Wednesday, 16 January 2013

ஏன் S.p.B. மற்றய பாடகர்களில் இருந்து வேறுபடுகிறார்.






தமிழ்ப் பின்னணிப் பாடகர்களில் பல ஜீனியஸ்கள் இருந்தார்கள் , இருக்கிறார்கள், இருப்பார்கள். ஆனால் எவராலும் எஸ்.பி.பீ.யிற்குப் பிறகு அவரின் இடத்தை நிரப்ப முடியுமா??? என்னைப் பொறுத்தவரை அது இலகுவான விடயமல்ல, என்றே தோன்றுகிறது. காரணம் எஸ்.பி.பிக்குப் பிறகு வந்த இளம் பின்னணிப்பாடகர்கள் திறமைசாலிகளாக இருக்கிறார்கள், அவர்களின் பாடல்களை ரசிக்கக் கூடியதாக இருக்கிறது, ..ஆனால் தமிழ் சினிமாவைப் பார்த்துக்கொண்டு அந்தப் பாடல்கலைக் கேட்கும்போதுதான் வித்தியாசம் தெரிந்து நெருடுகிறது. அந்தப் பாடல்களில் அதை வாயசைத்து நடிக்கும் நடிகர்கள் தெரிகிறார்கள் இல்லை. அந்தப் பாடகர்களே தனித்துவமாகத் தெரிகிறார்கள்.

எஸ்.பி.பி மற்றவர்களிடம் இருந்து வித்தியாசப் படுவதற்கான காரணம் அவர் ஒரு காட்சிக்காகப் பாடல்களைப் பாடும்போது அந்தக் காட்சியை நன்கு விளங்கிக் கொண்டு அந்தப் பாட்டுக்கு நடிக்கப்போகும் நடிகரின் தனித்தன்மையை உணர்ந்து, அவரின் குரலின் frequency க்கு ஏற்றாற் போல தனது குரலை மாற்றுகிறார். ஒரு காலத்தில் வெள்ளிவிழாப் படங்களாகக் கொடுத்து தமிழ் சினிமாவில் கொடிகட்டிப் பறந்த மோகன் இதற்கு நல்ல உதாரணம்.

அந்த நேரத்தில் மோகனுக்குக் டப்பிங் குரல் கொடுத்தவர் சுரேந்தர். அந்த சுரேந்தரின் குரலாலும் அதற்கேற்றாற்போல எஸ்.பி.பி.யின் பாட்டாலும் அவர் பெரு வெற்றியடைந்தார் என்றால் அது மிகையல்ல.

இவரின் இந்தத்திறமையைப் பற்றி ஒருவருமே , இசைஞானி உட்பட பெரிதாக கிலாகித்து ஒரு போதும் கதைப்பதில்லையே என்ற ஆதங்கமும் வருத்தமும் எனக்குண்டு.

எப்போதாவது, எங்கேயாவது, எஸ்.பி.பியைப் பற்றிய நிகழ்ச்சியோ, பேட்டியோ, நடக்கும்போதும், அல்லது அவரின் இசை நிகழ்ச்சியை நேரில் பார்கும் சந்தர்ப்பம் கிடைத்தபோதும் எல்லோரும் அவரை சிறந்த பாடகர் என்றும், பல்லாயிரம் பாடல்கள் பாடிவிட்டார் என்றும், நான்கு தசாப்தமாக பாடுகிறார் என்றும், கமல் ரஜினிக்கு அதிக பாட்டுப் பாடியவர் என்றும் புகழ்ந்துவிட்டு, அவரின் மயக்கும் குரல் இன்றுவரை காந்தர்வக்குரலாக இருப்பதாக புகழாரம் சூட்டுகின்றனர்.


உண்மையில் இவற்றைப் பார்க்கும் போது அவரின் குரல் இனிமையால் மட்டும் தான் அவர் இவ்வளவு தூரம் வெற்றியடைந்துள்ளார் என்பதே அனேகரின் எண்ணமாக இருப்பதாக நான் எண்ணுகிறேன். ஆனால் ஒவ்வொரு நடிகரின் frequency யில் பாடும் தனித்தன்மை அவரை மற்ற எல்லா பாடகர்களிலும் இருந்து வித்தியாசப் படுத்துகிறது என்பதே மிக முக்கியமானது. அவர் இன்றுவரை இளம் நடிகர்கள் பிரசன்னா, தனுஷுக்கும் பாடி வெற்றியடையக்கூடியதாக இருப்பதற்குக் காரணம் இந்தத் திறமைதான் . ஆனால் எல்லா இடத்திலும் அழவுக்கு மீறிய பவ்வியத்துடன், அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு நிற்கும் எஸ்.பி.பி. யும், தனது வெற்றியின் இரகசியம் இதுதான் என்பதை சொல்லியதில்லை.


அவரின் இந்தத் தனித்தன்மையை முதன் முதல் நான் உணர்ந்தது 1989 இல் வந்த ரஜினியின் மாப்பிள்ளை படத்தில் அவர் ரஜினிக்காகப் பாடிய "வேறு வேலை உனக்கு இல்லையே என்னைக் கொஞ்சம் காதலி" .. என்ற பாட்டாகும். இந்தப் பாட்டை வித்தியாசமாக தினாவெட்டுடன் பாடுவதைப் போல ரஜினிக்கு ஏற்றாற் போல பாடும் அவர் பல்லவியின் இறுதியில் ஹாஹ்..ஹா...ஹாஹா..ஹாஹா என்று ஒரு சிரிப்புச் சிரிப்பார் கேட்டுப் பாருங்கள் ... அதன் பின் சரணத்தின் இறுதியில் ஹ்ம்ம்.. என்று ஒரு ஹம் பண்ணுவார் ..அப்படியே அச்சொட்டாக ரஜினிதான் ஞாபகத்துக்கு வருவார். இந்தப் பாட்டைக் கீழே பகிர்ந்துள்ளேன் கேட்டுப்பாருங்கள் நண்பர்களே

http://www.youtube.com/watch?v=kVMmDtK5drY


அடுத்தது ரஜினிக்கு முற்றிலும் வேறுபாடான இமேஜை, அந்த நாட்களில் கொண்டிருந்த பிரபுவுக்கு ராஜகுமாரனில் பாடிய என்னவென்று சொல்வதம்மா..வஞ்சியவள் பேரழகை... என்ற பாட்டு. இதில் மீனாவிடம் தான் காதலிக்கும் நதியாவைப் பற்றிக் கூனிக்குறுகி வெட்கப்பட்டு என்னென்று சொல்ல..எப்படிச் சொல்ல.. என்கிறார் பிரபு. இதை அவர் தனது சொந்தக்குரலிலேயே நாணிக் கோணிச் சொல்கிறார். இந்த வசனம் முடிந்தும் முடியாததுமாக இசைஞானியின் அற்புதமான இசை தொடங்கிக் கிறங்கடித்து முடிந்ததும் எஸ்.பி.பி என்னவென்று சொல்வதம்மா.. வஞ்சியவள் பேரழகை என்று தொடங்குகிறார். ... பிரபுவின் குரலில் இடம் பெற்று முடிந்த அதே frequency யில் எஸ்.பி.பி.யின் பாடல் தொடங்கும் . இந்தப் பாட்டைக் கீழே பகிர்ந்துள்ளேன் கேட்டுப்பாருங்கள் நண்பர்களே.. ரஜினு பிரபு என்ற இரு வெவ்வேறு திறமை கொண்ட நடிகர்களுக்கு முற்றிலும் வித்தியாசமாகப் பாடியிருப்பதை நீங்கள் உணர்ந்து பூரித்துப் போவீர்கள்.

http://www.youtube.com/watch?v=QoPcvYqmFUc

இது ஒரு கொடை. இது ஒரு Amazing talent. S.P. பாலசுப்ரமணியம் என்கிற ஒருவருக்கே தமிழ் திரையுலகில் இது கிடைக்கப் பெற்றுள்ளது. கிரிக்கெட்டுக்கு ஒருசச்சின்.. இசைக்கு ஒரு இசைஞானி, நடிகர்களின் உருவத்துக்குள் புகுந்து பாடுவதற்கு எஸ்.பி.பி. இவர்களின் இடத்தைப் பிடிக்க இனி ஒருவரும் பிறக்க முடியாது.

No comments:

Post a Comment