திரையுலகு, விளையாட்டு இலக்கிய உலகு அரசியல் என பல்வேறு துறைகளில் மின்னிப்பிரகாசிக்கும் சிலர் அல்லது நிறுவனங்கள் திடீரென்று எரி நட்சத்திரம் போல் காணாமல் போய்விடுவது வழமை , அப்படி என்னைக் கவர்ந்து காணாமல் போனவர்களைப் பற்றியும், காணாமல் போனவைகளைப் பற்றியும் என்பாட்டுக்கு எழுதினால் என்னைப் போன்ற , அவர்களால் கவரப் பட்ட மற்றவர்களுக்கும் அது சில சந்தோஷமான நினைவுகளை மீட்டலாம் என்பதால் என்பாட்டுக்கு மனதில் வருவதை எழுதப் போகிறேன்.
யாழ்ப்பாணத்தில் தொலைக்காட்சியில் T.V படக்காட்சி..
இன்று நம் ஒவ்வொருவர் வீட்டிலும் Theatre Room, என்றும் Home theatre என்றும் அதி நவீன வசதிகளுடன் கூடிய சினிமாத் தியேட்டருக்கு ஒப்பான சினிமா சாதனங்களையும், தொலைக்காட்சிப் பெட்டிகளையும் வைத்திருக்கிறோம் ஆனால் இந்தத் தொலைக்காட்சிப் பெட்டிகள் தாயகத்தில் எமக்கு அறிமுகமான நாட்கள் இனிமையானவை. பல அனுபவங்களை ஏற்படுத்தியவை அவற்றைப் பற்றிய நினைவலைகள் கண்டிப்பாக எம் ஒவ்வொருவருக்கும் இருக்கும் அவற்றை இதனை வருடங்கள்.. அனுபவங்கள் வளர்ச்சிகளுக்குப் பின் இப்போ நினைக்கும் போது…
1977 வரை சோஷலிசக் கொள்கையுடன் இருந்த சிறிமாவின் இலங்கை சுதந்திரக்கட்சியை (S.L.F.P) 1977இல் தேர்தலில் தோற்கடித்து ஆட்சிக்கு வந்த முதலாளித்துவக் கொள்கையுடைய ஜே.ஆரின் ஐக்கிய தேசியக் கட்சி மேற்குலகுடன் கைகோர்க்கத் தொடங்கியது. அதன் முதற்படியாக செய்த முக்கியமான இரண்டு செயற்பாடு சுதந்திர வர்த்தக வலய உருவாக்கம் மற்றும் தொலைக்காட்சியை பன்முகப் படுத்தி தொலைக்காட்சி ஓளிபரப்பை ஆரம்பித்தது
79 களின் கடைசியில் தான் இலங்கையில் தொலைக்காட்சி சாதாரண மக்களிடமும் பரவத்தொடங்கியது. இந்தக்கால கட்டத்தில் இலங்கையில் ரூபவாஹினி என்ற ஒரேயொரு அரச ஒளிபரப்பு தொடங்கப்பட்டாலும் அது மும்மொழிகளுக்கும் பொதுவானதாக இருந்ததால் தமிழ் நிகழ்ச்சிகள் வெகு அரிது. இடைக்கிடை தமிழ் படங்கள் மட்டும் ஒளிபரப்புவார்கள். எனவே தமிழ் பேசும் மக்கள் தமிழ் நிகழ்ச்சியைப் பார்க்க இந்தியாத்தொலைக்காட்சி நிலயங்களை இலங்கைத் தொலைக்காட்சியில் தேடத்தொடங்கினார்கள்.
இவை இரு நாடுகள் என்ற போதும் இலங்கையின் வடபகுதியான யாழ்ப்பாணம், மன்னார் போன்ற இடங்களில் இருந்து தமிழகம் வெறும் 40 மைல் (அண்ணழவாக) தூரம் தான். இது தமிழகத்தின் ஒரு தொங்கலில் இருந்து மறு தொங்கலுக்குப் போவதிலும் பார்க்க மிகக் கிட்டிய தூரம். எனவே தமிழகத் தொலைக்காட்சிகளை இலங்கையின் வடபகுதியில் இலகுவாகப் பார்க்கலாம் என்பது சாத்தியம் தானே..
அக்காலகட்டத்தில் இந்தியத் தூர தர்ஷனில் ஒலியும் ஒளியும் போடுவார்கள். அப்போவெல்லாம் தமிழகத்தில் இலங்கை வானொலி அதன் தரமான நிகழ்ச்சிக்கும் திரயிசைப் பாடல்களுக்கும் எவ்வளவு பிரசித்தமோ.. அதேபோல யாழ்ப்பாணத்தில் தூரதர்ஷனின் ஒலியும் ஒளியும் பிரசித்தம். காரணம் தமிழகத்திலும் இப்போ மாதிரி தடுக்கிவிழுந்தால் ஆயிரம் தனியார் சனல்கள் அப்போ இருக்கவிலை. தூரதர்ஷன் ஒன்றுதான், அதுவும் அடிக்கடி தடங்கலுக்கு வருந்துகிறோம் என்றும், அடுத்த நிகழ்ச்சி சில நொடிகளில் தொடரும்.. என்றும் அறிவிப்பை போட்டபடியே அரை மணிநேரம் அடுத்த நிகழ்ச்சிக்காக ஓட்டியபடி, முக்கி முனகித்தான் தனது ஓளிபரப்பை தொடரும்
அதன் ஒளித்தரம் யாழில் மிகக் குறைவாகவே காணப்பட்டது. அதன் நிகழ்ச்சியைப் பார்ப்பதற்கு காலநிலை கைகொடுக்க வேண்டும். பெரும்பாலான நாட்களில் நிகழ்ச்சியின் தெளிவுக்காக வீட்டு உரிமையாளர் ரோச் லைற்றும் கையுமாக வெளியே சென்று, அன்ரனாவை அங்குலம் அங்குலமாகத் திருப்பிக் கொண்டு சரியா.. சரியா என்று கேட்டுக் கொண்டிருப்பார் உள்ளேயிருப்பவர் இன்னும் கொஞ்சம் திருப்புங்கோ.. மற்றப்பக்கமாக திருப்புங்கோ என்று சொல்லியபடி இருப்பார். இப்பிடி அன்ரனாவை திருப்பித் திருப்பியே கையொடிஞ்ச கனவான்கள் பலபேர்.அனேகமான நாட்களில் இரச்சலுடன் தொலைக்காட்சித்திரையில் புள்ளிகள் வந்து போய்க்கொண்டிருக்கும்.இறுதி வரை ஒரு சிறு ஒலியோ ஒளியோ வராது

ஒரு முறை எனது அப்பு,(எனது தாயின் தகப்பனார்,, அழிந்து கொண்டு போகும் தமிழ் சொல்லில் இதுவும் ஒன்று இப்போ நாகரீகம் கருதியோ என்னமோ எல்லோரும் தாத்தா அல்லது அம்மப்பா என்கிறார்கள் ) தானும் ரீ. வீ. பார்க்கப்போகிறேன் என்று கூறிவிட்டு ஆர்வத்துடன் எம்முடன் வந்தார் . வயதான அவரால் நிகழ்ச்சிக்கான போராட்டத்தை புரிந்து கொள்ள முடியவில்லை.. வீடு வந்த அவரிடம், எனது தாயார், தொலைக்காட்சி அனுபவம் எப்படி என்று கேட்டதற்கு அவர் சொன்னது, அதென்ன… அந்தத் திரையிலை ஒரே தேனிலையான் (தேனீ) தான் பறந்து திரியிது.. உதையே உவங்கள் மினக் கெட்டுப் போய் பார்க்கிறான்கள்???
அக்காலகட்டத்தில் நிகழ்ச்சியைக் கடைசிவரை பார்க்க முடியாமல் போன நாட்கள் தான் அதிகம். சில வேளைகளில் ஒன்றிரண்டு பாடல்களை அரையும் குறையுமாக தெளிவில்லாமல் பார்க்கும் அதிர்ஷ்டம் வாய்த்துவிட்டால் .அப்பாடா.. அந்தக் காலத்தில் அது பெரும் பொக்கிஷமாகவே எமக்கிருந்தது.
தொலைக்காட்சி அறிமுகமாக்கப்பட்ட அந்த நாட்களில் சாதாரணமானவர்களால் அதை வாங்குவது இயலாத காரியம். எனவே ஒவ்வொரு ஊரிலும் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் தொலைக்காட்சிப் பெட்டிகள் வைத்திருப்பார்கள். தூரதர்ஷன் ஒலியும் ஒளியும் போடும் நாட்களில் அயலவர்கள் கூடி தொலைக்காட்சிப் பெட்டியுள்ள வீட்டுக்கு சென்று எல்லோரும் சிரித்தும் பாட்டுக்களை அவரவருக்கு ஏற்றார்போல விவாதித்தபடியும் அந்நிகழ்ச்சியைப் பார்த்து ரசிப்பார்கள். சில வேளைகளில் வீட்டு உரிமையாளரால் எல்லோருக்கும் பெருமையுடன் தேனீர் பரிமாறப்படுவதும் உண்டு. அது அவரின் மனநிலையைப் பொறுத்தது.
இப்படியாகப் போய்க்கொண்டிருந்த மட்டுப்படுத்தப் பட்ட எமது தொலைக்காட்சி அனுபவம், யாழ் நகரில் அக்காலத்தில் மிகப் பிரபலமாக விளங்கிய நியூ விக்ரேர்ஸ் ( NEW VICTORS) victor and sons போன்ற Tape Recorder மற்றும் Audio cassette விற்பனை செய்த நிறுவனங்கள் மூலம் முடிவுக்கு வந்தது.
இவர்கள் தொலைக்காட்சிப் பெட்டிகளையும் அவற்றுடன் சேர்த்து தமிழ் திரைப்படக் கசெற்றுக்களையும் வாடகைக்கு விடத்தொடங்கினார்கள். அதனால் பாடசாலைகளின் விழாக்களிலோ, கோயில் பெருநாட்களிலோ, திருவிழாக்களிலோ இவர்களை அழைத்த பொது அமைப்புக்கள் T.V. படக் காட்சி என்ற அறிவிப்புடன் படங்கள் போடத்தொடங்கினார்கள். பொது அமைப்புக்கள் இப்படியான படக்காட்சிகளை ஒழுங்கு செய்ததால் 3.00 ரூபாக்கள் தொடக்கம் 5.00 ரூபாக்கள் வரை படங்களின் எதிர்பார்ப்பு, நடிகர்கள், தரத்துக்கு ஏற்ப கட்டணம் அறவிட்டு தொலைக்காட்சியின் வாடகை போக மீதியை கோயில் அல்லது பாடசாலை நிதியுடன் சேர்த்து பொதுப்பணிக்கு செலவிட்டார்கள்.
நான் முதலில் 5.00 ரூபா கொடுத்துப் பார்த்த படம் ஒரு பிரபலமான நாவலைத் தழுவி எடுக்கப் பட்ட கமலின், ஒரு ஊதாப்பூ கண் சிமிட்டுகிறது.
அந்தக் காலத்தில் நியூ விக்ரேர்ஸ் போன்ற நிறுவனங்களிடம் வாடகைக்கு எடுப்பதற்கு அந்த நிறுவனங்களால் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு இருந்தது தொலைக்காட்சிப் பெட்டி, வீடியோ டெக் மற்றும் சினிமாப் பட கசற்றுக்களை நியூ விக்ரேசின் ஊழியர் ஒருவர் காரில் கொண்டு வந்து இயக்கி படங்களை ஒளிபரப்பி விட்டு தம்முடனேயே எடுத்துச் செல்வார். அவரைத்தவிர வேறு ஒருவரும் ரீ.வி.யையோ டெக்கையோ அனுமதியின்றி தொட முடியாது.
இவற்ரைக் கொண்டு வந்து இயக்குபவரின் பந்தா இருக்கிறதே.. ஷப்பா.. அதைச் சொல்வதற்கு வார்த்தையே இல்லை. அமெரிக்க நாசாவில் வேலை பார்க்கும் விஞ்ஞானிகள் கூட பந்தா காட்டுவதில்லை ஆனால் இவரின் பந்தாவை தாங்க முடிவதில்லை.. அவர், தான் போடும் படத்தின் ஹீரோவைப் போலவே தன்னை நினைப்பார் போலிருக்கிறது. அவருக்கு கோழிக்கறியுடன் நளபாக உணவு வேறு பரிமாறப் படும். படத்தைப் போட்டுவிட்டு உணவை உண்பார் அதன்பின் ரஜினிகாந்த் நடப்பதுபோல விரு.. விரு வென்று நடந்து போய் தனது நிறுவனத்துக்கு சொந்தமான Volks Wagen காரில் ஏறிப் படுத்துவிடுவார்.
படம் முடிவதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பு எழுந்து வந்து அருகே நிற்பார் ஆனால் யாருடனும் சினேகபூர்வமான புன்னகையோ, உரையாடலோ இருக்காது. முதலாவது படம் முடிந்ததும் அடுத்த படத்தை போட்டுவிட்டுப் போய் மீண்டும் தூங்கத்தொடங்குவார்,

அனேகமான ரீ.வி. படக்காட்சிகள் இரண்டு அல்லது மூன்று படங்களை கொண்டதாக இருக்கும், படங்கள் தொடங்கு முன் துண்டுப்படம் என்று அழைக்கப் படும் வேறு ஒரு படத்தின் உபரியாக சில காட்சிகளை அவர் போடுவார் போட்டுவிட்டு முக்கியமான கட்டத்தில் அதை நிறுத்திவிடுவார். அந்தக் காட்சியின் உந்துதலால் கவரப் பட்ட ரசிகர்கள் இன்னும் கொஞ்ச நேரம் விடலாமே என்று ஆரவாரிப்பார்கள்.. ஆனால் அதையெல்லாம் அவர் சட்டை செய்யவேமாட்டார் காரணம் அவருக்குத் தெரியும், தான் உதிரியாகப் போட்ட படம் ஏற்படுத்தியிருக்கும் ஆர்வத்தால் மீண்டும் அந்தப் படத்துக்காக தம்மிடம் வருவார்கள் என்பது.
இது அந்த நிறுவனத்தின் கெட்டித்தனமான வியாபார உத்தி என்பது நான் பெரியவன் ஆனபிற்பாடுதான் புரிந்தது.
அப்படி உபரிப்படமொன்று மிகுந்த எதிர்பார்ப்பை எம்மத்தியில் ஏற்படுத்தியது என்றால் கமலும் ரஜினியும் நடித்த ஆடுபுலி ஆட்டம். இன்றளவும் அந்த பிரமிப்பு என் கண்முன்னே நிற்கிறது.
நான் முதன் முதலில் ரீ.வி. படக்காட்சியில் பார்த்த தமிழ்ப் படம் சிவாஜி நடித்த “ஜெனரல் சக்கரவர்த்தி”. அந்தப் படம் நான் 5ம் ஆண்டு படித்த போது எமது பாடசாலையில் போடப்பட்டது. எமது பிரின்சிபாலின் மேற்பார்வையில், நாம் எல்லோரும் வரிசையாகச் சென்று சத்தமில்லாமல் ஒழுங்காக அமர்ந்திருந்து கண்கள் விரிய அந்தப் படத்தை பார்த்தது இப்போ போல உள்ளது.
படம் முடிந்ததும் வீட்டுக்கு ஓடோடிப்போய் தியேட்டரை தூக்கிக்கொண்டு வந்து படம் போட்டவை என்று நான் பிரமிப்புடன் சொன்னதும் அதைக் கேட்டுவிட்டு எனது தாய் தந்தையர் விழுந்து விழுந்து சிரிச்சதையும் நான் வெட்கப்பட்டதையும் மறக்க முடியவில்லை.
இரண்டொரு கிழமைக்கு முன்பு ஜெயா ரீ.வி.யில் (அல்லது விஜை ரீ.வி.யில் ) “ஜெனரல் சக்கரவர்த்தி” படம் ஒளிபரப்பினார்கள். எனது முதல் ரீ.வி.படம் என்பதை எனது மனைவி மகளுக்கு கூறிவிட்டு சிறிய மகளுடன் அதை எனது தியேட்டர் ரூமில் பார்த்தேன். சத்தியமாக எமது பள்ளிக்கூடத்தில், நிலத்தில் அமர்ந்திருந்து பார்த்துப் பிரமித்த திருப்தியை என்னால் இந்த நவீன தொழிநுட்பத்திலோ, பிரமாண்டத்திலோ, சொகுசு இருக்கையிலோ பெற முடியவில்லை. அந்தப் படத்தை முழுமையாகக் கூட என்னால் பார்க்க முடியவில்லை..
இரண்டாவதாகப் பார்த்த படம் “அண்ணன் ஒரு கோவில்”. அதில் “நான்கு பக்கம் வேடருண்டு நடுவினிலே மானிரண்டு”… பாடலின் காட்சியின் படி,, தேடப்படும் குற்றவாளியான சிவாஜி, பொலிசின் சுற்றிவளைப்புக்கள் அகப் பட்டிருக்கின்ற போதும் காமத்திலும் காதலிலும் சிக்குண்டு பாடுவதாக அமைந்த அந்தப்பாட்டைப் பார்த்து அந்தச் சிறிய வயதில் நாணிக்கோணியதை இப்போ நினைக்க சிரிப்புத்தான் வருகிறது. எங்களின் எதிர்கால சந்ததி அப்படியான அப்பாவித்தனத்துடன் இருக்கப் போவதில்லை என்பது துரதிர்ஷ்டமே.
அமைதியாக இருந்த நாட்டில் இனங்களுக்கிடையில் துவேஷம் வளர்க்கப்பட்டு இனப்பிரச்சினை கூர்மையடையத்தொடங்கிய 80 களின் ஆரம்பத்தில் ஒரு நாள். சுற்றிவளைப்பு இளைஞர்களின் கைது என்ற காலம் ஆரம்பித்த நேரம்.
ஆங்காங்கே குண்டுவெடிப்புக்கள் அரங்கேறத்தொடங்கிய காலமது. இரவு 6 மணிக்குப் பிறகு பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியேறுவதை தாமாகவே தவிர்க்கத் தொடங்கியிருந்தார்கள். மக்கள் மனங்களில் பயம் குடிகொள்ளத் தொடங்கியிருந்தது.
ஒவ்வொரு தாயும் தந்தையும் தமது இளம் பிள்ளைகளின் எதிர்காலத்தை எண்ணிக் கலங்கத் தொடங்கியிருந்தார்கள்.
அந்த வேளையிலும் ஏற்கனவே அறிவித்திருந்த ஒரு ரீ.வி. படக்காட்சியை, மோசமான நாட்டு நிலைமையில் போடுவது, பாதுகாப்பானதா இல்லையா என்ற பலத்த இழுபறிக்குப் பின் போடுவதாகத் தீர்மானம் ஆயிற்று.
முதல் நாள் யாழ் தெல்லிப்பழையில் ஒரு மிகப் பெரும் குண்டுவெடிப்பு இடம் பெற்று எல்லோரையும் கிலிகொள்ள வைத்திருந்த காரணத்தால். என்ன நேரத்தில் என்ன நடக்குமோ என்ற பயம் எல்லோர் மனதிலும்.
எனக்குப் படத்துக்கு போக பயமாக இருந்த போதிலும் எனக்குப் பிடித்த மோகனின் படமான உதய கீதம் என்பதால் எப்படியாவது பார்த்துவிடுவது எனத் தீர்மானித்தேன்.
இந்தப் படத்தை மதர்லேண்ட் பிக்சர்ஸ் கோவைத்தம்பி தயாரித்து இசைஞானியின் முத்தான பாடல்களை S.P.B. பாடியிருந்ததும் அதற்கு மோகன் அற்புதமாக நடித்திருந்ததாகக் கேள்விப்பட்டதும் எனது விடாப்பிடிக்கான முக்கிய காரணம்.
ஒருவாறு அம்மாவை கெஞ்சிக் கூத்தாடிச் சமாளித்துவிட்டு நண்பர்களுடன் படம் பார்க்க சென்றுவிட்டேன். படம் போடப்பட்ட இடம் எமது தேவாலய பின்புறம். அதிலிருந்து பிரதான வீதி 300 மீற்றர் தூரத்தில் இருக்கிறது. ஆனால் அதிர்ஷ்டவசமாக மெயின் ரோட்டில் இருந்து பார்த்தால் தெரியாத மாதிரி தேவாலயத்துக்கு பின்புற வளவில் தான் படம் போய்க்கொண்டிருந்தது.
மோகனின் படங்களில் S.P.Bயின் பாட்டுக்களுக்கும் அதற்கு அவரின் நடிப்புக்கும் நான் தீவிர ரசிகன். படத்தில் ஒன்றிப்போனதால் நாட்டு நிலைமையை மறந்து சந்தோஷமாக நணபர்கள் எல்லோரும் படத்தை ரசித்துக்கொண்டிருந்தோம்
. திடீரென்று மெயின் ரோட்டில் இருந்து சைக்கிலில் வேகமாக ஓடி வந்த ஊர் முதியவர் ஒருவர் கத்தினார். டேய் படத்தை நிப்பாட்டுங்கோடா… தூரத்திலை ராணுவ வாகனத் தொடர் ஒன்று வருமாப் போல இருக்குது. தொடர் வெளிச்சங்கள் இரைச்சலுடன் வந்து கொண்டிருக்கு!!
அவர் திகிலுடன் உடம்பு நடுங்கப் பதறிக்கொண்டிருந்தார்.அங்கிருந்த ஒருவருக்கும் ஈயாடவில்லை... உடனேயே ரீ,வி,யும் அங்கிருந்த சிறு வெளிச்சமும் நிற்பாட்டப்பட்டன. எல்லோரும் கும்மிருட்டில் இருந்தோம்.. ஒருவரின் மூச்சுக்காற்று மற்றவர்களுக்கு கேட்கும் நிசப்தம்.
அந்த வாகனத்தொடரணியின் இரைச்சல் நெருங்குவதும் நிலத்தின் அதிர்வை கொண்டு அது ராங்கியுடன் கூடிய வாகன அணியென்பதையும் எல்லோரும் புரிந்து கொண்டதும் அங்கிருந்த அனைவரையும் மரணபயம் ஆட்கொண்டது. நெருங்கி வந்த வாகனத் தொடரணி எமது சந்தியில் கிரீச்சிட்டு நிற்பதும் துல்லியமாகக் கேட்டது…
இது என்ன சோதனை.. கடவுளே இவ்வளவுதானா??? என கடவுளை எண்ணத்தொடங்கிய சிறிது நேரத்தில் அந்த வாகனத்தொடர் புறப்பட்டுப் போவது கேட்கத்தொடங்கி எல்லோர் முகத்திலும் புன்சிரிப்பை உருவாக்கியது. ஆளுக்காள் பயந்திருந்த விதத்தை நையாண்டி பண்ணி நண்பர்களெல்லோரும் சிரிக்கத் தொடங்கினோம். ஒரு அசம்பாவிதமும் நடக்காததால் எல்லோருக்கும் மகிழ்ச்சி இருந்தாலும் அடி மனதில் அந்தப் பயம் இல்லாமல் இல்லை.

படம் விட்ட இடத்தில் இருந்து தொடர்ந்தது.
படம் தொடர்ந்து கொண்டிருந்தது இசைஞானி, S.P.B. மோகன் இவர்களுடன் கவுண்டமணியின் அசத்தலான கொமடி வேறு படம் ஜனரஞ்சகமாகப் போய்க் கொண்டிருந்தது மீண்டும் எல்லாவற்றையும் மறந்து படத்தில் மூழ்கிப்போனோம்…
டமால் திடீரென்று காதைப்பிளக்கும் குண்டுவெடிப்பு மாதிரியானதொரு பாரிய சத்தம். கைகால் எல்லாம் அதிர்வதைப் போன்றதொரு பிரமை.. எல்லோரும் வாரிச்சுருட்டிக்கொண்டு கால் போன திசையில் ஓடினோம் ஓட்டமென்றால் ஒரு ஓட்டம் அப்படியொரு ஓட்டம்..இருட்டில் எங்கு போவதென்று தெரியாது ஓடியதில் ஒருவரோடுருவர் அடிபட்டு விழுந்தவர்கள் ஒருபுறமும், இருட்டில் பள்ளங்களுக்குள் விழுந்தெழும்பி கால் பிரண்டவர்கள் ஒருபுறமாகவும் தலைதெறித்த ஓட்டம் அந்த ஓட்டத்தை ஒலிம்பிக்கில் ஓடியிருந்தால் பதக்கம் நிச்சயம் கிடைத்திருக்கும்…
பலமணி நேரத்தின் பின் ஒருவாறு வீடு போய்ச்சேர்ந்தேன். அதன் பிறகு சொல்ல வேண்டுமா.. வேண்டாம் ..வேண்டாம்.. எனக் கூறியும் கேட்காமல் படத்துக்குப் போனதனால் தான் இப்படியான அசம்பாவிதம் நடந்ததாக சந்தர்ப்பத்தை தனக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொண்ட அம்மா இரவிரவாக பெரிய lecture அடிக்கத் தொடங்கி விட்டா.. எனக்கோ மறுத்துப் பேச முடியாத நிலை. மனமெல்லாம் நண்பர்களைச் சுற்றியே வந்தது,
அவர்கள் பாதுகாப்பாக வீடு சென்றிருப்பார்களா என்ற அங்கலாய்ப்பு.. இப்போ போல கைப்பேசியில்லாத காலமது. அதுமட்டுமல்லாமல் நடந்த அசம்பாவிதம் காரணமாக எப்படியான பின்விளைவுகள் ஏற்படப்போகின்றதோ ???என்று அம்மா வேறு புலம்பத்தொடங்கிவிட்டா.. எனக்கும் அந்த அச்சம் ஏற்பட்டு நாவறளத்தொடங்கியது.
சிலமணிநேரத்தில் எதுவும் நடக்கலாம் என்ற பயப்பீதியுடன் விடியத் தொடங்கிய அடுத்த நாள் காலையில் வீட்டு வாசலில் ஆளரவம்.. தொடர்ந்து சைக்கில் பெல் சத்தம்..
அது இரவு என்னுடன் ரி.வி. படக்காட்சிக்கு வந்த ஒரு நண்பனுடையது என்பதை அதன் மக்கர் பண்ணும் சத்தத்தை வைத்துப் புரிந்து கொண்ட நான் வீட்டின் வெளியே ஓடிச்சென்றேன்
வெளியே மற்றும் இரு நண்பர்களுடன் எதையோ பேசி பெரிதாக சிரித்துக்கொண்டிருந்தார்கள். என்னைக் கண்டதும் மேலும் குதூகலமாகி என்ன மச்சான் உனக்கு கால் கையெல்லாம் முறியேல்லையே ?? என்று கேட்டுவிட்டுச் சிரித்தான் நண்பன்.
நான் அதைத் தவிர்த்து விட்டு இரவு என்னதான் நடந்தது, எங்கு குண்டு வெடித்தது அதன் பின்னான அசம்பாவிதங்கள் பாரிய அழவிலா ??? எவருக்காவது ஏதாவது தெரியுமா?? என்று பதை பதைப்புடன் கேட்டேன்.. அதைக் கேட்டதும் மீண்டும் பெரிதாகச் சிரித்துவிட்டு அவன் சொல்லத் தொடங்கினான்.

இது தெரியாமல் நாட்டின் சூழ்நிலை காரணமாகவும் கடந்துபோன வாகன அணியின் நினைவு அடிமனதில் இருந்ததாலும் நாம் பயந்து ஓடியுள்ளோம்..
கேட்டதும் எனக்கு சிரிப்பு ஒருபக்கம், நிம்மதி ஒரு பக்கம் என பல உணர்ச்சிகள் வந்து மறைந்தன.
அது சரி ரீ.வி. கொண்டுவந்தவர் பாடு என்ன ??? அவர் வேறு இடத்தைச் சேர்ந்தவரென்ற படியால் இங்கத்தைய இடங்கள் ஒன்றும் தெரிந்திருக்காதே எப்படி ஓடியிருப்பார் ?? சிரித்தபடி நான் கேட்டேன் அவர் ஓடி விழுந்து காயங்களுடன் அதிகாலையில் தான் சென்றதாக நண்பன் பரிதாபத்துடன் கூறினான்.
அந்த ராணுவத் தொடரணி எங்களின் பிரதான சந்தியில் நிறுத்தப் பட்டதற்கான காரணம்?? இது நான் அவர்கள் ரோந்து செல்லும் வழியில் சந்தியில் நிறுத்தி அங்கிருந்த கடைக்காரரிடம் சிகரட் வாங்கிச் சென்றுள்ளதாக நண்பன் கூறினான்.
அப்பாடா பெரிய நிம்மதி..
அதன் பிறகு நாட்டின் சூழ்நிலை வேகமாக அதல பாதாளத்துக்கு செல்லத்தொடங்கியது, அன்றாட சாதாரண வாழ்க்கை கேள்விக்குறியாகத் தொடங்கியது நண்பர்களை நாட்டின் சூழ்நிலை வெவ்வெறு தேசங்களுக்கு போக வைத்தது..
அவ்வளவுதான்… அந்தச் சம்பவமும் படமும் தான் எங்கள் ஊரில் நடந்த கடைசி T.V. படக்காட்சியும், நான் பார்த்த கடைசி T.V. படக்காட்சியுமாகும்.
அதற்குப் பிறகு நானறிய எமது சுற்று வட்டாரத்தில் அந்த அருமையான பொழுது போக்கு நின்று போயிற்று

No comments:
Post a Comment