.
இன்று பல நண்பர்களின்
முகப் புத்தக Time line இல், யாழ்தேவியைப் பற்றிய குறும்படம் ஒன்று Share பண்ணப்பட்டிருந்தது.
( அந்த Documentary யைப் பார்க்க இங்கே சொடுக்கவும். http://www.youtube.com/watch?feature=player_embedded&v=h9kVvtI3S6c )
யாழ்தேவி என்பது
ஒரு காலத்தில் கொழும்பிற்கும் யாழ்ப்பாணத்துக்கும் இடையிலான ரயில் சேவையாகும். பார்த்ததும்
பலவிதமான மனப்போராட்டங்கள் எனக்கு. என்னடா ஒரு சாதாரண ரயிலைப் பற்றிய Documentary தானே
இதிலென்ன விஷேடம் இருக்கிறது என்று பலர் நினைக்கலாம்.. ஆனால் அது அப்படியல்ல. இந்த
ரயில் ஒவ்வொரு யாழ்ப்பாண மக்களினதும் வாழ்க்கையுடன் பின்னிப் பிணைந்திருந்தது.
இலங்கையின் வடக்கில் வாழ்ந்த தமிழர்களின் வாழ்வுடன்
ஒன்றரக்கலந்திருந்த யாழ்தேவி என்ற இந்த ரயிலைப் பற்றி 90 களுக்குப் பிந்திய எங்களின்
இளம் சந்ததிக்கு தெரிய வாய்ப்பில்லை. காரணம் துரதிர்ஷ்டவசமாக 90ம் ஆண்டுடன் இந்த ரயில்
யாழ்ப்பாணத்துக்கான தனது சேவையை நிறுத்திக் கொண்டது.
ஒரு காலத்தில் இலங்கையின் மிகப்பிரதான ரயிலாக இருந்ததும்,
இலங்கைத் தமிழ்பேசும் மக்களின் பாரம்பரிய பிரதேசமான யாழ்ப்பாணத்தையும், கொழும்பையும்
இணைக்கும் பாலமாக இருந்ததும் இந்த கடுகதி ரயில்.இதன் வரலாறும் இந்த ரயிலைப் போலவே கடுகதியானது.
பிரிட்டிஷின் கட்டுப்பாட்டில்
இலங்கை இருந்த காலத்தில் 1864ல் முதன் முதலில் இலங்கைக்கு ரயில் அறிமுகப்படுத்தப்பட்டாலும்
1902ல் தான் யாழ்ப்பாணத்துக்கான சேவை தொடங்கியது. இதில் சாமான்களை காவும் Goods
trainம் மற்றும் கடிதங்கள் பொதிகளைக் காவும்
mail trainம் அடங்கும். இந்த மெயில் ரயில் மிக மெதுவானது. ஒவ்வொரு புகையிரத
நிலையத்திலும் நின்று கடிதப் பொதிகளை ஏற்றிக்கொண்டு, கொழும்பு சென்று சேரும் நேரம்
மிக அதிகம். பின்னேரம் 5 மணிக்கு காங்கேசன் துறையில் இருந்து புறப்படும் இந்த மெயில்
ரயில் 10 – 15 நிமிடங்களுக்கு ஒரு தடவை வரும் சிறு சிறு ஸ்ரேஷன்களிலும் நின்று பொதிகளை
ஏற்றிப் புறப்படும்போது பயணிகளுக்கு எரிச்சல் ஏற்படுவது தவிர்க்க முடியாதது. அந்த ரயில்
அடுத்த நாள் காலையில்தான் கொழும்பை சென்றடையும்.
இதனால் பொதுமக்களின் இந்த அசௌகர்யங்களைத்
தவிர்ப்பதற்காக 1956 இல் யாழ்தேவி என்ற பிரயாணிகளுக்கான
ஸ்பெஷல் கடுகதி ரயில் ஆரம்பிக்கப் பட்டது.
கனடாவில் இருந்து
தருவிக்கப்பட்ட அதி சக்திகொண்ட என்ஞின்களால் உருவாக்கப் பட்டது இந்த யாழ்தேவி.
1956இல் இதன் முதல்
பயணம் மிக உணர்வு பூர்வமானது. இலங்கை பிரிட்டிஷிடம் இருந்து சுதந்திரம் பெற்று 8 வருடங்களேயான
அந்தக் காலகட்டத்திலேயே சிங்கள தமிழ் இனங்களுக்கிடையில் வேறுபாடுகள் உருவாகத்தொடங்கிய
காலமது. எனவே இந்தக் காலத்தில் இலங்கையின் தலை நகரான கொழும்புக் கோட்டையில் இருந்து
புறப்படும் ரயில் தமிழர்களின் பாரம்பரிய பிரதேசமான யாழ் நகரை மட்டுமே மையப் படுத்தி
செல்வதை இரு இனங்களுக்கிடையேயும் புரிந்துணர்வையும் ஐக்கியத்தையும் ஏற்படுத்துவதற்கான
ஒரு அறை கூவலாக பாவிப்பதற்கு நேர்மையான சிங்கள அரசியல்வாதிகள் முயன்றார்கள்.
முக்கியமாக இதில்
இடது சாரிகள் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில் ,அந்தக் காலத்திலேயே தமிழ் மொழிக்கும்
தமிழர்களுக்கும் சம அந்தஸ்துக் கொடுத்து இலங்கையை பல இனங்களைக் கொண்ட சமத்துவ நாடாக்க
வேண்டும் என்று கூறிவந்த, கேம்பிரிட்ஜ் பட்டதாரி
பீற்றர் கெனமன் ( Pieter Keuneman) முக்கியமானவர். பீற்றர் கெனமன் டச் பாரம்பரியத்தில் வந்த பறங்கியினத்தவர். அவர் இடதுசாரி அரசியல்வாதியாக இருந்ததால்,
அவரால், இலங்கையின் அரச நிர்வாகத்தில் பெருமளவான
ஆளுமையைச் செலுத்தமுடியாமல் இருந்த போதிலும், இரு இனங்களிலும் இருந்த சமாதானத்தை
விரும்பிய மக்களால் மிகவும் நேசிக்கப் பட்ட ஒருவராக இருந்தார். இதற்கு காரணமாக, இவர் பறங்கியினத்தவராக இருந்ததால் பக்கச் சார்பற்று செயற்படுவார் என்று இரு இனத்தவரும் நினைத்திருக்கலாம்.
Peter Keuneman
கொழும்புக்கும் யாழ்ப்பாணத்துக்குமான
யாழ்தேவி ஆரம்பிக்கப் பட்ட போது பீற்றர் கெனமன் மிக மகிழ்வுடன் சொன்ன வாக்கியம் “This
is Life line of this country” இதிலிருந்து இந்த ரயில் சேவைக்கும், அதன் மூலம் கிடைக்கக்
கூடிய இனக்களுக்கிடையிலான புரிந்துணர்வுக்கும், அவர் போன்றவர்கள், கொடுத்த முக்கியத்துவத்தை புரிந்து
கொள்ளலாம்.இந்த ரயில் இலங்கையை இணைக்கும் என்றே அவர்கள் எதிர்பார்த்தார்கள்.
யாழ்தேவி ஓடத்தொடங்கிய
காலத்தில் இலங்கையின் ரயில்வேயின் பிரதான முகாமையாளராக இருந்தவர் Rampala. இவரின் காலத்தில்
இன மத மொழி பேதமின்றி இலங்கையர்கள் எல்லோருக்கும் தகுதிக்கேற்ப வேலைவாய்ப்புக் கொடுக்கப்
பட்டது. அவருக்குப் பின் வந்தவர் கே.கனகசபை
என்ற தமிழர். மிக நேர்மையான இவரின் காலத்திலும் யாழ்தேவி விஷேடமாகக் கவனிக்கப் பட்டு
மெருகூட்டப்பட்டு தரத்தில் கோலோச்சியது. அத்துடன் இலங்கையின் ரயில்வேயில் அதிக வருமானம்
உழைத்த பெருமையையும் பெற்றது.
இந்தக்காலகட்டத்தில்
இலங்கையின் பிரதமர் W. டஹனாயக்கே யாழ்தேவியில் பயணம் செய்து அவரின் நெருங்கிய நண்பரும்
சுன்னாகம் ஸ்கந்தா அதிபராகவும் இருந்த ஒறேற்ரர் சுப்பிரமணியத்தின் வீட்டுக்குச் சென்று
தங்கியது, குறிப்பிடத்ததக்கது.
அந்தக் கால கட்டத்தில்
தமிழரசுக்கட்சியின் தலைவரான தந்தைசெல்வா,
கொழும்பு செல்வதற்கு யாழ்தேவியையே பயன்படுத்தினார்
என்றும் நேர்மையான அரசியல் தலைவரான அவர், தனது
வீட்டிலிருந்து நடந்தே ரயில்நிலையம் செல்வார் என்றும் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன்.
![]() |
இப்போதைய சூழ்நிலையில் நம்புவதற்குக்க் கடினமாக இருந்தாலும் இது உண்மை.
இந்த யாழ்தேவி
இருக்கிறதே.. அப்பப்பா அது சமூகத்துக்கு செய்த சேவைகளில் முக்கியமானது கலப்புத்திருமணங்களை
ஊக்குவித்ததுதான். கொழும்பில் மதியச் சாப்பாடு சாப்பிட்டுவிட்டு யாழ்தேவியில் ஏறினால்
இரவுச் சாப்பாட்டை யாழ்ப்பாணத்தில் உள்ள வீட்டில் சாப்பிடலாம். இதனால் தென்னிலங்கையில்
பரவலாக வேலைவாய்ப்புப் பெற்றுச் சென்ற தமிழ் இளைஞர் இளைஞிகள் வெள்ளிக்கிழமைகளில் புறப்பட்டு
யாழ் வந்துவிட்டு மீண்டும் ஞாயிறு புறப்பட்டு கொழும்புசென்று திங்கட்கிழமை வேலைக்குச்
செல்வது வழமை. இப்படியாக ஒவ்வொரு வார இறுதிநாட்களிலும் இந்த ரயிலில் சந்திக்கும் இளஞ்ர்களும்
இளைஞிகளும் பிரயாண இடைவெளியில் தமக்குள் தாமே கதைத்து அதன் மூலம் பெற்றுக்கொண்ட புரிந்துணர்வால்
காதல் வசப்பட்டு, திருமணம் செய்த வரலாறுகள் பலவற்றை சொல்லக் கேள்விப்பட்டுள்ளேன்.
அந்தக்காலகட்டத்தில்
இலங்கையில் இருந்த மற்றய ரயில்களுடன் ஒப்பிடுகையில், யாழ்தேவி பல விதங்களில் வித்தியாசப்பட்டதை அதைப்
பற்றிய தேடலின் போது காணக்கூடியதாக இருக்கிறது. அது தனது பயணிகளுக்கு பரிமாறிய உணவு, பாரம்பரியமான யாழ்ப்பாண உணவுகளாகும். எக்காரணத்தைக்
கொண்டும் அதன் தரத்திலோ சுவையிலோ மாற்றம் இருந்ததில்லை. யாழ்தேவி செல்லும் பாதையின்
அருகில் வசித்துவந்த மக்களின் கூற்றுப் படி, அந்த ரயில் கடந்து சென்று பல நிமிடங்கள்
சென்றாலும் அதனுள் இருந்து வந்த உணவு வாசனை கம கமத்துக் கொண்டேயிருக்குமாம். அதன் பணியாளர்கள்
நேர்த்தியான உடையுடன் காணப்படுவார்கள். மற்றய ரயில்களின் பணியாளர்களின் சேவைத் தூரம்
அதிகபட்சம் அநுராதபுரம் மட்டுமே. அதற்கப்பால் வேறு பணியாளர்கள் பொறுப்பெடுப்பார்கள்
ஆனால் யாழ்தேவியின் பணியாளர்கள் யாழ்ப்பாணத்தில் தொடங்கிய வேலையை முடிப்பது கொழும்பில்
மட்டுமே. இதனால் பயணிகளுடனான தேவைகளை உனர்ந்தவர்களாகவும் உடனுக்குடன் நிறைவேற்றுபவர்களாகவும்
அக்கால கட்டத்திலேயே அவர்கள் காணப்பட்டது ஆச்சரியமான உண்மை.
கொழும்பு கோட்டையில்
இருந்த்து புறப்படும் இந்த ரயில் 256 மைல்களைக் கடந்து ( 409 கி.மி.) தனது இலக்கை அடையும்.
இடையில் காணப்படும் :
ராகம, பொல்காவெல,
குருநாகல், மாஹோ, அநுராதபுரம், மதவாச்சி, வவுனியா, ஆனையிறவு, யாழ்ப்பாணம்,
[ போருக்கு முதல், கம்பீரமாகத்தோற்றமளித்த யாழ் ரயில் நிலையம் ]
இறுதியாக
கே.கே.எஸ்.என்றழைக்கப்படும் காங்கேசந்துறையில் தனது பயணத்தை, காலங்காலமாக முடித்த யாழ்தேவியின் எஞ்ஞினின் உறுமல்
சத்தம் வலிகாமத்தில் இருந்த எங்களின் வீட்டில் மெதுவாகவும் ஆனால் இனிமையாகவும் கேட்டது
இன்றும் பசுமையாக நினைவிலுள்ளது.
விடுமுறையில் வந்துசெல்லும்
அப்பாவிற்கும், மாமாமார்களுக்கும், கட்டுச்சோறையும், கறிகளையும், அவித்த முட்டையுடன்
சேர்த்து, வெப்பமாக்கியதால் நினைத்தபடி வளைக்கக்கூடியதாக மாறிய வாழையிலையால் சுற்றிக்கட்டி, மணக்க மணக்க அம்மா
கொடுத்துவிட்டது கண்முன்நிழலாடி அவர்களின் இளமை முகம் அப்படியே முன்னேவருகிறது.
நான் இறுதியாக யாழ்தேவியில்,1988 மே முதலாம் திகதி கொழும்புக்கு சென்றிருந்தேன். இந்திய ராணுவம் இலங்கையின் வடகிழக்கில் நிலைகொண்டிருந்த அக்காலத்தில் யாழ்ப்பாணத்தில் இருந்து புறப்பட்டு வவுனியா சென்றடையுமட்டும் முழத்துக்கு ஒரு இந்திய சிப்பாய் ரயில் பாதைக்கருகே நின்றதைக் கண்டபோது
அவர்களின் தொகை அவர்கள் அறிவித்ததை விட பலமடங்கு என்பதும் எதிர்காலத்தில் நடக்கப் போகும் அனர்த்தங்களும் புரிந்ததுடன், திரும்பி யாழ் நோக்கிய யாழ்தேவிப் பயணம் இப்போதைக்கு சாத்தியமில்லை என்ற உண்மை புலப்படத் தொடங்கியது.
இளைஞனாகப் புலம்பெயர்ந்து,
பலவருடங்களின் பின் பெரியவனாக தாயகம் சென்றபோது, ஆவலாகத் தேடிச் சென்று பார்த்ததில் இந்த யாழ்தேவியும்
ஒன்று. இப்போதும் யாழ்தேவி என்ற பெயருடன் ஏதோவொரு இயந்திரம் அனேகமான ரயில் நிலையங்களில் நின்றபடி, கொழும்பிலிருந்து புறப்பட்டு வவுனியாவுடன் தனது சேவையை
முடிக்கிறது.. முன்பெல்லாம் சிரித்துக்கதைத்தபடி முட்டி மோதிய மகிழ்ச்சியான மக்கள்
கூட்டத்தை அதில் காணமுடியவில்லை. எங்கோ ஒன்றிரண்டுபேரைக் காணமுடிந்தது. மிகச் சுத்தமாகவும்
புதிதாகவும் பேணப்பட்ட பெட்டிகள் பழையனவாகியும், மலசலகூடங்கள் கேட்பாரற்றும் காணப்படுகின்றன.
ஒருகாலத்தில், தான் தாண்டிப் போன இடங்கள் எல்லாவற்றிலும், கமகமத்து, வாயூறவைத்த உணவுக் கன்ரீன் இல்லாதுபோய்,
உள்ளே, கையேந்திபவன் மாதிரி ஏதோவொன்று பேருக்கு இருக்கிறது.
பிறந்துள்ள இந்த
2013 இலாவது எமது மக்களும் இந்த யாழ்தேவியும் பழைய பொலிவைப்பெற்று காங்கேசந்துறைவரை
செல்ல வேண்டும். கட்டுநாயக்காவிலிருந்து யாழ்தேவிமூலம் நாங்கள் பிறந்து வளர்ந்த வீட்டுக்கு
சென்று, கிணத்தில் அள்ளிக் குளித்துவிட்டு, அம்மாவின் கையால் பிட்டும் முரல்கருவாட்டுச்
சொதியும் மாசிக்கருவாட்டுச்சம்பலும் வாங்கிச் சாப்பிட வேண்டும். இந்த 2013ல் அதுதான்
எனது புதுவருடத்தீர்மானம்.
No comments:
Post a Comment