
தற்போது முகப்புத்தகங்கள்,டுவிட்டர்
மற்றும் ஊடகங்களில் முதன்மைச் செய்தியாக அடிபடுவது இசைஞானி இளையராஜா, வரும் கார்த்திகை
3ம் திகதி கனடாவில் நடாத்த உள்ள நிகழ்ச்சி தேவையா இல்லையா என்பதைப் பற்றியதுதான். தமிழன்
என்பதற்கப்பால் ஈழத்தமிழனுடனான ராஜாவின் உறவு எப்படியானது..??? ஒரு ஈழத்தமிழன் என்ற
வகையில் ராஜா எனது வாழ்க்கையுடன் எவ்வளவு தூரம் பின்னிப் பிணைந்து இருக்கிறார் என நினைத்துப்
பார்க்கிறேன் :
எனக்கு விபரம் தெரிய, என்னுடைய வாழ்க்கையில்
ராஜா அறிமுகமான நாள் மறக்க முடியாத நாள்.
.
அப்போது
நான் சிறுவன் எனது தாயாரிற்கு
திடீரென்றும், அடிக்கடியும் காலில் ஏற்படும்
வலியை பரிசோதிப்பதற்கு
, அவரை யாழ்ப்பாணம்
பெரியாஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்லுமாறு எனது தந்தைக்கு ஆலோசனை கூறினார்
குடும்ப டாக்டர் மணியண்ணை. யாழ் வைத்திய சாலைக்கு புறப்பட்ட எனது பெற்றோர்களுடன்
என்னையும் கூட்டிச்
செல்லுமாறு அழுது
அடம் பிடித்த என்னை,
வேறு வழியின்றி தம்முடன் வைத்தியசாலைக்குக் கூட்டிச் சென்றார் அப்பா. அது
யாழ்ப்பாணத்தின் மிகப் பெரிய, அரச,
போதனா வைத்தியசாலை. எப்போதும் கூட்டத்துக்குக் குறைச்சலில்லை. வைத்தியர் கூப்பிடும் வரை வெளியே சில
மணிநேரமாவது காத்திருக்க வேண்டும். அம்மா வைத்தியரின் அழைப்புக்காக காத்திருந்த
அந்த வேளையில், அந்த
வைத்தியசாலையின் முன்பக்கத்தில் சீமெந்தில் கட்டப் பட்டிருந்த வாங்கில்
என்னை கூட்டிச் சென்று
அமர்த்திவிட்டு தானும் அமர்ந்திருந்தார் அப்பா.
அப்போது
அந்த வாங்கின் அருகே ஒரு பெட்டிக்கடையின்
முகப்பில் சிறு நூல் ஒன்றைக்கட்டி
அதில் தமிழ்
சினிமா பாடல்கள் அச்சடிக்கப்பட்ட காகிதங்களை ஒன்றாக்கி அவற்றுக்கு பாட்டுப்புத்தகம் எனப் பெயரிட்டு விற்றுக்
கொண்டிருந்தார்கள். அந்தக் காலத்தில் சிடிக்கள்
கண்டுபிடிக்கப் படவில்லை,.ரெக்கோட்டுக்கள், ஒலிபெருக்கியில்
பாடல்களைப் போடுவதை தொழிலாக கொண்டிருந்தவர்களிடமும்,
கிராமபோன் வைத்திருந்த ஒரு சிலரிடமுமே, இருந்தது.
ரேப் ரெக்கோடர்கள் ,கசற்றுக்கள் பெரும் தனவந்தர்களிடம்
இருந்திருக்கலாம். அவற்றைப் பற்றிய போதிய அறிவு எனக்கு அப்போது
இல்லை. புதிதாக வெளிவரும் பாடல்கள்
அறிமுகமாவது பாட்டுப் புத்தகங்களால் தான்.
அக்காலத்தில், யாழ்ப்பாணத்தில் டேவிட்
லிகோரி எனும் அச்சகம் இந்தப்
பாட்டுப் புத்தகங்களை அடிப்பதில் மிகப் பிரசித்தம்.
தமிழ் திரைக் கதாநாயகர்களின் படத்தை
முன்பக்கத்தில் போட்டு அச்சடிக்கும் இந்தப்
பாட்டுப்புத்தகங்கள் தான் அப்போதைய யாழ்ப்பாண இளைஞர்களின் சிடிக்கள். எனது
ஜீவா
சித்தப்பா ( நந்தினி சேவியரின் சம வயது மச்சான் /நண்பன் ) இந்தப் பாட்டுப் புத்தகங்களை
சேர்த்து வைப்பதில் கில்லாடி. அவை அவரின் மிகப்
பெரிய சொத்துக்கள். எனது
சித்தப்பாவுக்கு அவற்றில் ஏற்பட்ட ஈர்ப்பை பார்த்ததாலும்,
அவற்றை பொக்கிஷங்களைப் போல அவர் சேர்த்துவைத்திருந்த அழகினாலும் எனக்கும் அந்தப்
பாட்டுப் புத்தகங்களின் மேல் ஒரு லயிப்பு. எனவே எனக்கு
முன்னே கைக்கெட்டும் தூரத்தில் ஆடிக்கொண்டிருந்த அவற்றை வாங்கித்தரும்படி
அப்பாவிடம் அடம் பிடித்தேன்.
பலருக்கு முன்னால் மானத்தை வாங்கியதாலோ என்னமோ
அப்பாவும் வேறு வழியின்றி, அந்த
நேரத்தில் பரபரப்பாகவும் அதிகளவிலும் விற்பனையாகிக் கொண்டிருந்த ஒரு
பாட்டுப் புத்தகத்தை வாங்கித்தந்தார். அது
நடிகர் சிவகுமாரின் தோழுக்கு மேலால் பார்த்துச் சிரித்துக்கொண்டிருந்த,
சுஜாதாவை அட்டையாகப் போட்டிருந்த அன்னக்கிளி
படப் பாடல்கள்.

எனக்கு,
அந்தப் பாட்டுக்கள்
அன்னியமாகப் படவில்லை, அதற்கான காரணம் அந்த நேரத்தில் அவை இலங்கையில் மிகப் பிரபலமாகி, வானொலியில் அடிக்கடி ஒலிபாரப்பாகிக் கொண்டிருந்ததாக இருக்கலாம்.
அவற்றைத் திருப்பித் திருப்பிப் பார்த்தும், படித்தும், பாடியும் கொண்டிருந்தபோது வைத்தியசாலையின் பிரதான வாயிலில் பெரும்
பர பரப்பு. இலங்கை போக்குவரத்து
சபைக்கு சொந்தமான பஸ் ஒன்று ஒருநாளும்
இல்லாதவகையில் முக்கி முனகியபடி வைத்தியாசாலைக்குள்
நுழைந்ததுமட்டுமல்லாமல் பஸ்சுக்குள் இருந்து சிறியவர் பெரியவர்,
பெண்கள் என பல தண்ணீரில்
நனைந்த உடல்களை ஸ்ரெச்சரில்
ஏற்றி உள்ளே அனுப்பிக் கொண்டிருந்தார்கள். அந்த
இடமே அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருந்தது. மண்டைதீவுப்
பாலத்தை உடைத்துக் கொண்டு கடலுக்குள் பாய்ந்து
விபத்துக்குள்ளான, இன்னொரு பஸ்சில் பயணித்தவர்களையே
கொண்டு வந்துள்ளார்கள் என்றும் அந்த விபத்தில்
பலர் காயப் பட்டும் சிலர்
இறந்தும் போனார்கள் என்றதுமான செய்தியைக்
கேட்டு அந்தச் சுற்றாடலே ஸ்தம்பித்துப் போனது..
|
யுத்தத்துக்கு
முந்தைய அன்றைய யாழ்
நகரில் அந்த இழப்பு அன்றைக்கு, கோரமானதாகவும்
மிகத்துக்ககரமானதாகவும் இருந்தது.
இன்றுகூட எங்காவது அன்னக்கிளி பாடல்களைக்
கேட்கும் சந்தர்ப்பம் ஏற்படும் போது அந்தக் கோரவிபத்து நினைவுக்கு வருவதைத் தவிர்க்கவியலவில்லை.
இதுதான் இளையராஜாவுடனான எனது முதல் அனுபவம்.
அதற்குப்பின் பால
பாடசாலைப் பருவம் செந்தாழம் பூவில் வந்தாடும் தென்றல் என்மீது மோதுதம்மா.. பாலர் பாடசாலைக்கு
(தமிழ் பள்ளிக்கூடத்துக்கு) வேண்டா வெறுப்பாக சென்றதையும், பாடசாலை முடிந்து ஆடிப்பாடி
வீடுதிரும்பும் வழியில், பெரிய கோயிலடியில் பாடசாலையில் எமக்குத்தந்த பிஸ்கற்றுக்களை
காகங்களுக்கும் புறாக்களுக்கும் போட்டுவிட்டு வேடிக்கை பார்ப்பதும் பின்பு சிறிது தூரத்திலுள்ள
அடுத்த கோயில் வளவிலுள்ள மாங்காய்களை கல்லால் அடித்து விழுத்த முயற்சித்த அந்த சின்ன
வயதுக்குறும்புகளை மீட்டு வந்து மனதில் குறுகுறுப்பை ஏற்படுத்தும் அந்தப்பாட்டை தந்தவரும்
இசைஞானி தான்.

வாலிப வயதில் செய்த
கூத்துக்கள் தான் எத்தனை.. உயிர் நண்பன் தனது ஒருதலைக் காதலை வெளிப்படுத்த வழிதெரியாது
தவித்த நேரமது, அவன் பட்ட சிரமத்தை பார்த்துவிட்டு நண்பர்கள் நாங்கள் ஒரு முடிவெடுத்தோம்
அதன்படி அவன் விரும்பிய பெண் சைக்கிலில் கல்லூரிக்குப் போகும் அந்த அதிகாலையில் அவள்
போகும் பாதையின் வேலித்தடுப்புக்கு மறுபக்கம் நின்றுகொண்டு எமது நண்பனின் மன ஆதங்கத்தை
அவளுக்கு புரிய வைக்க நாம் சேர்ந்து பாடிய பாட்டு, இதயக் கோவில் படத்தில் இடம் பெற்ற
நான் பாடும் மௌன ராகம் கேட்க வில்லையா.. இதில் நான் என்று ஆரம்பிப்பதற்குப் பதிலாக
எங்கள் நண்பனின் பெயரை உல்டா பண்ணியிருந்தோம். இன்று எங்காவது அந்தப் பாட்டைக் கேட்கும்போதெல்லாம்
அந்தச் சம்பவம் நினைவு வந்து சங்கடப் படுத்துகிறது., தற்போது வேறு ஒருவரைத் திருமணம்
செய்துள்ள அந்தப் பெண்ணை, என்றாவது ஒருநாள்
மீண்டும் சந்திக்கும் போது அவளை எப்படி எதிர்கொள்வது ?? என்ற கேள்வி எழுந்து பாடாய்
படுத்துகிறது. அந்தப் பெண், எமது நண்பர்கள் எல்லோரைப் பற்றியும் எமது அந்தப் பாட்டைப்
பற்றியும் தனது கணவனுக்கு சொல்லிச் சொல்லி சிரிக்காமலா இருந்திருப்பாள் ?? இப்படியான,
பருவ வயதில் மனதை பாதித்த சம்பவத்தை நினைவுக்கு கொண்டுவருவதும் ராஜாவின் பாடல்தான்.


இந்திய
ராணுவம் யாழ்ப்பாணம் வந்திருந்த காலம். ஒருவருமே விரும்பியிராத யுத்தம் மீண்டும் தொடங்கிவிட்டது..
ஏன் எதற்கு என்று சாதாரண பொதுமக்களால் ஜீரணிக்க முடியாமல் தவித்துப் போனோம். ஒரு அதிகாலையில்
பொதுமக்கள் எல்லோரையும் அவர்களின் வீடுகளை விட்டு வெளியேறி கோயில்களிலும் பாடசாலைகளிலும்
தஞ்சமடையுமாறும் சில மணித்தியாலங்களில் ஊரடங்குசட்டம் போடப்படவுள்ளதாகவும் ஹெலிக்கொப்டர்
விமானத்தில் இருந்து துண்டுப்பிரசுரம் மூலமும் வானொலி ஊடாகவும் இராணுவம் அறிவித்தது.
நடக்கப்போவது என்னவென்று தெரியாமல் அந்த சின்ன வயதில் நண்பர்கள் எல்லோரும் ஒன்றாக கூடிய
சந்தோஷத்தில், கோயிலடியில் இருந்து நாமெல்லோரும் பாடிய பல பாடல்களில் நான் பாடியது,
பாடு நிலாவே படத்தில் இடம்பெற்ற மலையோரம் வீசும் காற்று.. மனதோடு பாடும் பாடல் கேட்குதா..
கேட்குதா. பாட்டும், கேலியும். கிண்டலுமாக இருந்த எமது சந்தோஷம் ராணுவம் வந்து பதின்ம
வயது இளைஞர்கள் எல்லோரையும் வரிசையாக முகமூடி போட்ட, தலையாட்டி ஒருவர்முன் நிற்கவைக்கும் வரைக்கும்தான், சந்தேகப்
பட்ட எல்லோரையும் தலையாட்டி எனப்படும் அந்தக் காட்டிக் கொடுப்பவர் ராணுவத்திடம் மாட்டிவிட்டு
விட்டார், அதில் எல்லோருமே அப்பாவிகள் சிலர் எனது வகுப்புத்தோழர்களும், உறவினர்களும்
கூட. அன்று அந்த அப்பாவிகள் பட்ட துன்பம்,சித்திரவதை கொஞ்சமா..நஞ்சமா. அக்காலகட்டத்தில்
நான் மிகவும் விரும்பிய மலையோரம் வீசும் காற்று
என்ற அந்தப்பாட்டை, அன்றைய துன்பமான சம்பவத்துக்குப் பின் எங்கே எப்போது கேட்டாலும்
பாட்டுடன் அன்றைய அப்பாவிகளின் அழுகையும் என் காதில் நாராசமாக ஒலிக்கிறது.. இந்தப்
பாட்டைத்தந்தவரும் ராஜா தான்
உயர்
வகுப்பு ரியூஷனுக்கு யாழ் நகரத்துக்கு செல்வதென்றால் கொண்டாட்டம் தான், சனி ஞாயிறுகளில்
இளைஞர்களும் இளைஞிகளுமாக ஒரே மினிபஸ்சில்
சந்தோஷமாக பயணிக்கும் போது குறும்புக்கார
ஓட்டுனர் இளைஜர்களுக்கான பாட்டுக்களைப் போட்டு அந்த சூழ்நிலையை மேலும் கல கலப்பாக்குவார்.
அப்படி எங்களின் 788 இலக்கப் பாதையில் ஓடிய H.A.R. என்ற பஸ்ஸில் அடிக்கடி போடப் பட்ட
பாட்டுக்கள் கீதாஞ்சலி மற்றும் முதல் மரியாதை பாட்டுக்கள். முதல் மரியாதையில் வைரமுத்துவுடன்
ராஜா இணைந்து தந்த வெட்டிவேரு வாசத்தை இப்போ கேட்கும்போதும் அந்த பஸ்சில் அன்று பயணம்
செய்த அதே உணர்வுதான் ஏற்படுகிறது.. அந்த மானிப்பாய் சண்டிலிப்பாய் வீதிகள், கடைகள்,
சந்தைகளென எல்லாமே நினைவு வந்து புத்துணர்ச்சியை ஏற்படுத்துகிறது..
காரணம் இசைஞானியின் அந்த அற்புத மெட்டும், அதில் அவர் கையாண்டுள்ள இசைக்கருவிகளும் தான்,
![]() |
காரணம் இசைஞானியின் அந்த அற்புத மெட்டும், அதில் அவர் கையாண்டுள்ள இசைக்கருவிகளும் தான்,
நான்
புலம் பெயர்ந்து இரு தசாப்தத்துக்கு மேலாகிவிட்டது. வாழ்வின் போக்கே மாறிவிட்டது. ஆனால்
என்னுடைய வாழ்க்கையில் நடந்த முக்கியமான திருப்பங்களையும் வளர்ச்சிகளையும் நினைக்கும்போது
அந்த நேரத்தில் என்னுடன் கூட இருந்த பலவற்றில் மிச்சமாக இருப்பது ராஜாவின் பாடல்கள்
மட்டுமே. எனவே அதற்கு காரணமான ராஜா எனக்கு மிக முக்கியமான ஒரு மனிதர். இப்படி எனக்கிருக்கும்
அதே உணர்வுகள் தானே ஒவ்வொரு ஈழத்தமிழனிற்கும் இருக்கும்?? எங்களின் வாழ்க்கையின் எல்லாவற்றிலும்
ஒன்றரக் கலந்தவர் இசைஞானி அப்படிப் பட்டவரின் நிகழ்ச்சியை பார்க்கவேண்டாம் என்று சொல்லும்
உரிமை யாருக்கு இருக்கிறது??. கார்த்திகை மாதத்தில் வைக்கக் கூடாது என்று சொல்கிறார்கள்.
யார் சொன்னது?? இதுவரை ஈழத்தமிழன் எவனும் அப்படி சொன்னதில்லை.
ஈழத்தமிழன் இழந்தவை கொஞ்சநஞ்சமல்ல..பெற்றோர்,சகோதரர் ,சொந்தங்கள்,பந்தங்கள், நட்புக்கள், உடமைகள், சிறுவயதுப் பாடசாலைகள், கல்லூரிகள்,தியேட்டர்கள்,கோவில்கள்,வேலிகள்,தோட்டங்கள், ஆசையாக
வளர்த்த நாய்கள்,ஆடுகள்,மாடுகள்,கோழிகள், பனைகள், வாகனங்கள், தவறணைகள்..
முக்கியமாக தாய்மண்ணை , பிறந்து தவழ்ந்து
வளர்ந்த
வீட்டை..
ஊரை எல்லாத்தையும் இழந்துவிட்டான்.. அவை அவனுக்கு திருப்பிக்
கிடைக்கப் போவதில்லை.. இழந்தவைகளை ஒருமுறைகூட மீண்டும் பார்க்கக் கூடிய சந்தர்ப்பம் வரப்
போவதில்லை. ஆனால் அவனது வாழ்க்கையில்
நடந்த மகிழ்ச்சியான சம்பவங்களையும், சொந்தங்கள் பந்தங்களுடன் கூடிக் குலாவிய அந்த
அழகான நாட்களையும், இடங்களையும் இன்றும்
அனுபவித்துப்பார்க்கக் கூடிய அற்புதம் நிகழ்ந்து
கொண்டிருக்கிறது அது எங்கள் இசைஞானியால்..
அவரின் பாடல்களால்.
எங்களின் சிறுபராயம், மாணவப் பராயம், வாலிபப்
பராயம், பதின்ம வயதுக் குறும்புகள்,
நண்பர்களின் முதல் காதல்கள், சைகில்களில்
சுற்றியது,
மினிபஸ்சில் யாழ்ப்பாணம் ரியூஷனுக்கு கூத்தும் கும்மாளமுமாகப் போவது என எல்லாவற்றையும்
இரைமீட்டிப்பார்த்து தொலைந்து போன எங்கள் மண்ணில்
நாம் அடைந்த சந்தோஷங்களையும், பேருவகைகளையும்,
முக்கியமான சம்பவங்களையும் மனக்கண்முன்
மீண்டும் கொணர்ந்து சில கணங்கள் மகிழ்ச்சியில்
திக்கு முக்காட செய்வது, யுத்தத்துக்கு முந்தைய மகிழ்ச்சியான இலங்கையில் இருந்த
போது வெளிவந்த இசைஞானியின் பாடல்களை கேட்கும் போது மட்டுமே.
நாங்கள்
அங்கு வாழ்ந்திருந்த போது இருந்த பலர்
இப்போது இல்லை , பல இடங்கள்
,அடையாளங்கள் கூட இல்லை ஆனால்
அழிந்துபோன அவைகளை இன்றும் ராஜாவின்
அந்தக்காலத்தைய பாட்டுக்களைக் கேட்கும்போது எங்களால் உணரமுடிகிறது.எல்லாவற்றையும் இழந்த ஈழத்தமிழன் இன்றும்
இழக்காமல் இருப்பது ராஜாவின்பாட்டுக்கள் கொடுக்கும் சந்தோஷமான நினைவுகளைத்தான். அந்தப் பாட்டுக்களை தந்த
ராஜாவை நேரில் சந்திக்கும் சந்தர்ப்பம்
அத்தி பூத்தாற்போல் இப்போ கிடைத்துள்ளது. ஈழத்தமிழனுக்கிருக்கும்
இந்த ஒரேயொரு சந்தோஷத்தை அவன்
எவர் சொன்னாலும் இழக்கப் போவதில்லை


Miga arumaiyana pathivu........
ReplyDeleteவலியும் வலிமையும் நிறைந்தது ஈழ சகோதர்ர்களின் வாழ்க்கை ......
ReplyDelete.