Wednesday, 16 January 2013

நந்தினி சேவியர் என்கிற ,எங்கள் தங்க (ர்) மாமா!!





"You will never reach your destination,
if you stop and throw stones at every dog
that barks"
- Winston Churchhill -

முகப்புத்தகத்தின் மூலம் பல தொலைந்த
நண்பர்களை மட்டுமல்ல தொலைந்த சொந்தங்களயும் தேடிப்பிபிடிக்கலாம் என்ற அனுபவம் எனக்கு ஏற்பட்டது. அதற்கு அண்ணன் ரஞ்ச குமாருக்குத்தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும்.

சமீபத்தில் ரஞ்சகுமார் அண்ணனின் பதிவொன்றை மேய்ந்து கொண்டிருந்த போது மனதில் ஒரு பளிச். அவரின் நண்பர்களின் புகைப்படங்களில் ஒன்று, எனக்கு பரிச்சயமானதாகவும் ஆனால் கொஞ்சம் முதிர்ச்சியுடனும் தெரிந்தது. உடனே அவரின் time line ற்குள் நுழைந்து பார்த்தபோது ஆஹா .. இன்ப அதிர்ச்சி அது நந்தினி சேவியர் என்னும் எங்களின் தங்கர் மாமாவேதான். இவர் எனது சிறு வயது ஹீரோக்களில் ஒருவர். உடனே மனம் பின்னோக்கிப் பாய்கிறது..

எனது சிறு பராயக்காலம் இலங்கையின் யுத்தத்துக்கு முந்தியது. இளைஞர்கள் மகிழ்ச்சியுடன் இருந்த காலமது. பெல்பொட்டம், அகலமான பெல்ற், ஹிப்பி தலைமயிர், நெஞ்சின் மேலுள்ள ஒரு பொத்தானை திறந்து தம்காட்டுவது, இரண்டு பக்கமும் கீழிறங்கிய மீசை, வாயில் பிறிஸ்ரல் அல்லது 3 ரோசஸ் சிகறற், இடையிடை பொப்பிசையை விசிலடிப்பது பின்னிரவில் செக்கண்ட் ஷோ படம் பார்த்துவிட்டு நாய்கள் துரத்த சைக்கிலில் ஜாலியாக யாழ் வீதியெல்லாம் வலம் வந்த எனது மற்றய மாமாக்கள், சித்தப்பாக்கள், மச்சான்மார் மத்தியில் தங்கர் மாமா மட்டும் விதிவிலக்கு. பார்ப்பதற்கு பாவி போல் இருப்பார்.
அந்தக்காலத்தின் இள்வட்டங்களை கவர்ந்த எந்த அம்சமும் பாதிக்காத ஒருவராக இருந்தார். இப்ப அவரை நினைக்கும் போது கூட அவரின் அந்தப் பளுப்பு நிற ஷேர்ட்டும், சாம்பல் நிற லோங்ஸ்சும் கறுப்பு பாட்டா செருப்பும் தான் கண்முன் முதலில் வருகிறது.

விடுமுறைக்கும் விஷேஷங்களின் போதும் எனது தந்தையின் வீட்டுக்கு செல்வதென்றால் எனக்கு ஒரே புளுகம். நல்லூரில் இருந்த அந்த வீட்டில் என்னயொத்த வயதினர்களான எனது பெரியப்பா பிள்ளைகள் ஜெனா வின்சன், மச்சான் வசந்தன் பக்கத்துவீட்டு உறவினர்களான ஹென்றி, தவம் மற்றும் ஜெனாவின் நண்பர்கள் எல்லோரும் ஒன்று கூடுவோம் முற்ற‌த்தில் நாங்கள் சிரிப்பும் கும்மாளமுமாக இருக்கும் போது அடுப்படியில் இருந்து ( இப்போ குசினி என்கிறார்கள்) எங்கள் ஆச்சியின் பேர்போன வறுத்த அரிசிமாப்புட்டும் மாசிச்சம்பலும், முரல் அல்லது கருவாட்டு சொதியின் வாசனையும் கிளம்பி வீட்டை நிறைக்கும். முற்றத்தில் சிறுவர்களான எங்களின் நடுவே சிறுவர்களோடு சிறுவனாக தங்கர்மாமா வீற்றிருந்து எம்மிடம் வித்தியாசமான ஆனால் ரசிக்கத்தக்க வகையில் எம்முடன் கதைத்தும் கேள்வி கேட்டுக் கொண்டும் இருப்பார். அவரின் கேள்விகள் சிறுவர்களான எமக்கேற்ற வகையில் ஞாயிற்றுக்கிழமைகளில் நடக்கும் கிறீஸ்தவர்களின் பூசைகளயும், சுவாமிமார்களையும் பற்றியதாயும், கோயிலில் சுவாமிக்கு ஏன் குறிப்பிட்டவர்கள் மட்டும் உதவுகிறார்கள்... போன்றவையும், என்னமாதிரியான புத்தகங்களை வாசிக்கவேண்டும் என்பதும் விளக்கங்களுமாக இருக்கும். இவற்றை சிறுவர்களான நாம் ரசிக்கும்படியாக எம்முடன் கதைப்பதுதான் அவரின் தனித்தன்மை.

எனக்கு இன்றும் நல்ல நினைவிருக்கிற‌து ஒவ்வொரு முறை தங்கர் மாவுடனான எமது சம்பாஷணையை எங்கள் அம்மாக்களில் ஒருவர் வந்து " டேய் தங்கர் நீ கெட்டுக் குட்டிச்சுவரானது போதாதெண்டு ஏன்ரா இவங்களையும் கெடுக்கிறாய் என்று விட்டு எங்களைப் பார்த்து அவனுக்குத்தான் வேலைவெட்டியில்லை சும்மா கூட்டம்,பேச்சு, எண்டு சுத்துறான் நீங்களும் அவனைப்போல வராமல் போங்கோ போய் அங்கால விளையாடுங்கோ என்று அதட்டுவதில் முடியும். ஓம் ஓம் என்று சிரிக்கும் அவர் சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் நல்ல, பெருந்தன்மயான சிந்தனைகளையும் அம்புலிமாமா தொடக்கம் இன்னோரன்ன நல்ல புத்தகங்களை வாசிக்கும் பழக்கத்தை எம்முள் தூண்டவேண்டும் என்பதிலும் மிக முனைப்பாக இருப்பார்.
மிகவும் எளிமையாகவும், ஒருவிதமான பிடிவாதத்துடனும் இருந்த தங்கர் மாமாவுக்கு திருமண வயதாகியும் திருமணம் நடக்கவில்லை. நான் புல ம்பெயரும் வரை அதே உடுப்பு அதே செருப்பு, அதே பிரம்மச்சாரி அதே தங்கர் தான்.

புலம் பெயர்வுக்குப் பிறகு சொந்தங்கள் பந்தங்கள் எல்லாம் திக்குத்திக்காய் திசையெங்கும் சென்றபின் தொடர்புகள் எல்லாம் முற்றாக இல்லாமல் போன கால்கட்டத்தில் எனது தந்தையுடன் தொலைபேசும் வேளைகளில் தங்கரைப் பற்றிக்கேட்பதுண்டு. அப்பா சொல்லுவார் அவன் திருகோணமலயில் இருக்கிறான் எனத் தெரியும் ஆனால் தொடர்பில்லை" எப்படியாவது அவரின் தொடர்பை எடுத்துத்தாருங்கோ என்றுவிட்டு இந்த வேகமான வாழ்க்கையில் நானும் மறந்து விடுவேன் முதுமையோ என்னமோ எனது தந்தையும் மறந்துவிடுவார். இப்படி ஒரு நிலைமயில் தான் முகப்புத்தகம் மூலம் அவரை நந்தினி சேவியராகக் காணப் பெற்று பெருமகிழ்ச்சியடைந்தேன்.

அனறு சொந்தங்களாலும் பந்தங்களாலும் புரிந்துகொள்ளப்படாதவர், இப்போ நந்தினி சேவியராக, இலக்கிய உலகில் எல்லோராலும் அறியப்பட்டவராக பெருவளர்ச்சியடந்துள்ளதைக் காணும் போது பெருமையாக இருக்கிறது. அன்று சிறுவர்களான எமக்கு மார்க்சியர்தின் பாலும் லெனினிசத்தின் மேலும் ஈர்ப்பு ஏற்பட்டு ஒரு காலத்தில் அவற்றை படிக்க தலைப்படவேண்டும் என்பதற்கான உந்துதலை ஏற்படுத்தும் உரையாடல்களாகவே எம்மீதான அவரது கேள்விகள் அமந்திருந்ததை இப்போ உணர்கிறேன். அவரது படைப்புக்களின் தொகுப்பான " நெல்லி மரத்துப் பள்ளிக்கூடம்" என்ற சிறுகதைத் தொகுப்புக்கு இலங்கையின் பேர்பெற்ற பதிப்பகமான கொடகே பதிப்பகம் எனது இன்னுமொரு மாமனான கே. டானியலின் பெயரால் விருது வழங்கிக் கௌரவித்ததில் இரட்டிப்பு மகிழ்ச்சி எனக்கு.

அவருக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாக அவரது சிறுகதைளைப் பற்றியும், அவரைப் பற்றியுமான ஒரு பாடம், இலங்கைப் பாடப்புத்தகம் ஒன்றில் உள்ளதாகக் கேள்வியுற்ற போது, சிறுவர்களாக இருந்த எமக்கு அவர் சொல்லவந்த நல்லவைகளை இனிமேல் எந்தத்தடையுமின்றி இலட்சக்கணக்கான மாணவர்களுக்கு அவர் சொல்லப்போவதை நினைத்து பெருமைப் படுகிறேன்.
தங்கர்மாமா, வாழ்க்கையில் எவ்வளவோ வேதனைகளையும் சோதனைகளயும் சந்தித்துள்ளார். பெரிய இழப்புக்கள் அவருக்கு ஏற்பட்டுள்ளதை அறிந்து வேதனைப்படுகிறேன். இவை எவையும் அவரை தளரச் செய்ய முடியாது. ஏனென்றால் எழுத்துக்கு மட்டுமல்ல, அவர் உண்மையாகவே மார்க்சியவாதியாக வாழ்பவர். இதை அந்நாட்களில் கண்கூடாகக் கண்டவன் நான்.ஒரு சிறந்த படைப்பாளி எவ்வளவு சோதனைகள் ஏற்பட்டாலும், எவ்வளவு தடைகள் ஏற்பட்டாலும், அவையெல்லாவற்றையும் தாண்டி வெளிவருவான் என்பதற்கு , இரத்த சொந்தங்களாலேயே ஒரு காலத்தில்
அங்கீகரிக்கப்படாத தங்கர் என்கிற நந்தினி சேவியரின் வாழ்க்கையும் வெற்றியும் நல்லதோர் எடுத்துக்காட்டு.வாழ்க தங்கர் மாமா. Congrats and All the best

2 comments:

  1. உங்கள் தங்க(ர்) மாமா உண்மையிலேயே இனிமையான மனிதர். நான் பழகிய மனிதர்களுள் மிகவும் நேர்மையானவர். அவரை நீங்கள் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் என்னிடம் தொலைபேசி இலக்கம் உள்ளது தருகின்றேன்.

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பரே... முகநூலின் ஊடாக அவருடனான தொடர்பு கிடைத்துள்ளது. ஏறக்குறைய 25 வருடங்களின் பின் சமீபத்தில் அவருடன் தொடர்பு கொண்டேன். அவரை விரைவில் நேரே சந்திக்க ஆவல். அடுத்ததடவை தாயகம் செல்லும் போது எப்படியும் திருமலைக்கு சென்று சந்திக்கவேண்டுமென்று ஆசையாக உள்ளது. பார்ப்போம்.

      Delete