80களில் ராஜா, ராஜாங்கம் நடாத்திய காலத்தில் வந்ததும், மணிரத்னத்தின் முதல் தமிழ்ப் படமுமான பகல் நிலவு என்ற படத்துக்காக இசைஞானி படைத்த பொக்கிஷங்களில் ஒன்றுமான பூமாலையே..தோள் சேரவா.. என்ற அற்புத மெலடியைப் பற்றி நண்பர் கானா பிரபா இட்ட பதிவுக்கு கருத்திட விழைந்தேன் ..ஏனோ தெரியவில்லை கருத்திட முடியவில்லை. எனவே எழுதியதை வீணாக்குவானேன் என எண்ணி அதனை எனது பக்கத்தில் பகிர்கிறேன்.
80களில் எங்கும் ராஜா.. எதிலும் ராஜா என்றிருந்த காலத்தில் பதின்ம வயதில் இருந்தவர்கள் கொடுத்துவைத்தவர்கள். ராஜா கைவைத்த எல்லாமே பொக்கிஷங்கள். அதில் தாய்க்கொரு தாலாட்டு என்ற படத்தில் இடம்பெற்ற இசைஞானியும் சித்திராவும் பாடிய காதலா.. காதலா ..கண்களால் என்னைத்தீண்டு என்ற பாட்டிருக்கிறதே அப்பப்பா .. அதைப் பற்றிச் சொல்லிக் கொண்டே போகலாம்.
பாட்டின் தொடக்கம் ஒரு தொகையறா போன்றது. அது சித்திராவினுடையது. அவர் காதலா.. காதலா ..என்று உச்சரிக்கும் இரண்டு தடவையும் வித்தியாசமான பரிமாணத்தை தனது குரலில் கொண்டு வந்திருப்பார். முதல் முறை காதலா எனும் போது சாதாரணமாகவும் இரண்டாம் முறை அதே காதலா .. எனும் போது ஏக்கத்தையும் தனது குரலில் கனியவிட்டு நம்மையெல்லாம் பித்துப்பிடிக்க வைக்கும் சித்திராவுக்கு பதிலாக இசைஞானி காதலி.. காதலி கண்களால் எனைத்தீண்டு என்று விட்டேந்தியாக பாடி சித்திராவின் கூப்பிடலுக்கு முக்கியத்துவத்தை ஏற்படுத்திக் கொடுப்பார். அடுத்த வரியான காதல்.. ஒரு வேதம்.. கண்கள்.. அதை ..ஓதும் என்று ஏங்கும் சித்திரா, அதை மென்மையாகவும் அதே நேரத்தில் அழுத்தம் திருத்தமாகவும் பாடும் போது அந்தக் குரலில் காதலுடன் சேர்ந்ததொரு காமத்தை இழையோட விட்டிருப்பார். .. அதைத்தொடர்ந்து இசைஞானி, ஒரு கோயில் மணியோசையை மட்டும் இசையாகக் கொடுத்து பின் புல்லாங்குழலுடனும் தபேலாவுடனும் தனது இசை ராஜாங்கத்தை தொடர்ந்து அவற்றின் முடிவில் பல வயலின்களை ஒன்று சேர்ந்து ஆலாபனை செய்து முதல் சரணத்துக்கு பிள்ளையார் சுழி போடவைப்பார். கேட்கும் போது அவ்வளவு சுகமாக இருக்கும். .
முதலாவது சரணத்தை இசைஞானி ,` நீ...ரோடையின் ஓ..சையில் உந்தன் பேரைக் கே..ட்கிறேன்.. பூ..ஞ்சோலையின் பூ..க்களில் உன்னை நா..னும் பார்க்கிறேன் என்று பாட அதற்குச், சித்திரா போட்டியாக தே..வனே உன்..னிலே என்னை தே..டிப் பா..ர்க்கிறேன், நீ.. விடும் மூ..ச்சிலே, நா..னும் கொஞ்சம் வா..ழ்கிறேன் என்பார் இது ராஜாவுக்கு நெத்தியடியாக இருக்கும். விடுவாரா ராஜா அவரும் அடுத்த வரியான என் தே..வியே உன் பே..ச்சிலே ஏ..தோ இசை கேட்கிறேன் என்று முடிப்பார். இதில் என் தேவியே என்பதை அழுத்தி சுகமாகப் பாடும் இசைஞானி முடிவில் ஏதோ இசை கேட்கிறேன் எனும் போது பின்னணி இசை எல்லாவற்றையும் நிறுத்தி கொஞ்சலும் ஏக்கமுமாகப் பாடுவார்.. ஆஹா..ஆஹா.. என்னவொரு பாவம் ராஜாவுடன் சேர்ந்து.. சித்திரா பின்னிப் பெடலெடுத்திருப்பார்.
(பாடலைக் கேட் இங்கே சொடுக்கவும்)
http://www.youtube.com/watch?v=twpQjSruwh0
இதே போலவே இரண்டாவது இடையிசையின் தொடக்கமும் புல்லாங்குழ்லின் எக்கோவுடன் தொடங்கி வயலின்களின் குழுமம் தொடர்ந்து சென்று அமைதியான காற்றின் ஓசையை மட்டுமே இறுதி இசையாக்கி நிறுத்துவார் இசைஞானி. அதைத் தொடர்ந்து முதல் சரனத்தில் ராஜா தொடங்கியதற்குப் பதிலாக இரண்டாவது சரணத்தை சித்திரா கண்ணா.. என்ற ஏக்கக் கூவலுடன் ஆரம்பிப்பார் . இப்படியே நெஞ்சை அள்ளிச் செல்லும் இந்தப் பாட்டிற்கு இசைஞானி பெரும்பாலான இடங்களில் பாவித்திருப்பதெல்லாம் தபேலா,வயலின் புல்லாங்குழல்,கிற்றார், பேஸ்கிற்றார் மற்றும் டோலக் மட்டுமே. எந்தக் கொம்பியூட்டரும் கிடையாது, இங்கிலாந்தின் இசைக்குழுவும் கிடையாது, சிம்பொனி இசை வல்லுனர்கள் கிடையாது, மும்பாய் ஒலிப்பதிவுக்கூடம் கிடையாது.. ஐந்து நட்சத்திர ஹொட்டேலில் தங்கி கொம்போசிங் செய்யவு மில்லை. இதுதான் ஞானம். இயற்கையின் கொடை.
![]() |
இந்தப் பாட்டை எங்கே எப்போ கேட்டாலும் 80கலின் நடுப்பகுதியில் யாழ்ப்பாணம் ஸ்ரீதர் திரையரங்கிற்கும் விக்னா ரியூசன் சென்ரருக்கும் அருகில் இருந்த வீனஸ் ரெக்கோடிங் பார் தான் நினைவு வரும் .
80களின் நடுப்பகுதியில், போருக்கு முந்திய யாழ்ப்பாணத்தில் நண்பர்கள் நாங்கள் விக்னாவுக்கு வார விடுமுறை ரியூசனுக்கு போகின்றபோது வகுப்பு தொடங்குவதற்கு ஓரு மணி அல்லது அதற்குக்கும் முன்பாக யாழ் நகர் சென்று, வெலிங்டன் திரையரங்கிற்கு நேரே முன்னால் இருந்த ரவர் ரீ அன் கூல் பாரில் ஒரு பிளேன்ரியும் வடை அல்லது றோளும் சாப்பிட்டுவிட்டு, அங்கிருந்து வெவ்வேறு இடங்களில் இருந்து பஸ்ஸில் வரும் நண்பர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து கூத்தும் கும்மாளமுமாக நடந்து சென்று , வீனசுக்கு முன் ரயில்வே கடவைக்கு அருகில் இருந்த குட்டிச் சுவர் ஒன்றிலும் ஏனையோர் கைவிடப்பட்ட பழம் விற்கும் வண்டில் ஒன்றிலும் ஏறி இருந்துகொள்ளுவோம்.
. அங்கிருந்தபடியே வீனஸில் ஒலிக்க விடப்படும் புதிய பாடல்களை நண்பர்களாகச் சேர்ந்து கேட்டு ரசிப்பதில் அப்படி ஒரு குஷி எங்களுக்கு. படிக்கவென்று செல்லும் நாங்கள் இந்தப் பாடல்கலைக் கேட்ட பாதிப்பில், ஏதோவொரு இனம் புரியாத சுகத்துடனும், அமைதியுடனும், கனவுகளுடனும் தான் வகுப்புக்குள் செல்வோம். உள்ளே சென்றால் வாத்தி படிப்பித்துக் கொண்டிருக்கும் போது இந்தப் பாடல்களைப் பற்றிய பிரமையே மனதுள் ரீங்காரமிடும். பிறகென்ன .. வாத்தி தன்ரை பாட்டுக்கு லெக்சர் அடிச்சுக்கொண்டிருக்க அது எமக்கெல்லாம் செவிடன் காதிலை ஊதிய சங்குதான். ம்ம் நினைவழியா நாட்கள் அவை.
அந்த நேரத்தில் கேட்டு, இன்றும் நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் பாடல்களில் இதுவும் ஒன்று. இன்று இந்தப் பாட்டைக் கேட்கும் போது , இன்றுகூட வயிற்றுக்கும் தொண்டைக்கும் உருவமில்லா ஒரு உருண்டை வந்து அடைப்பதையும் அந்தக் கால யாழ்ப்பாணம் கண்ணுக்குள் மின்னி மறைவதையும் தடுக்க முடியவில்லை. இந்த எனது அனுபவம் யாழ்ப்பாணத்தின் 80ன் நடுப்பகுதி ரீன் ஏஜ்ஜுக்கள்... சத்தியாக் கட் வெட்டிக் கொண்டு திரிந்தவர்கள் எல்லோருக்கும் ஏற்பட்டிருக்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை எனக்கு
![]() |
Add caption |
No comments:
Post a Comment