Wednesday, 16 January 2013

ஏன் என்ற கேள்வி இங்கு கேட்காமல் வாழ்க்கை இல்லை.






ஆரம்ப பாடசாலைக்கு சென்றிருந்த மகளை அழைத்துவரப் போயிருந்தேன்.பாடசாலையால் வெளியில் வரும்போது முகத்தில் மகிழ்ச்சியும் கையில் சிறு பரிசுப் பொருட்களுமாக வந்தாள். காரில் ஏறியதும் இன்று தனது வகுப்பில் தான் கேட்ட கேள்வியை ஆசிரியை பாராட்டி சக மாணவர்களை கைதட்ட சொன்னதாகவும், பின்பு பிரின்சிபாலிடம் அனுப்பப்பட்டு அவரும் வாழ்த்துக்களை தெரிவித்து உற்சாகப் படுத்தியதுடன் பரிசுப் பொருட்கள் கொடுத்ததாகவும் காட்டினாள். முகத்தில் பெருமிதம் குடிகொண்டிருந்தது. இருக்காதா பின்னே..அடுத்து அவள் கேட்ட கேள்வி, அப்பா, உங்கடை ரீச்சர் உங்களுக்கு எப்பவாவது பரிசு தந்திருக்கிறாவா?
நினைவுகள் பின்னோக்கிப் பாய்கின்றன,நான் ஓ.எல் படித்துக்கொண்டிருந்த காலமது. படித்ததோ கத்தோலிக்க பாடசாலை. கத்தோலிக்க குருமார்தான் Rector (அதிபர்) ஆகவும் Wise Rector (உப அதிபர்) ஆகவும் எப்போதுமே பணிபுரிவார்கள். அங்கு கத்தோலிக்க கன்னியாஸ்திரிகளும் கல்வி கற்பித்துக்கொண்டிருந்தார்கள். அது எனது பதின்ம வயதாகையால் கண்டதையும் கற்க பண்டிதனாவாய் என்பதற்கமைய ஆனந்த விகடன் குமுதம் தாண்டி சுடர், மல்லிகையுடன் பெரியார், மற்றும் கே.டானியல் போன்றவர்களை படிக்கத்தொடங்கி உலகத்தை உண்மையாக பார்க்கத்தொடங்கி இருந்தேன். இவர்களில் முதன்மையானவர் கே.டானியல்.
கே.டானியல் கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்டு தாழ்த்தப் பட்ட மக்களுக்காக உழைத்த ஒருவர். வாழ்வில் தான் பெற்ற அனுபவங்களை உண்மையுடன் எழுதி மக்களை சிந்திக்க வைக்க முயன்று பல வாதப் பிரதிவாதங்களின் மையமாக்கப்பட்டவர். மனிதர்கள் எல்லோரும் சமமானவர்கள் அவர்களில் ஏற்றத்தாழ்வு இல்லை என்ற கொள்கையுடன் இறுதிவரை வாழ்ந்தவர். பஞ்சமர் என்ற சொற்பதத்தை இல்லாதொழிக்க வேண்டுமென்றே பஞ்சமர் என்ற மிகப்பிரபல்யமான நாவலை, தனது அனுபவங்களின் ஊடாக எழுதி பெரும் எழுச்சியை ஏற்படுத்தியவர். 70 களில் தாழ்த்தப்பட்டோர் கோயிலுக்குள் சென்று கும்பிடுவது எழுதாத சட்டமாக தடைசெய்யப்பட்டிருந்த அந்தக் காலகட்டத்தில், அந்தத் தடை மனித சந்ததிக்கு விரோதமானது என்றும் ,எல்லா மக்களும் சரிசமமாக கோயில் வழிபாட்டில் பங்கெடுக்கும் உரிமையுள்ளவர்கள் என்பதை வலியுறுத்தியும் ஆலயப் பிரவேசப் போராட்டங்களை முன்னின்று நடாத்தி சிறை சென்றவர். ( சிறையில் அவருடன் ஒரே செல்லில் ஒன்றாக சிறைவைக்கப் பட்டிருந்தவர் 70 களின் தென்னிலங்கை கிளர்ச்சியின் போது கைது செய்யப்பட்ட ஜே.வி.பி.தலைவர் ரோகண விஜேவீர .) அதேபோல் தாழ்த்தப்பட்டோருக்கு தேனிர்கடைகளிலும், அவர்களின் வேலைத்தலங்களிலும் தேனீர் போன்ற குடிவகைகளை சிரட்டைகளிலும், பேணிகளிலும், போத்தல்களிலும் கொடுக்கும் காட்டுமிராண்டித்தனத்தை இல்லாதொழிக்க வெகுண்டெழும்பி அவற்றிற்கு எதிரான போராட்டங்களில் ஈடுபட்டு, அதில் கணிசமான வெற்றியும் பெற்ற ஒரு போராளி. ( அவரின் கராஜுக்கு எவர் போனாலும் அவர் எந்த இனமானாலும்,எந்த சாதிமானாக இருந்தாலும் ஒரே மாதிரித்தான் கவனிப்பு இருக்கும். எல்லோரும் இருப்பது ஒரே வாங்கு மற்றயது, போத்தலில் பிளேன்ரீ ) தீண்டாமை ஒழிப்பு வெகுஜன இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவர் .தனது எழுத்துக்கள் மூலம் தீண்டாமை எனும் கொடுமைக்குள்ளாகி பாமர மக்கள் பட்ட பாடுகளையும், படும் வேதனைகளையும், அவர்கள் என்னென்ன வகைகளில் சுரண்டப்படுகிறார்கள் என்பதையும் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தியவர். இதன் மூலம் அடக்குபவர்களின் அறியாமையையும், அடக்கப்படுபவர்களின் உணராமையையும் வெளிக்கொணர்ந்து அடக்குபவர்களை வெட்கப்படவும், அடக்கப்பட்டவர்களுக்கு விழிப்புணர்ச்சி ஏற்படவும் வழி வகுத்தவர்., பஞ்சமரின் பஞ்சமாபாதக நிலையை அவர்களுக்கு உணரச் செய்து, அதற்கெதிராக போராடுவதற்கும் தனது பேனாவை ஆயுதமாகப் பாவித்த ஒரு சமத்துவ வாதி. மதங்கள் மனிதரிடையே மூடப் பழக்க வழக்கங்களை எப்படி உருவாக்குகின்றன என்பதையும் அதன் மூலம் வர்க்க பேதங்களும் இனக்குரோதங்களும் வளர்வதற்கு எந்தவகையில் துணைபோகின்றன என்பதையும் தனது பேச்சிலும் எழுத்திலும் வெளிப்படுத்தியவர்.
அந்த நேரத்தில் நான்படித்த டானியலின் ஒரு நாவல் ( போராளிகள் காத்திருக்கின்றனராக இருக்கலாம்) கிறிஸ்தவ கடலோரக் கிராமத்தை மையப்படுத்தி எழுதப்பட்டிருந்தது. அந்த நாவலில் வரும் ஒரு சம்பவத்தில் ஊரின் கிறிஸ்தவ குருவானவர் கடவுளின் பிரதிநிதியாக நோக்கப்படுபவர், ஊரில் நடக்கும் நிகழ்வு ஒன்றில் கடவுளின் மேன்மையையும், பெருமைகளையும் பிரசங்கிக்கிறார். இவையெல்லாவற்றையும் பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த வயோதிபர் ஒருவர் அப்பாவியாக குருவானவரிடம் ஒரு கேள்வியைக் கேட்கிறார்

கேள்வி இதுதான்.
வயோதிபர் – சுவாமி ! மோட்சத்திலை (சொர்க்கம்) கெட்ட எண்ணம் சிந்தனைகளே இல்லையே ???
குரு – மோட்சம் கடவுளின் இடம் , அங்கு கெட்ட எண்ணத்துக்கோ சிந்தனைக்கோ இடம் இல்லை.
வயோதிபர் – அப்பிடியெண்டா சம்மனசுகள் (தேவதூதர்கள்) பிசாசாக மாறினதுக்கான காரணம் என்ன..
இப்படியானதொரு கேள்வியை பாமர வயோதிபரிடம் இருந்து எதிர்பார்க்காத குருவானவர் பதில் சொல்லமுடியாமல் திண்டாடுகிறார் ஏனென்றால் பைபிளின் பழைய ஏற்பாட்டில், மோட்சத்தில் எந்தவித கெட்ட எண்ணங்களோ அதற்கான சந்தர்ப்பங்களோ இல்லையென்று ஒரு இடத்திலும், தேவதூதர்களாக இருந்தவர்கள் தலைமைத்துவப் போட்டியால் பொறாமைக்கு உள்ளாகி கடவுளால் சாத்தானாக சபிக்கப் பட்டதாக இன்னோர் இடத்திலும் கூறப்படுகிறது. எனவே இந்த முரண்பாட்டைத்தான் அந்த வயோதிபரின் பாத்திரத்தில் டானியல் கேட்பதாக அந்தக் கதை செல்கிறது. இந்தக் கதையை படித்த மாத்திரத்தில் எனக்குள் ஒரு குடைச்சல்.. ஏதோ புரிந்தமாதிரியும் இருக்கிறது குழப்பிய மாதிரியும் இருக்கிறது எனவே இந்தச் சந்தேகத்தை எப்படியாவது தீர்ப்பது என முடிவெடுத்தேன்.

எமது கல்லூரியில் G.C.E O/L வகுப்பில் கிறீஸ்தவம் ஒரு பாடமாக இருந்தது. அதை படிப்பிப்பவர் ஒரு கன்னியாஸ்திரி. எனவே அவரிடம் இந்தக் கேள்வியைக் கேட்பது என்று முடிவெடுத்தேன். அதற்கு இரு காரணங்கள்.
1) இப்படியான கேள்வி கேட்பதால் என்னை புத்திசாலியென அவர் பாராட்டுவார், எனும் அதிகப் பிரசங்கித்தனம்.
2) உண்மையிலேயே இந்தக் கேள்வி என்னை புடம் போடத்தொடங்கியது. அதுவரை ஒரு ஞாயிறு பூசையை கூட தவற விடாமலும், கோயில் பாடகர்குழாமில் அங்கத்தவனாகவும்,கோயில் சம்பந்தப் பட்ட வேலைகளில் முன்னுக்கு நிற்பவனும் மிகுந்த கடவுள் பக்தி உள்ளவனுமாக இருந்த எனக்கு பைபிளின் நம்பகத்தன்மையில் சிறு சந்தேகத்தை ஏற்படுத்தியது. ( பதின்ம வயது இளைஞர்களுக்கு இப்படியான சந்தேகங்கள் வருவது இயற்கைதானே )

வழமைபோல அன்றும் எமது கன்னியாஸ்திரி ஆசிரியை வகுப்புக்குள் நுழைந்து பாடத்தை ஆரம்பித்தார். எனக்கோ ஆர்வக் கோளாறு. மனம் பதை பதைத்தது.எப்படியாவது இந்தக் கேள்வியைக் கேட்டுவிடவேண்டுமே.. பொறு மனமே..பொறு.. என துடிப்புடன் காத்திருந்த அந்தச் சந்தர்ப்பமும் வந்தது….
சிஸ்டர்.. இது நான்,
கரும்பலகையில் எதையோ எழுதிக்கொண்டிருந்த சிஸ்டர் திரும்பிப்பார்க்காமலேயே என்ன தம்பி என்றார்..
ஒரு கேள்வி.. இது நான் ..
என்ன கேள்வி.. எரிச்சலுடன் சிஸ்டர்..
மோட்சம் புனிதமானதா?? இந்த உலகத்தைப் போல கெட்ட சிந்தனைகள் ,எண்ணங்கள், போட்டிகள் இல்லையா?? இது நான்..
இதைத்தானே இத்தனை வருஷமாப் படிப்பிக்கிறம்.. நீங்களும் படிக்கிறியள்.. இப்ப வந்து கப்பல் பாக்க விட்ட சேவகன் மாதிரி பாலர் வகுப்புக் கேள்வியெல்லோ நீர் கேட்கிறீர்..நீர் O/L exam வேற எடுக்கப் போறீர்..பாஸ் பண்ணின மாதிரித்தான். இது எரிச்சலும் நையாண்டியுமாக எமது ஆசிரியை (சிஸ்டர்) இதைக் கேட்டு முழு வகுப்புமே விழுந்து விழுந்து சிரித்தது.
எல்லோரது சிரிப்பும் அடங்கியவுடன் நான் மீண்டும் கேட்டேன், அப்போ சம்மனசுகள் எனப்படும் இறைதூதர்கள் எப்படி சாத்தான் ஆனார்கள்????

வகுப்பில் ஈயாடவில்லை.. மாணவர்கள் என்னையே பார்த்தார்கள்.. தன்னை நிதானப் படுத்திய சிஸ்டரின் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடித்தது.. என்ன கேட்டனி.. எப்படி இப்படியொரு கேள்வியை நீ கேட்கலாம்?? இது நீயாகக் கேட்கவில்லை உன்னிடம் உள்ள சாத்தான் தான் கேட்கிறது வா முன்னுக்கு எனக் கூப்பிட்டு தன்னிடம் இருந்த பிரம்பு முறிந்து முடியுமட்டும் அடியோ அடி எனக்கு அப்படியொரு அடி. அதன் பின்னும் ஆத்திரம் தீரவில்லை அவருக்கு. கல்லூரியின் பியூனைக் கூப்பிட்டு அவருடன் எமது Rector (அதிபர்) இன் office இற்கு அனுப்பிவிட்டு நடந்தவற்றை குருவான அவரிடம் விலாவாரியாக அழுவாரைப் போலே சொன்னார். அதைக் கேட்டதும் கதிரையில் இருந்து துள்ளி எழும்பிய Rectorம் என்னை ஆத்திரத்துடன் பார்த்துவிட்டு ( சாத்தான் வந்தால் அப்படித்தான் பார்ப்பார்கள் ) முழங்காலில் இருக்குமாறு பணித்துவிட்டு அவரிடம் பிரத்தியேகமாக இருக்கும் பிரம்பினால் புடித்தாரே ஒரு புடி.. அப்பாடா அதை இன்று நினைத்தாலும் தூக்கம் வராது. அடி பின்னிப் பெடலெடுத்துவிட்டார்…அதன் பிறகு பாடசாலையில் கேள்வியாவது.. கேட்பதாவது.
ஆனால் என்ன ஆச்சரியம், அந்த ஆண்டில் எமது கல்லூரியில் G.C.E. O/L பரீட்சையில் கிறிஸ்தவ சமயத்துக்கு தோற்றியோரில் மிகச் சிலருக்குத்தான் அதிகூடிய புள்ளியான Distinction (D) கிடைத்தது, அதில் நானும் ஒருவன். அதுவரை ஞாயிறுப் பூசையை தவற விடாது, பயபக்தியோடு கோயிலுக்கு போன ஒரு பக்தன் ( நான் ) ஒரு நாள் தன்னும் அங்கு வாசிக்கும் வாசகங்களையோ சடங்குகளையோ சட்டை செய்ததில்லை. ஆனால் இந்த கேள்வி கேட்ட அனுபவத்துக்குப் பிற்பாடு, ஒவ்வொரு பூசையிலும் வாசிக்கும் வாசகங்களின் நப்பகத்தன்மையையும் உண்மைத்தன்மையையும் கிரகிக்கத் தொடங்கினேன்.. கேட்கக் கேட்க ,, கிரகிக்க கிரகிக்க அவற்றின் மீதிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை குறைந்து டானியலும், பெரியாரும் அதிகளவில் ஈர்க்கத்தொடங்கினார்கள்.

தற்போதய நாட்டு நடப்பைப் பார்க்கும் போது நான் அடிக்கடி சிந்திக்கும் விடயம் ஒன்று உண்டு. அதாவது எமது அரசியல் / நாட்டுத் தலைவர்கள் ஆசிரியர்களிடம் படித்தார்களோ இல்லையோ ஆனால் ஒன்றை மட்டும் அவர்களிடமிருந்து பய பக்தியுடன் பின்பற்றுகிறார்கள் அது.. எவனாவது எதிராகக் கேள்வி கேட்டாலோ, புத்திசாலித்தனமாகக் கேள்வி கேட்டாலோ தலைவர்களுக்குப் பிடிப்பதில்லை. ஆசிரியார்களாவது அடியுடன் விட்டார்கள் ஆனால் தலைவர்கள் !!!!

வளர்ந்து பெரியவனாகிவிட்டேன், இனி ஒருவரும் அடிக்க மாட்டார்கள் என்ற துணிவில் சமீபத்தில், சிறுவயது முதலே பரிச்சயமானவரும், தற்போது கிறிஸ்தவ குருவாக இருப்பவருமாகிய ஒருவரை நீண்ட நாளக்குப் பின் சந்தித்தபோது மிகவும் நட்புடன் அவர் என்னுடன் உரையாடிக்கொண்டிருந்தார். எனவே அந்தத் துணிவில் அதே கேள்வியை மெதுவாகக் கேட்டேன்.. என்னை ஒரு மாதிரியாக பார்த்த அவர்.. நீர் என்ன குதர்க்கக் கேள்வி கேட்கிறீர் ?? இப்படியெல்லாமா பகிடி விடுவார்கள்?? என்றுவிட்டு அந்த Topic ஐயே மாத்தி வேறு கதை கதைக்கத்தொடங்கிவிட்டார்.

பாடசாலையில் கேள்விகேட்டதால் எனக்குக் கிடைத்த இந்தப் பரிசை எனது சின்ன மகளுக்கு சொல்லி அந்தப் பிஞ்சு உள்ளத்தை வேதனைப் படுத்த முடியுமா?? எனவே இருக்கவே இருக்கிறது நம்ம தல கவுண்டமணி சிரிப்பு அந்தச் சிரிப்புடன், அவளின் கேள்விக்கு பதில் சொல்லாமலேயே, அவளை சமாளித்துவிட்டேன். வேறு வழி??

No comments:

Post a Comment