சிட்னியில் vintage car எனப்படும் 50 – 60 வருடங்களுக்கு முந்தய பழமையானதும்
, ஆனால் போற்றிப் பாதுகாக்கப் படுவதுமான கார்களின் ஒரு அணிவகுப்பை இன்று எதேச்சையாகப்
பார்க்கும் அனுபவம் எனக்கேற்பட்டது. வயதான அதன் உரிமையாளர்கள் அவற்றின் மேல் கொண்டுள்ள
வாஞ்சையையும் அவற்றின் பெருமைகளைப் பற்றி கலந்துரையாடியதையும் பார்த்தபோது எனக்கேற்பட்ட
ஆச்சரியங்களுக்கு அழவேயில்லை.
முன்னைய நாட்களாக
இருந்திருந்தால், இது ஓய்வு பெற்ற வயதானவர்களின் பொழுதுபோக்கு என்றும் அலட்டல் என்றும்
நினைத்து, அந்த இடத்தை விட்டு அகன்றுவிடக் கூடிய என்னால் இம்முறை அப்படிச் செய்ய முடியவில்லை..
அவர்கள் சொன்னவற்றை நின்று நிதானமாகக் கேட்டேன்.
அந்தக் கார்களின் விஷேட தன்மைகளைப் பற்றி உன்னிப்பாக அவதானித்தேன். காரணம் மேலைத்தேய நாடுகளில் கண்காட்சிகளுக்கு மட்டுமே
பாவிப்பதும், மிகுந்த பெறுமதியுடையதும், அதன் உரிமையாளருக்கு மரியாதையையும் ஏற்படுத்தக்
கூடியதுமான இந்தக் கார்களில் பலதை நான் யாழ்ப்பாணத்தில்
கண்டிருக்கிறேன். யாழ்ப்பாணத்தின் பிரதான வாகனங்களாக அவை இன்றும் பாவனையில் உள்ளன.
ஒரு காலத்தில் உலகத்துடன் தொடர்பற்றிருந்த அந்த மக்களுடன் இறுதிவரை கூட நின்றவை, இங்கிலாந்துத்
தயாரிப்பான இந்தக் கார்கள். தற்போதைய நிலவரப்படி மேற்கு நாடுகளில் பல்லாயிரக்கணக்கான
டொலர் பெறுமதியான அவற்றின் பெறுமதி, அங்கே மிகச் சாதாரணமானதுதான்.
சமீப காலம் வரை
யாழ்ப்பாணத்தை கியூபாவின் ஹவானா (Havana) வுடன் பலர் ஒப்பிட்டுள்ளார்கள். அதற்கு பிரதானமாக
இரண்டு விடயம் இருக்கிறது .
- யாழ்ப்பாணச் சுருட்டு : ஹவானாச் சுருட்டு எவ்வளவு பிரசித்தமும் ருசியுமோ அதேயழவு பிரசித்தம் யாழ்ப்பாணச் சுருட்டு. சுருட்டுப் பாவனையாளர்களின் கூற்றுப்படி அதை ஒரு இழுவை இழுத்தால் உற்சாகம் பீறிடுமாம். இந்தச் சுருட்டை உருவாக்கும் புகையிலையையும் ( யாழ் தமிழில் பொயிலை) தமிழ்க் கடவுள் முருகனையும் சேர்த்து பகிடியொன்று வெளிவந்து அந்த நாளையில் மிகப் பிரபலமானது தனிக்கதை..
2.
யாழில் பாவனையிலுள்ள பழைய கார்கள்
: பிடல் காஸ்ரோ என்ற கியூபாத்
தலைவனில் ஏற்பட்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக கியூபா மக்களுக்கு எதிராக அமெரிக்காவின்
உந்துதால் ஏற்படுத்தப் பட்ட பொருளாதாரத்தடை
உலகிலிருந்து கியூபாவைப் பிரித்து வைத்திருந்தது. இதனால் ரஷ்யாவின் பழைய கார்களையே
அந்த மக்கள் பாவிக்கவேண்டிய கட்டாயத்துக்கு உட்பட்டிருந்தார்கள். அதேபோல குடாநாடான
யாழ்ப்பாணத்தை தலைநகர் கொழும்புடனும் மற்றய ஏனைய நகரங்களுடனும் இணைக்கும் A-9 high
way நாட்டின் அசாதாரண சூழ்நிலையால் பாவிக்க முடியாமல் தடைப் பட்டிருந்தது. இதனால் வெளியுலகத்தொடர்பையோ
புதிய பொருட்களையோ பெற்றோலையோ, பெற முடியாதிருந்த யாழ் மக்கள் அம்புலிமாவில் வரும்
“விக்கிரமனைப் போல் சற்றேனும் மனம்தளராமல்” தம்மிடமிருந்த பழையவற்றையே பாவித்துவந்தார்கள். அவற்றில் இந்தப் பழைய கார்கள் மிக முக்கியமானவை.
எங்களின் ஊரில்
இவைதான் டாக்சிகள். அம்புலன்சுகள்,திருமணத்
தம்பதிகளை ஏற்றிச் செல்லும் Limousineகள், Delivery vanகள். (All in one
முக்கியமாக எங்களின் ஊர் திராட்சைப் பழங்களுக்கு
( முந்திரிகை ) மிகவும் பெயர் பெற்றது. அங்கே பழுத்துக் குலை குலையாகத் தொங்கும் திராட்சைப்
பழங்களை பறித்து, அவற்றை உருக்குலையாமல் இருப்பதற்காக சருகான வாழை இலைகளால் பத்திரப்
படுத்தி, பெட்டிகளுக்குள் அடைப்பார்கள். பின் அந்தப் பெட்டிகளை கொழும்புக்கு அனுப்புவதற்காக,
இந்தக் கார்களில் ஏற்றித்தான் ரயில் நிலையங்களுக்கோ, அல்லது, லொறிகளின் தரிப்பிடங்களுக்கோ
வியாபாரிகள் கொண்டு செல்வார்கள். அது கொஞ்ச நஞ்சப் பாரமல்ல. காருக்கு மேலேயும், உள்ளேயும்,
பின் boot இற்குள்ளேயும் ஒரு சிறு இடைவெளிகூட இல்லாமல் பெட்டிகளை நிரப்பி சாரதி மட்டும்,
நெருக்கியபடி, தனது இருக்கையில் இருந்தமாதிரியுமில்லாமல், நின்றது மாதிரியுமில்லாமல்
காரை ஓட்டிச் செல்வார். அழவுக்கு அதிகமான பாரங்களை
ஏற்றியதால், முக்கி முனகியபடியும், சுமக்க முடியாமல் சுமந்தும் அவை ஊர்ந்து சென்றதை
சிறுவயதில் பார்த்துப் பரிதாபப் பட்டவன் நான். அந்தக் கோலத்தில் பார்ப்பதற்கு பொதிமாடு
போல காட்சியளிக்கும் இந்தக் கார்கள் இடைநவழியில் நின்றதாக நான் அறிந்ததில்லை. அதேயழவு
பாரத்தை முட்டைக் கோதுகளைப் போலிருக்கும் இப்போதைய ஜப்பான் கார்களில் ஏற்றுவதை நினைத்துக்கூடப்
பார்க்க முடியாது.
இந்தக் கார்களில்
பார்ப்பதற்கு கொஞ்சம் அழகாக இருக்கும் கார்களை
மணமக்கள் அழைப்புக்கு பயன்படுத்துவார்கள். குறிப்பாக Morris oxford மற்றும் Austin
A55 cambridge என்பன திருமணம் முடித்த கையோடோ அல்லது திருமணத்துக்கோ மகிழ்ச்சியான மணமகனையும்,
நாணப்பட்ட மணமகளையும் ஏற்றித்திரிந்ததை கண்டிருக்கிறேன்.
யாழ்ப்பாணத்தில்
காலகாலமாக பாவனையில் இருக்கும் கார்களில் பெரும்பாலானவை 50 -55 வருடங்களுக்கு முன்பு
இங்கிலாந்தில் தயாரிக்கப்பட்டவை. அவற்றில்-
- A-40 ,[ இது மிக முக்கியமானது. யாழ்ப்பாணத்தின் மூச்சைப் போன்றதும், மிக நம்பிக்கையானதும், மிகப் பிரபலமானதுமான கார். இதை ஓஸ்ரின் என்ற நிறுவனம் தயாரித்த ஆண்டு 1947-52. தயாரிக்கப்பட்ட மொத்த எண்ணிக்கை 456.544, எஞ்ஞின் வலு 1.2 L, நிறை 966kg, இறுதி வேகம் 70.m/h (110k.m p/h) petrol 8.28 litre/100 k.m]
- Austin Cambridge, [1954 – 1971, எண்ணிக்கை 726.061]
- Austin A55 cambridge [ தயாரிப்பு B.M.C ஆண்டு 1959 – 1961 , பார்ப்பதற்கு Morris oxford போலவே இருக்கும். திருமண வீடுகளில் மணமக்கள் அழைப்புக்கு பயன்படுத்தப் பட்டவை ]
- Somerset, [1952 – 54], தயாரித்தது மொத்த எண்ணிக்கை 1,73,306, நிறை 1012kg
- Consul, [தயாரிப்பு நிறுவனம் 1951 – 1975 ]
- Morris minor [ தயாரித்தது 1948 – 1971 ]
- Morris oxford, [ தயாரிப்பு நிறுவனம் British Motor Corporation (B.M.C) இது மிகப் பழமையான நிறுவனமாக இருந்த போதிலும் யாழ்ப்பாணத்தில் நான் கண்டவை 1959 -1971 ஆகிய காலப் பகுதியில் வந்த மொடல்களே. ]
- Vw Beetle [ நிறுவனம் Volks wagen, Germany. 1938 – 2006] அதிக விலையான இக்காரை கத்தோலிக்க மதகுருமார்களும், வைத்தியர்கள் மற்றும் செல்வந்தர்களாக தம்மைக் காட்டிக் கொள்வோராலும் யாழில் பாவிக்கப்பட்ட கார். இந்தக் காருக்கான இஞ்சின் மற்றய கார்களைப் போலல்லாது பின்பக்கத்தில் இருப்பதும், எக்காரணத்தாலும் தடம் பிரளாத வகையில் இது வடிவமைக்கப் பட்டிருந்ததும் இதன் தனிச் சிறப்பு. பார்ப்பதற்கு ஆமையைப் போல காட்சியளித்ததால் அனேக மக்கள் இதை ஆமைக் கார் என்றே அழைப்பது வழக்கம
- தட்டி வான் [தயாரித்தது Chevrolet என்ற நிறுவனம். சிறிய அளவிலான லொறிகளான இவைகள்தான் யாழ்ப்பாணத்தின் மினிபஸ்களின் முன்னோடிகள். 1940 களில் இருந்து பிரயாணிகளை ஏற்றி இறக்கும் இவை இன்றுவரை இயங்குகின்றன. மூளாய் - அச்சுவேலி, பருத்தித்துறை,உடுப்பிட்டிகளில் பிரபலமானவை. புல்லாவெளி , தாளையடி போன்ற மணல் பிரதேசமான கோவில்களுக்கு யாத்திரை செல்லும்போது இவற்றை பெருமளவில் கண்டதாக நினைவு.
ஆகியவை முக்கியமானவை
.
கடந்த முறை நான்
யாழ்ப்பாணம் சென்றிருந்த வேளை, யாழ் பஸ் நிலையத்தில் இருந்து வீடு சென்றது ஒரு
Morris oxford வாடகைக் காரில். ஏறத்தாழ 40 – 50 வருடப் பழமையான அந்தக் காரின் ஓட்டுனரிடம்
பேச்சுக் கொடுத்த போது எப்படி இவ்வளவு பிரச்சினையிலும், ஒயில் பெற்றோல், உதிரிப்பாகத்
தடைகளின் மத்தியிலும் இந்தக் கார்கள் நின்று பிடிக்கின்றன ?? என்று கேட்டேன் , தற்போது
அந்தக் கார்களுக்குப் பாவிக்கும் உதிரிப்பாகங்கள் எல்லாமே யாழ்ப்பாணத்தில் உள்ளூர்
கராஜ் காரர்களால் கடைந்தவையென்பதைக் கூறினார் அவர்., .அப்போ பெற்றோல்?? ஒயிலுக்கு
(Enjine oil) என்ன செய்தனீங்கள்?? என்றபோது
பெற்றோலுக்குப் பதிலாக மண்ணெண்ணையையும், ஒயிலுக்குப் பதிலாக இலுப்பை மரத்தின்
(Mahua Tree) கொட்டைகளிலிருந்து வடித்தெடுத்த இலுப்பை எண்ணெயையும் பாவித்ததாகச் சொல்லி
மேலும் வியக்க வைத்தார். இதே நிலைமையில் ஜப்பான் தாயாரிப்புக் கார்கள் இருந்திருந்தால்
அவற்றுக்கு மாற்றீடாக ஒன்றுமே செய்திருக்க முடியாது என்றும், இதுவரையில் அவை அழிந்து
துருப்பிடித்துப் போயிருக்கும் என்றும் மேலும் கூறினார்.
இலங்கையில்
இடம்பெற்ற போரின் போது இடம்பெயர்ந்த மக்களைக் காவியபடி இவையும் இடம் பெயர்ந்தன. நீங்களெல்லாம் வெளிநாட்டுக்குப்
போய்ச் சேர்ந்திட்டியள், எல்லாரும் கைவிட்டிட்டினம் ஆனால் எங்களோடை , நாங்கள் பட்ட
கஸ்ரங்களைப்பட்டு, எங்களின் இழுப்புக்கெல்லாம் இழுபட்டு கடைசிவரை கூட வந்தது இந்தப்
பழைய கார்கள் தான்.. என்று அதன் Stearing ஐ வாஞ்சையுடன் தடவியபடி தனது ஆதங்கத்தை விரக்தியுடன்
அவர் சொன்னபோது என்னிடம் பதிலில்லை.
ஒரு கால கட்டத்தில் இரவு நேரத்தில் காரின் முன் விளக்குகளை
எரிய விட்ட படி ஓட்டக்கூடாது என்ற கட்டுப்பாட்டால், ஒரு கையில் லாந்தரை வெளியே பிடித்த
படி கார் ஓட்டிய சூழ்நிலையும் இருந்ததாக சிரித்தபடி அவர் தொடர்ந்தபோது என்னால் சிரிக்க முடியவில்லை..
இப்படியாக எங்கள்
மக்களின் துன்பத்தில் கூடவே இருந்த கார்களைப் [ போன்ற , இங்கேயிருக்கும் அதே மொடல்
கார்களின் பெருமைகளை ] பற்றி அதன் சொந்தக்காரர்
ஒருவர் விபரித்த போது, ஏனோ அவற்றின் மேல் ஒரு பச்சாத்தாபம் ஏற்பட்டு அவற்றைக்
கேட்கும் படி எனது மனம் எனக்கு ஆணையிட்டது... நியாயமானதுதானே ??
No comments:
Post a Comment