Thursday, 7 February 2013

உலகை இன்னும்.. இன்னும் இன்னும் ரசிக்க வைக்கும் ராஜாவின் பாடல்கள்-




நெஞ்சில் நிறைந்தவை - 2



 நண்பர் ஒருவர் இசைஞானியின் பாடல்களைப் பற்றி என்னிடம் கேட்ட கேள்விக்குப் பின் சற்றே சிந்தித்துப் பார்த்தேன். இசைஞானியின் பாடல்கள் எங்கள் வாழ்வின் ஒவ்வொரு அத்தியாயத்துடனும் எவ்வளவுதூரம் பின்னிப் பிணைந்துள்ளன என்பதையும், அந்த மாமனிதன் தனது தொழிலின் நிமித்தம் அந்தப் பொக்கிஷங்களை எமக்காகத் தந்திருந்தாலும், அவற்றை எவ்வளவு சிரத்தையுடன் உருவாக்கியுள்ளார் என்பதையும், சும்மா ஏனோதானோவென்று அவற்றை உருவாக்கவிலை என்பதையும் உணர்ந்தபோது அவர்மேல் இருந்த மரியாதை இன்னும் அதிகரித்தது.

அவரின் ஒவ்வொரு பாடல்களின் மெட்டுக்களில் மட்டுமல்லாமல் அவற்றின் தொடக்கத்தில் வரும் ஆரம்ப இசையிலும், இடையிசையிலும், அந்தப் பாடல்கள் இடம்பெற்ற படத்துக்காக அவர்போட்ட பின்னணி இசையிலும் உள்ள நேர்த்தி, எனக்குத் தெரிந்த, வேறு எந்த இசையமைப்பாளர்களிடமும் நான் காணாத ஒன்று.

மனிரத்னம் யாரென்று தெரியாத காலத்தில் வந்த படம் மௌனராகம். இந்தப் படத்தில் வரும் காட்சி ஒன்றில்: மனதால் ஒத்துப்போகாத இளம் தம்பதிகளான மோகனும் ரேவதியும் காதலின் சின்னமென அழைக்கப்படும் தாஜ்மஹாலைப் பார்க்கச் செல்கின்றனர். இரவுப் பொழுதில் , குளிருக்காகப் போடப் பட்ட நெருப்பு வெளிச்சத்தில் தாஜ்மகாலைப் பார்க்கத் தொடங்கும் போது ராஜா ஒரு பின்னணி இசையைப் போட்டிருப்பார். சொல்வதற்கு வார்த்தைகளே இல்லை. அதன் பின் மனம் ஒன்றுபடாத இளம் தம்பதிகள் தாஜ்மஹாலைப் பார்த்துக் கொண்டிருக்கும் போது அவர்களுக்கு அருகில் இருக்கும் நாடோடிகள் விரகத்துடன் பாடும் பாட்டொன்று, தாஜ்மஹாலுடன் சேர்ந்து இந்தத்தம்பதிகளுக்கு ஏற்படுத்தும் மாறுபட்ட மன உணர்வுகளைக் காட்டுவதாக இந்தப் பாட்டு இருக்க வேண்டியதன் அவசியத்தை மணி ராஜாவிடம் கூறியுள்ளார் அந்தக் காட்சிக்கு ஏற்றதான பாட்டை ராஜா உருவாக்கிய விதத்தை.அப்பப்பா.. என்னவென்று சொல்வது..எப்படிச் சொல்வது?? எனக்குப் புரிந்ததை ஏதோ கீழே கிறுக்கியுள்ளேன்.

இரவு நேரத்தில், குளிரில், புதிதாகத்திருமணமான ஆனால் மனதால் வேறுபட்ட‌ தம்பதி, காதலின் உச்ச சின்னமான தாஜ்மஹாலைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அந்தப் பெண்ணோ தனது காதலனைப் பறிகொடுத்துவிட்டு வேறுவழியில்லாமல் குடும்ப சூழ்நிலையால் திருமணமாகி வந்துள்ளாள். தாஜ்மஹாலைப் பார்க்கும் போது, இள‌ம் காதலனைப் பறிகொடுத்திருந்த அவளுக்கு ஏற்படும் மனப் பிறள்வுகளையும், அவளது இளம் கணவனுக்கு எற்படக்கூடிய மனப் போராட்டங்களையும் தத்ரூபமாக இசைஞானி தனது இசைமூலம் வெளிக் கொணர்ந்திருப்பார்.


 

 பாடலின் தொடக்கத்தை ஒரு புல்லாங்குழல் இசை தொடக்கி வைக்கும். இந்தப் புல்லாங்குழல் சாதாரண புல்லாங்குழல் இசையைப் போலில்லாது வித்தியாசமானதாக.. கொஞ்சம் கடின ஒலி உள்ளதாக இருக்கும். இதற்கான காரணம் எதுவாக இருக்கும் ?????

சாதாரணமாக புல்லாங்குழலானது மிக மென்மையான ஒலியைக் கொடுக்கக் கூடியது. கேட்கும் போது நெஞ்சில் ஒரு அமைதியையும் சுகத்தையும் ஏற்படுத்தக் கூடியது. மனிதனின் சந்தோஷ‌ உணர்வுகளைக் தூண்டக் கூடியது. ஆனால் இந்தப் பாடல் இடம்பெறும் சூழ்நிலையோ வித்தியாசமானது. காதலனைப் பறிகொடுத்துவிட்டு அன்னியனுக்கு வாழ்க்கைப் பட்ட ஒரு பெண்ணும், திருமணமாகியும் பிரம்மச்சாரியாக, தனது இள‌ம் மனைவியின் துன்பத்தைப் புரிந்துகொண்ட வனாக வாழும் அவளது கணவனும் தாஜ்மஹாலுக்கு முன் குளிர் இரவில் நெருப்புக் காய்ந்துகொண்டு இருக்கும் போது மகிழ்ச்சியான புல்லாங்குழல் இசையைப் பாவித்தால் அந்தக் காட்சிக்கும் பாட்டுக்கும் தொடர்பில்லாமல் போய் காட்சியே அடிபட்டுப் போய்விடும். ஆனால் அதேநேரத்தில் அருகில் பாடுபவர்களின் விரகத்தையும் தாஜ்மஹாலையும், அது ஏற்படுத்தும் மன உணர்வையும் காட்டுவதற்கு புல்லாங்குழலிசை இன்றியமையாதது. இதற்காக ராஜா எடுத்த முடிவுதான் இந்த வித்தியாசமான, சோகத்துடன் கூடிய தாபத்தை ஏற்படுத்தும் புல்லாங்குழல் இசையென நான் நினைக்கிறேன்,

அதைத் தொடர்ந்து ஒலிக்கும் பொங்கஸ் இசையும் அதைத்தொடர்ந்து பொங்கஸ் இசையுடன் ஒட்டிக் கொண்டு தொடங்கும் கோரசும் பாடலிற்கான சூழ்நிலைக்கு எம்மைத்தயார் படுத்திவிடும். அதன் பின் எஸ்.பி.பி.யும் ஜானகியும் ஒரு விதமான தாபத்தை குரலில் கொண்டுவந்து பாடும் அழகிருக்கே சூ..ப்பர். அதிலும் பாலு தனது குரலில் ஏற்ற‌மும் இறக்கமும், மோகமும் தாபமும் என பல உணர்ச்சிகளைப் பிர‌வாகிக்க விட்டுள்ளார்.

இந்தப் பாட்டில் ராஜா தபேலவோ, மிருதங்கமோ பயன்படுத்தவில்லை என நினைக்கிறேன், பொங்கஸ் என்ற வாத்தியத்தை மட்டுமே முழுப் பாடலிலும் மிக அருமையாகப் பயன்டுத்தியுள்ளார்.
முதலாவது இடையிசையை பல வயலின்களின் சங்கமத்தோடு ஆரம்பிக்கும் ராஜா அதைத்தொடர்ந்து கிட்டாரை இசைக்கச் செய்து அந்தச் சூழ்ச்நிலையை மனதுக்குள் கொண்டு வந்து என்னவோ செய்யவைக்கும் போது அந்தக் கிட்டாருக்கு பின்னணியாக வயலின்கள் மெதுவாக ஒலித்துக் கொண்டிருக்கும்.. ஆஹா... என்ன ஒரு ஞானம்.. இது மனதை எங்கோ கொண்டு சென்றுவிடுகிறது.

முதலாவது பல்லவி தொடங்கியதுமே எங்கிருந்தோ மீண்டும் வந்து சேரும் பொங்கஸ் பாலுவையும் ஜானகியையும் கட்டிக் கொண்டு செல்லுவது அவ்வழவு அழகு. இந்தச் சரணத்தில் பாலு தனித்து வாழ்ந்தென்ன லாபம் தேவையில்லாத தாபம் என்ர வரிகலைப் பாடும் போது தாபம் என்ற வரியில் தாபத்தை அப்படியே வழிய விடுகிறார். அடுத்து வரும் ஜானகி தனிமையே போ.. இனிமையே வா... என்று பாடும் போது நான் எங்கோ தனிமையில் இருப்பதைப் போலவே சத்தியமாக உணர்கிறேன்.. அப்படி ஒரு பாஃவம், அந்த ஏக்கததை ஜானகி தன் குரலில் கொடுக்கிறார். இதில்தான் ராஜா பாலு ஜானகி என்ற இனிமேல் கிடைக்க முடியாத வெற்றிக் கூட்டணியின் தனித்துவம் தெரிகிறது. ராஜா என்ற இசைஞானியை, அப்படியே இவர்கள் தங்கள் குரலில் வெளிக்கொணர்கிறார்கள்.



ஆரம்பத்தில் சோகமான சுகத்தைத் தரக் கூடிய புல்லாங்குழலைப் பயன்படுத்திய ராஜா இரண்டாவது இடையிசையில் சாதாரண புல்லாங்குழலைப் பயன்படுத்துகிறார். பாடலின் தொடக்கத்தில் நாயகனுக்கும் நாயகைக்கும் இருந்த மன இறுக்கம் பாடலின் பாதிப்பால் குறைவடைந்து இருவரும் ஒருவரின் தவிப்பை மற்ரவர் புரிய எத்தனிக்கிறார்கள் என்பதைக் காடௌவதற்காகவே ராஜா அதைப் பயன் படுத்தியுள்ளார். இதை கச்சிதமாக உண‌ர்ந்து மணிரத்னமும் ஒளிப்பதிவாள‌ர் ஸ்ரீராமும் அந்தக் காட்சியை ராஜாவின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப ப‌டமாகியிருக்கிறார்கள்.

இரண்டாவது சரணத்தின் முதல் வரிகளான காவலில் நிலை கொள்ளாமல்.. தாவுதே மனசு என்று பாடும் போது தாவுதே என்ற வரிகளை பாலு எப்படிப் பாடுகிறார் என்று கேட்டுப் பாருங்கள் நண்பர்களே.. அந்தக் குரல் உணர்ச்சிகளின் உச்சம். அதற்கு சோடைபோகாமல் ஜானகி பாடி முடித்ததும், ஆசை கொல்லாமல் கொல்லும் அங்கம் . தாளாமல் துள்ளும் என்று பாடும் எங்கள் பாலு அங்கம் என்னும் போது அங்..கம் என்றும் துள்ளும் எனும் போது துள்.. என்பதை மிக மென்மையாகவும் மெதுவாகவும் உச்சரித்துவிட்டு ..ளும் என்பதை மட்டும் சாதாரணமாக உச்சரிப்பார். சரணத்தின் இறுதியில் வரும் வரிகளான விரகமே.... ஓ...ர்.. நரகமோ.. சொல்.. என்ற வரியில் பாலு புகுந்து விளையாடியிருப்பார் .. அற்புதம். இந்த வரிகளில் விரகத்துடனும், தாபத்துடனும் கூடிய குரலை பாலுவிடம் நீங்கள் கேட்கலாம்.


நண்பர்களே கேட்பதற்கு இது ஒரு சிறிய விடயம்.. பொடி சங்கதி என்று சொல்வார்கள் ஆனால் இந்தச் சங்கதிகள் அந்தப் பாட்டின் அர்த்தத்துக்கும் அது அமைந்த சூழ்நிலைக்கும் கொடுக்கும் கொடுக்கின்ற கனம் இருக்கிற‌தே அதுதான் முக்கியம்.. அங்குதான் இசைஞானியினதும் பாலுவினதும் இடத்தை இனிமேல் ஒருவராலும் நிரப்ப முடியாது என்ற உண்மை தொக்கி நிற்கிறது. காரணம் இது சொல்லிக் கொடுத்தோ பயிற்சியாலோ வருவதல்ல .. இதுதான் ஞானம்.

இந்தப் பாட்டில் நடித்த ரேவதியை சமீபத்தில் ரிவி பரிசளிப்பொன்றில் பார்த்தபோது முதுமை தெரிந்தது. மோகனும் விக் போட்டு நடித்தும் எடுபடாமல் தொலைந்து போய்விட்டார். பாடலுக்கு ஆடிய ஜான் பாபுவும் வயோதிபராகி முடி கொட்டி ஒய்வெடுக்கிறார் ஆனால்.... ராஜாவின் இந்தப் பாட்டு மட்டும் ஒவ்வொருமுறை கேட்கும் போதும் புதிதாக இருக்கிறது. இசையின் சூட்சுமங்களை புரியவைக்கிறது.
இந்தப் படம் வந்து 26 வருடங்கள் இருக்கலாம்.. ஆனால் இந்த இசை இப்போதைய இளம் இசை. 26 வருடங்களுக்கு முன்னேயே இதைக் கொடுத்த இசைப் பிதாவை என்னவென்று சொல்வது????

பாடலைக் கேட்டுப்பாருங்கள் நண்பர்களே. ( இங்கே சொடுக்கவும் http://www.youtube.com/watch?v=gFm3UdTKCgQ )
இசையை மேலோட்டமாக ரசிப்பதற்கும் அதன் சூட்சுமத்தை அறிந்துகொண்டு ரசிப்பதற்கும் நிறைய வேறுபாடு உண்டு. எமக்கெல்லாம் கிடைத்துள்ள ஒரு பெரும் இசைச் சமுத்திரம் இசைஞானி. அவர் இதுவரை படைத்துள்ள ஒவ்வொரு பாட்டுக்களிலும் தனது ஞானத்தை நுணுக்கமாக உட்புகுத்தியுள்ளார். தான் ஏன், எதற்காக,எப்படி, பிரத்தியேகமான இடங்களில் பிரத்தியேகமான இசைக் கருவிகளையும், இசையையும், சிலவேளைகளில் அமைதியையும் பயன்படுத்தியுள்ளார் என்பதை அவராக ஒவ்வொன்றாக விளங்கப் படுத்திக் கொண்டு இருப்பது நடைமுறை சாத்தியமற்றது. நாமாகத்தான் அதைப் புரிந்துகொண்டு ரசிக்கவேண்டும். அப்படிப் புரிந்து ரசிப்பவர்கள் பெரும் பாக்கியவான்கள். அந்தப் பாக்கியவான்களில் அடியேனும் ஒருவன் என்பதில் பேருவகையும், ஆனந்தமும் எனக்கு.

No comments:

Post a Comment