில் ஐயமில்லை.,

( Mahela Jayawardene edges a catch to Virender Sehwag at slip )
இலங்கை வீரர்களில் அனேகமானோர் இளம் வீரர்கள். அவர்களின் முதல் ஓரிரு ஆட்டங்களைப் பார்த்துவிட்டு நூற்றுக்கணக்கான இனிங்சுகளை விளையாடி பல வருடமாக தனது Avg இனை 50ற்கு மேல் வைத்திருந்த மகேலாவின் இடத்தை அவர்களால் நிரப்ப முடியும் என நினைப்பது நகைப்புக்கு உரியது. அதுமட்டுமல்லாமல் சர்வதேசக் கிரிக்கெட் விளையாடும் அணிக்கு மனப் பலம், மற்றும் ஊடகங்களை வெற்றிகரமாக சமாளிக்கும் திறமை, இக்கட்டான நேரங்களில் பொறுப்பாக முடிவெடுக்கும் சாணக்கியம் போன்றவையும் இன்றியமையாதவை. இவை மகேலாவுக்கு கைவந்த கலை, இதற்கான நல்ல எடுத்துக்காட்டு, கடைசியாக மெல்பேர்ணில் நடைபெற்ற 20/20 போட்டியாகும். இந்தப் போட்டியில், மெல்பெர்ணின் வேகப் பந்துப் பிச்சில், வேகப் பந்து வீச்சாளர்களுக்கு எதிராக சிறப்பாக , பொறுப்பாக விளையாடி 61 ஓட்டங்கள் எடுத்ததோடல்லாமல் கடைசி ஓவரின் கடைசிப் பந்துவரை எவர் வெற்றி பெறுவார்கள் எனத் தெரியாத பரபரப்பான நேரத்தில், இளம் கப்ரன் மத்தியூசுக்குத் துணையாக நின்று, ஆஸ்திரேலிய வீரன் மக்ஸ்வெல்லின் வாய்த்தர்க்கத்துக்கு முற்றுப் புள்ளி வைத்ததோடல்லாமல் . இலங்கை பந்து வீச்சாளர் திசர பெரேராவை நிதானமாக பந்துவீச வைத்ததற்கும், அதன் மூலம் கிடைத்த வெற்றிக்கும் முழுமுதற்காரணம் மகேலாவும் அவரது சர்வதேசக் கிரிக்கெட் அனுபவமும தான்.
இவையெல்லாவற்றையும் தாண்டி மகேலாவுக்குள்ள இன்னொரு சிறப்பம்சம் அவர் தன்னை இரு இனங்களுக்கும் பொதுவானவராக காட்டிக் கொள்வது. அவர் வெளிநாட்டில் நடைபெறும் போட்டிகளின் முடிவில் பொது மொழியான ஆங்கிலத்திலேயே உரையாற்றுவார். ஒரு போதும் இனவேறுபாட்டையோ, மத வேறுபாட்டையோ தனது நடவடிக்கைகளில் காட்டாத உண்மையான வீரர் . இது இலங்கையர்கள் எல்லோருமே அவரை விரும்புவதற்கான இன்னொரு காரணம்.
சர்வதேசக் கிரிக்கெட் அனுபவம் சிறிதுமற்ற இளம் வீரர்கள் பலரைக் கொண்ட இலங்கை அணிக்கு மகேலாவின் பிரசன்னம் குறைந்தது அடுத்த இரு வருடங்களுக்கு மிக முக்கியம்.
கடைசியாக மெல்பேர்ணில் நடந்த போட்டியில் மகேலா வாய் மூட வைத்தது ஆஸ்திரேலிய வீரரை மட்டுமல்ல அவருக்கு எதிரான விமர்சனங்களையும் தான் !!!

No comments:
Post a Comment